குடிகாரன் யூசுப் நடத்தும் போதை மறுவாழ்வு மையம்!



நிஜம்

செல்போனில் அழைத்தால் மறுமுனையில், ‘வணக்கம்! நான் குடிகாரன் யூசுப் பேசுறேன்...’ என்று  அதிர வைக்கிறார் யூசுப். மொடாக் குடிகாரராக இருந்தவர், இன்றைக்கு தன்னைப் போல பாதிக்கப்பட்டவர் களுக்காக மறுவாழ்வு மையம் நிறுவி வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார்!

சென்னை, மதுரவாயல் கிருஷ்ணாநகரில் இருக்கிறது அவருடைய ‘எம்.எஸ். குடி/ போதை மறுவாழ்வு மையம். இதுபோன்ற மையங்கள் நடத்தும் கவுன்சலிங்கால் (alcoholic anonymous program) ஒருவரின் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியுமா? முடியும் என்பதற்கு யூசுப் ஓர் வாழும் உதாரணம். துளி கூட தடுமாற்றமில்லாமல் பேசுகிறார்... அவர் வாழ்க்கையில் அனுபவித்த வலியும் உண்மையும் ஒவ்வொரு வார்த்தையிலும் பிரதிபலிக்கின்றன.

‘‘என்னை அறிமுகப்படுத்திக்கும் போதே குடிகாரன்னு சொல்றேன்...  அதுல பெருமைப்படுறேன். ஏன்னா, நான் குடிக்கறதில்லை. அதை விட்டு 13 வருஷமாகுது. குடிச்சுட்டு இருந்தப்போ, ‘நான் குடிகாரன் இல்லை’ன்னு சொல்லிகிட்டு இருந்தேன். இப்போ விட்டுட்டேன்... ‘நான் குடிகாரன்’னு சொல்றேன். இந்த ‘ஆல்கஹாலிக் அனானிமஸ்’ புரோகிராமுக்கு வர்றதுக்கு முன்னாடி மோசமான வாழ்க்கை வாழ்ந்தேன்.

கிருஷ்ணாம்பேட்டைதான் நான் பொறந்து வளர்ந்த இடம். அக்கா, தங்கச்சிங்க இருக்காங்க. 5 பேரு அண்ணன், தம்பிங்க... நான்தான் கடைசி. நிம்மதியான தூக்கம் இல்லை. எந்
நேரமும் எந்த இடத்துல இருந்தாலும் இடுப்புல ஒரு கத்தியை வச்சுகிட்டு இருப்பேன்... நான் குடிச்சது என் அப்பாவோ, அம்மாவோ,அண்ணனோ, தம்பியோ சம்பாதிச்ச துட்டுல கிடையாது. யாரு கண்ணுல படுறாங்களோ கேப்பேன்... குடுத்துடணும். ஐஸ் வண்டி தள்றவன்ல இருந்து நாடார்கடை வரைக்கும் காசு கேப்பேன்... குடுக்க லைன்னா அடிச்சுப் பிடுங்குவேன்.

நிம்மதியா குடிச்சேன்னும் கிடையாது. அரைமணி நேரம் ஒரு இடத்துல உக்காந்து குடிச்சேன்னா, தேடிக்கிட்டு போலீஸ் ஸ்டேஷன்லருந்து வந்துடுவாங்க. சென்னைல நிறைய போலீஸ் ஸ்டேஷன்ல என் மேல கேஸ் இருந்தது. தமிழ்நாட்ல நான் பாக்காத ஜெயிலே இல்லை. இன்னிக்கும் ஸ்டேஷன்கள்ல அந்த ரிக்கார்ட்ஸ் இருக்கு. 6 மாசம் வீட்ல இருப்பேன்... 6 மாசம் ஜெயில்ல இருப்பேன். எதுக்கு இந்த மாதிரி ஒரு குற்றவாளியா ஆனேன்? குடிதான் காரணம்!

குடிக்கறதுக்காக எதை இழந்தாலும் பரவால்லைங்கற நிலைமைல இருந்தேன். அப்பா, அம்மா, அண்ணன், அக்கா யார் சொன் னாலும் கேக்க மாட்டேன். ஒரே லிமிட்ல இருந்த போலீஸ் ஸ்டேஷன்ல என் மேல 7 குண்டாஸ் போட்டாங்க. இந்த மாதிரி யாருக்கும் நடந்திருக்காதுன்னு நினைக்கிறேன். குடியால ஒரு கையை இழந்திருக்கேன்... மூணு வீட்டை வித்திருக்கேன்... அப்பா, அம்மாவை, பெரிய அண்ணனைப் பறிகுடுத்திருக்கேன். எப்போப் பாத்தாலும் அடிதடி, ஓட்டம்...

போலீஸ் தேடி வந்தா வீட்ல இருக்குற பொம்பளைங்களை, அண்ணன், தம்பியை எல்லாம் போட்டு அடிப்பாங்க. குடிச்சா மிருகமாகிடுவேன். அப்படி ஒரு வெறித்தனமான குடி. வாழ்க்கையையே சின்னாபின்னமாக்கிட்டு சுத்திகிட்டு இருந்தேன்.  ஜெயில்ல இருந்து வெளியே வந்தா ‘வா’ன்னு சொல்றதுக்கோ, சாப்பாடு போடுறதுக்கோ ஆள் இருக்காது. ஏதாவது ஒரு வீட்டு மொட்டை மாடியில படுத்துக் கெடப்பேன். யாராவது வாங்கிக் குடுத்தா சாப்பிடுவேன், குடிப்பேன். வாய்தா வாய்தான்னு எல்லா கோர்ட்டுக்கும் போய்கிட்டும் வந்துகிட்டும் இருந்தேன்.

ஒரு நாள் குடியில ரெண்டு, மூணு பேரை போட்டு அடிச்சுட்டேன். நல்லா போதைல எனக்கு தெரியல. அடுத்த நாள் ராத்திரி 7 பேரு கொண்ட கும்பல் என்னை ஒரு ரூம்ல போட்டு, தலைல இருந்து காலு வரைக்கும் வெட்டுறாங்க. முடிஞ்ச அளவுக்கு வெட்டிட்டு செத்துட்டேன்னு நினைச்சு விட்டுட்டுப் போயிட்டாங்க.

வீட்ல இருந்தவங்க என்னை ஸ்டான்லி ஹாஸ்பிட்டல்ல சேர்த்தாங்க. போலீஸ் வந்து விசாரிக்குது... என்கூட சுத்திகிட்டு இருந்தவங்க யாரும் கடைசி நேரத்துல வரலை. அப்பா, அம்மா, அக்கா, தங்கச்சிங்க, அண் ணன், தம்பிங்கதான் வட்டிக்கும் தண்டலுக்கும் பணம் வாங்கி வைத்தியம் பார்த்தாங்க. ‘ஒரு கை போனா போகட்டும்... இனிமேயாவது திருந்தி நல்லா இரு’ன்னு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க.

அப்படியும் நான் திருந்தலை. மதுவை விடறதுக்கு பதிலா சாவறதுக்கு தயாரா இருந் தேன். மூளைலருந்து முழங்கால் வரைக்கும் குடி சிந்தனைதான். போலீஸ் உயர் அதிகாரி ஒருத்தர் மாற்றலாகி இங்கே வந்தாரு. உள்ளூர் குற்றவாளிகளையெல்லாம் கூப்பிட்டு விசாரிச்சாரு. ‘வாழுறதுக்கு ஏதாவது வழி பண்ணிக் குடுத்தா பொழச்சிப்பியா’ன்னு கேட்டாரு. அவரு கால்ல விழுந்துட்டேன். ‘அப்புறம் கூப்பிடுறேன்’னு அனுப்பி வச்சுட்டாரு.

தங்கச்சி, அண்ணன், அக்கான்னு யாரு வீட்லயாவது சாப்பிடுறது, குடிக்கிறதுன்னு வாழ்க்கை போய்கிட்டு இருந்துச்சு. ஜெயில்ல இருந்தப்போ சக கைதி ஒருத்தர் அவங்க அக்கா பொண்ணைப் பத்தி சொன்னதை வீட்ல சொன்னேன். அந்தப் பொண்ணு கையில்லாத ஒருத்தனைக்கூட கல்யாணம் பண்ணிக்க தயாரா இருந்தது.

அந்த அளவுக்கு வறுமை. சிந்தாதிரிப்பேட் டைக்கு பொண்ணு பாக்க போனோம். ‘ஏம்மா நீ நல்லா இருக்கே... இவருக்கு ஒரு கை கிடையாது. கல்யாணம் பண்ணிப்பியா’ன்னு எங்க வீட்ல கேட்கறாங்க. ‘கல்யாணத்துக்கு அப்புறம் கை போயிடுச்சுன்னா என்ன பண்றது? கல்யாணம் பண்ணிக்கிறேன்’னு சொல்லிச்சு. கல்யாணம் முடிஞ்சுது.

என் மனைவி பேரு ஜெயந்தி. கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு அப்புறம் எந்த வேலைக்கும் போக முடியலை... கிடைக்கலை. மனைவிவந்ததுக்கப்புறம் இன்னும் நரகமாயிடுச்சு வாழ்க்கை. அவளுக்கு இருக்கறதா, தூக்கு மாட்டிகிட்டு சாகறதான்னு ஆகிப் போச்சு. ‘ஒரு பிச்சைக்காரனை கல்யாணம் பண்ணிகிட்டு இருந்தாக் கூட நல்லா இருந்திருப்பேன். உன்னையும் போட்டு அடிக்கிது போலீஸு...

என்னையும் அடிக்கிது’ன்னு அழுவா. அவ போட்டிருந்த நகை எல்லாத்தையும் வித்துக் குடிச்சேன். நான் உயிரோடதான் இருந்தேன். அவ விதவை மாதிரி ஆயிட்டா. குடிச்சு குடிச்சு நான் சந்தோஷமா இருந்தேன். என்னை பாத்து பாத்து அவ குடிகாரி மாதிரி ஆயிட்டா. பசி, பட்டினி... போலீஸும் ரவுடிப் பசங்களும் மாறி மாறி தேடுறாங்க. எங்கேயும் போய் ரெண்டு நாளு சேர்ந்த மாதிரி தங்க முடியாது. அவளையும் எல்லா எடத்துக்கும் கூட்டிகிட்டு போகணும். காலைல கிருஷ்ணாம்பேட்டைல கிளம்பி ராத்திரி மதுராந்தகத்துல போய் இறங்குவோம்.

பஸ் ஸ்டாண்டுலயே படுத்து இருந்துட்டு, அடுத்த நாள் கிளம்பி வீட்டுக்கு வருவோம். நேரா வீட்டுக்குப் போக முடியாது. எங்கெங்கேயோ சுத்திகிட்டு தங்கச்சி வீட்டுக்குப் போவோம். தங்கச்சி சாப்பாடு போட்டு, இருநூறோ, முந்நூறோ குடுக்கும். அதை வாங்கிக்கிட்டு வேற எங்கேயாவது ஓடுவோம். கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறமும் ஜெயில் வாழ்க்கை தொடர்ந்தது.

ஒரு வருஷம் கடலூர் ஜெயில்ல இருந்துட்டு திரும்பி வந்தேன். மனைவிகிட்ட ‘இனிமே ரெண்டு பேரும் சேர்ந்து வாழுறது கஷ்டம்.

நீ உங்கம்மா வீட்டுக்கே போயிடு’ன்னுசொன்னேன். ஒரு பக்கம் அவ என்னை குடிக்க விட மாட்டேன்கிறா. இன்னொரு பக்கம் அவளுக்கு என்னால சோறு போட முடியலை. அவ காலைப் புடிச்சுகிட்டு அழுதா.

‘ரெண்டு பேரும் சேர்ந்து சாவலாம். இல்லை சேர்ந்து வாழலாம்’கிறா. ஜெயில்ல இருந்து வந்து மூணு நாள்லயே திரும்ப குடிக்க ஆரம்பிச்சுட்டேன். ஒரு கட்டத்துல குடிக்கவும் முடியலை... குடிக்காம இருக்கவும் முடியலை. மூஞ்சி, வயிறெல்லாம் வீங்கி, கண்ணு பூத்துப் போச்சு. செயலிழந்து போயிட்டேன். எது சாப்பிட்டாலும் உடனே வாந்தி வந்துடும். எல்லாரும் நான் செத்துப் போயிடுவேன்னே முடிவு பண்ணிட்டாங்க.

திருவல்லிக்கேணி கல்யாணி ஹாஸ்பிட்டல்ல சேர்த்தாங்க. நான் டாக்டர்கிட்ட ‘அய்யா சிகிச்சை குடுங்க... அப்பிடியே இளநீர் வாங்கியாரச் சொல்றேன். அதுல ஒரு குவார்ட்டரை ஊத்திக் குடுக்கச் சொல்லுங்கய்யா’ன்னேன். அவர், ‘ஏம்மா! இவனை கல்யாணம்பண்ணிகிட்டு எப்பிடிம்மா வாழறே’ன்னு என் மனைவியை திட்டிட்டுப் போனாரு. என் மனைவி தாலியை வித்துதான் சிகிச்சை பார்த்தா.ஆஸ்பத்திரிக்கு பணம் கட்ட முடியலை. அப்போதான் ஒரு பாய் மறுவாழ்வு மையம் பத்தி சொன்னார்.

அண்ணணும் அந்த பாயும் என்னை ரெட் ஹில்ஸ்ல இருக்கும் மறுவாழ்வு மையத்துல சேர்த்தாங்க. 48 நாள் சிகிச்சை முடிஞ்சுது. அங்கே ஏமாத்தாம, மத்தவங்களை அடிச்சிப் பிடுங்காம, உழைச்சு, நேர்மையா சம்பாதிக்கவும் வாழவும் கத்துக் கொடுத்தாங்க. கிருஷ்ணாம்பேட்டைக்கே திரும்பினேன். நிறைய கிண்டல், கேலி... எவ்வளவோ பிரச்னை களை சந்திச்சேன். ஆனா,  குடிக்கலை. எனக்கு உதவறதா சொன்ன உயர் அதிகாரி பீடா கடையும் 15 சைக்கிளும் சொந்த ஜாமீன்ல வாங்கிக் குடுத்தாரு. 5 மணியாச்சுன்னா கடையை மூடிடுவேன்.

5:50க்கெல்லாம் மீட்டிங்குக்கு (மறுவாழ்வு மையம்) போயிடுவேன். ஒரு வருஷம் இப்படியே போச்சு. எனக்கு வாழ்க்கை குடுத்த அதிகாரிகிட்ட போய்சொன்னேன்... ‘ஐயா நான் குடியை விட்டு 1 வருஷம் ஆகப் போகுது.

என்னை ஆசீர்வாதம் பண்ணணும்.’ அவ்வளவுதான்... சிந்தாதிரிப்பேட்டைல எனக்கு ஒரு பாராட்டு விழாவே வச்சிட்டாங்க. அப்போ கமிஷனரா இருந்த நட்ராஜ் அய்யாகிட்ட மெடல் வாங்கினேன். அதுக்கப்புறம் நான் இருந்த ஆஸ்பத்திரியிலேயே சர்வீஸ் பண்ண ஆரம்பிச்சேன். அங்கே ஒரு சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர் அறிமுகமானார்.

 ‘நீயே ஒரு மறுவாழ்வு மையத்தை நடத்தலாமே’ன்னு சொன்னார். முதல்ல கொட்டிவாக்கத்துல ‘எம்.எஸ். குடி/போதை மறுவாழ்வு மையம்’ ஆரம்பிச்சேன். ஒரு வேன் எடுத்துட்டு  ரோட்ல குடிச்சிட்டு விழுந்து கெடக்கறவங்களைதூக்கிட்டு வந்து கிளாஸ் எடுப்பேன். கொஞ்சம் கொஞ்சமா மையம் வளர ஆரம்பிச்சுது. போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து கூப்பிடுவாங்க. ‘உன்னை மாதிரி இவனையும் திருத்து’ன்னு சிலரை அனுப்பினாங்க. போலீஸ் என்னை ஊக்கப்படுத்தி ஆதரவு குடுத்தாங்க.

‘நல்லது செய், நல்லதை நினை, நல்லதே நடக்கும்’பாங்க. எனக்கு நிறைய பேரோட ஆசீர்வாதம் கிடைச்சுது. 9 வருசம் குழந்தையே இல்லாம இருந்த எங்களுக்கு குழந்தை பிறந்தது. முதல் குழந்தை கீர்த்தனா. அப்புறம் பரணின்னு ஒரு பையன் பொறந்தான். என் மனைவி இப்போ 9 மாச கர்ப்பவதி. எனக்கு நம்பிக்கை குடுத்தது ‘ஆல்கஹாலிக் அனானிமஸ்’ புரோகிராம்தான். நான் கடவுள் கிடையாது.

மனுஷன். ஆனா, நல்ல மனுஷனா வாழறதுக்கு முயற்சிக்கிறேன். இன்னிக்கி மறுவாழ்வு மையம், அதை விட்டா வீடுன்னு வாழறேன். அமைதியான வாழ்க்கை, நல்ல மனைவி, குழந்தைகள்... இதை தக்க வச்சுக்கணும்னா நான் குடிக்காம இருக்கணும்... அது எனக்கு நல்லா தெரியும்’’ - சிரித்தபடி சொல்கிறார் யூசுப்.

இவரின் மறுவாழ்வு மையத்துக்கு வாரத்தில் 3 நாட்கள் ஒரு பொது மருத்துவர் வருகிறார். நோயாளியைப் பரிசோதித்து சிகிச்சைதருகிறார். ஒரு மனநல மருத்துவரும் வந்து ஆலோசனை வழங்குகிறார். சைக்காலஜி படித்த செவிலியரும் இருக்கிறார்கள். பக்க விளைவுகள் ஏற்படும் என்பதால் இந்த மையத்தில் குடிப்பழக்கத்தைப் போக்க மருந்து, மாத்திரைகள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. கவுன்சலிங் கொடுத்துப் பேசியே திருத்தப் பார்க்கிறார்கள்.

குடியை நிறுத்த பாதிக்கப்பட்டவரின் ஒத்துழைப்பும் மனமாற்றமும் அவசியம் என்பதை வலியுறுத்துகிறார்கள். கட்டணம் பற்றிக் கேட்டால், ‘‘இருக்கறவங்ககிட்ட வாங்கறேன்... இல்லாதவங்களை அரவணைச்சுக்கறேன்’’ என்கிறார் யூசுப். இப்படிச் சொன்னாலும் இங்கே வந்து சிகிச்சை பெற்று குடி/போதை பிரச்னையில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை நம்மை மலைக்க வைக்கிறது... 6 ஆயிரம் பேர்!

இங்கே வந்து சிகிச்சை பெற்று குடி/போதை பிரச்னையில் இருந்து மீண்டவர்கள் 6 ஆயிரம் பேர்!

- மேகலா
படங்கள்: ஆர்.கோபால்