அரசுப் பள்ளி நடத்த புதிய வீட்டை வழங்கிய பூ வியாபாரி!



சேவை

நாம் படித்த பள்ளிக்கு நம்மால் முடிந்த எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தாலும், அதற்கான வாய்ப்புகள் அமையப்பெறுவதில்லை.
அரசுப் பள்ளி படித்த நம்மில் சிலர் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவரும் நிலையில், ரூ.10 லட்சம் செலவில் கட்டிய புதிய வீட்டை பள்ளிக்கு வழங்கியுள்ளார் பூ வியாபாரி தியாகராஜன். வாழ்த்துகள் குவிந்தவண்ணம் இருந்த நிலையில் நெகிழ்ச்சியோடு அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட கருத்துகளைப்  பார்ப்போம்…

‘‘திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள நொச்சிவயல் புதூர் கிராமம் தான் எனது சொந்த ஊர். நான் அருகே உள்ள திருவெறும்பூரில் பூக்கடை நடத்திவருகிறேன். சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அதற்காக பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் 10 லட்சத்தைக் கொண்டு நொச்சிவயல் புதூரில் வீடு கட்டினேன். கிரகப்பிரவேசம் செய்து ஒரு நல்ல நாளில் வீட்டுக்கு குடிபோகலாம் என நினைத்திருந்தேன்.

இந்த நிலையில் எங்கள் ஊரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டடம் மிகவும் சேதமடைந்து இடிந்துவிழும் நிலையில் இருந்ததால் புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அரசு நிதி ஒதுக்கி கட்டடப் பணியும் நடந்துவருகிறது. கட்டடப் பணி முடியும் வரை பள்ளியை எங்கு நடத்துவது என்ற கேள்வி எழுந்த நிலையில், எனது நண்பர் முருகானந்தம் தனது வீட்டின் மாடியைக் கொடுத்துள்ளார். ஆனால், வெயில், மழை போன்ற நேரங்களில் மாணவர்களால் சிரமத்தைத் தாங்க முடியவில்லை.

இதனால் பள்ளியை 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேறு ஊருக்குத்தான் மாற்றவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அதனால் பள்ளி தலைமையாசிரியை லதா மகேஸ்வரி என்னிடம் வந்து ‘புதிதாக கட்டிய வீட்டை பள்ளிக் கட்டடம் கட்டி முடிக்கும் வரை தற்காலிகமாக சிறிது காலம் பள்ளி நடத்த தரமுடியுமா? வாடகை தந்துவிடுகிறோம்’ எனக் கேட்டார்.

எங்கள் ஊர் அரசுப் பள்ளியில்தான் நானும் படித்தேன். அந்த நினைவுகள் என் மனதில் வந்துபோனது. எனது ஊரைச் சேர்ந்த 17 சின்னஞ்சிறு குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயம் என்பதால் எனது மனைவி கலைவாணி, எனது மகன்கள் கிருபாகரன், மவுலீஸ்வரன் ஆகியோருடன் கலந்துபேசி, பள்ளி நடத்த வாடகை வேண்டாம் இலவசமாக நடத்திக்கொள்ளுங்கள் என்றேன். அதன்படி 2018ம் ஆண்டு அக்டோபர் முதல் எனது புதிய வீட்டில்தான் பள்ளி நடந்துவருகிறது. இதுவரை அந்த வீட்டின் மின்சாரப் பயன்பாட்டுக்கான கட்டணத்தையும்  நானே செலுத்தி வருகிறேன்.

இது தற்காலிகமான உதவிதான் என்றாலும் மாணவர்களின் கல்வி தடை படாமல், வெகு தூரம் சென்று கஷ்டப்படாமல் பள்ளிக்கு வந்துசெல்வது எனக்கு ஒரு மனதிருப்தி அளிக்கிறது’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார் தியாகராஜன்.  

தெரு ஓரத்தில் கார் நிறுத்தவும், சைக்கிள் நிறுத்தவுமே கட்டணம் வசூலிக்கும் காலத்தில் பள்ளி நடத்த தன் புதிய வீட்டை இலவசமாகக் கொடுத்துவிட்டு, ‘‘நான் பெரிதாக ஒன்றும் செய்ததாக நினைக்கவில்லை. என்னால் முடிந்த உதவியைத்தான் செய்திருக்கிறேன். எனது செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

மக்கள் சக்தி என்ற இயக்கம் விழா நடத்தி பாராட்டியது மகிழ்ச்சியைத் தந்தது. இன்னும் சில மாதங்களில், புதிய கட்டடம் தயாராகிவிடும். அதுவரை காத்திருந்து, புதிய வீட்டில் குடியேற முடிவு செய்துள்ளேன்’’ என்று எந்தவித சலனமுமில்லாமல் சொல்கிறார் பூ வியாபாரி தியாகராஜன். இவரின் நல்ல உள்ளம் நிச்சயம் பாராட்டுதலுக்குரியது.

- தோ.திருத்துவராஜ்