கட்டு போடலாமா?



விவாதம்

எலும்பு முறிவு அல்லது சுளுக்கு போன்றவற்றுக்கு கட்டு போடுவது என்ற வழக்கம் நீண்ட நாட்களாகவே மாற்று மருத்துவத்தில் தொடர்ந்து வருகிறது. இந்த கட்டுப்போடும் சிகிச்சை முறை எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்றும், ஆங்கில மருத்துவம் இதனை ஏற்றுக் கொள்கிறதா என்பது பற்றியும் இரண்டு தரப்பிலும் பேசினோம்...

மூட்டு விலகல், எலும்பு முறிவு போன்றவற்றுக்கு இயற்கை முறையில் சிகிச்சை செய்துகொண்டால் கிடைக்கிற அனுகூலங்கள் பற்றி ஆயுர்வேத மருத்துவர் அசோக்குமார் பேசுகிறார்...‘‘பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம்முடைய ஆயுர்வேத மருத்துவத்தில் எலும்பு முறிவு, எலும்பு பிறழ்வு மற்றும் கட்டு போடுதல் பற்றி விளக்கமாகச் சொல்லி இருக்கிறார்கள்.

அதாவது 15 வகையான முறிவுகள், 6 வகையான பிறழ்வுகள் மற்றும் இவற்றை குணப்படுத்துவதற்கு உதவும் 24 கட்டு போடும் முறைகள் ஆகியவற்றை பற்றி விரிவாகக் கூறி இருக்கிறார்கள்.

ஆயுர்வேதத்தில் எல்லாவிதமான எலும்பு பிரச்னைகளை சரி பண்ணுவதற்கென்றே கந்த தைலம் என்ற மருந்து இருக்கிறது. இந்த தைலத்தை பாலில் 5 முதல் 10 சொட்டுகள் வரை கலந்து சாப்பிடுவதற்கு முன்னால் தினமும் 2 வேளை சாப்பிட்டு வர, நல்ல பலன் கிடைக்கும்.

எலும்பு முறிவு காரணமாக உண்டான காயம் சீக்கிரமாக குணம் அடைந்து, எலும்பு விரைவில் சேர்வதற்குப் பிரண்டை, கொம்பு அரக்கு, மருதம்பட்டை ஆகியவை கலந்து செய்யப்பட்ட மாத்திரை மிகவும் உதவும்.

இது தவிர முறிவு எண்ணெய் என்ற ஒரு வகையான மருத்துவ குணம் நிறைந்த எண்ணெயும் காயத்தை ஆற்றுவதற்கும், எலும்புகள் சேர்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் எலும்பு முறிவு உட்பட பலவிதமான சிக்கல்களுக்கு பிரண்டை துவையல் தரப்படுகிறது. இதனால் பக்கவிளைவுகள் ஏற்படாது. ஆனால், கட்டுப்போடுவதை முறையாக செய்யாவிட்டால், உடைந்த எலும்புகள் ஒழுங்காக சேராமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது.

அதேநேரத்தில் பல துண்டுகளாக எலும்பு உடைதல், அதற்கு ஏற்றவாறு ப்ளேட் பொருத்துதல், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் முறிவு போன்றவற்றை குணப்படுத்த ஆங்கில மருத்துவம்தான் சிறந்தது. அதேவேளையில், அதில் தரப்படுகிற கால்சியம் மாத்திரைகள், வலி நிவாரண மருந்துகளால் பக்க விளைவுகள் நிறைய ஏற்பட வாய்ப்புகள் உள்ளன’’ என்கிறார்.

எலும்பு முறிவு சிகிச்சை நிபுணரான மருத்துவர் கிருஷ்ணமூர்த்தியிடம் இதுபற்றி கேட்டோம்...‘‘அலோபதி மருத்துவ முறையிலும் மாவுகட்டு போடப்படுவது வழக்கம். நம்முடைய கை, கால்கள் மற்றும் தொடை எலும்புகளில் ஏற்படுகிற முறிவு, உடைந்து போதல் என அனைத்துவிதமான பாதிப்புக்களுக்கு மட்டுமல்லாமல் இரண்டாக உடைந்த எலும்புகளை ப்ளேட் பொருத்தி சரி செய்யும் சிகிச்சை முறையும்
நடைமுறையில் இருந்து வருகிறது.

அலோபதி மருத்துவத்தில், எலும்பு தொடர்பான பாதிப்புகளுக்கு சிகிச்சை மேற்கொள்வதால், பலவிதமான பயன்கள் கிடைக்கின்றன. முதலில், இச்சிகிச்சை முறையில் கை மற்றும் கால்கள் இணைப்புகளை இயக்கும் வகையில் கட்டு போடப்படும். எலும்புகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சேர்கின்றனவா என்பதை அடிக்கடி எக்ஸ் - ரே எடுத்து பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

இதனால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். முக்கியமாக, விரைவில் குணம் அடைந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பலாம். உதாரணத்துக்கு, கைகளில் எலும்பு முறிவு என்றால், ஏறக்குறைய 6 வாரங்களிலும், கால்களில் இப்பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் 8 வாரங்களிலும் குணப்படுத்தலாம்.மாற்று மருத்துவங்களில் இத்தகைய பிரச்னைகளுக்குப் பச்சிலைகளைக் கொண்டு கட்டு போடப்படுகிறது.

அதனை நான் விமர்சிக்க விரும்பவில்லை. இரண்டு சிகிச்சை முறைகளில், எது தங்களுக்கு ஏற்றது என்பதை பாதிக்கப்பட்டவர்களும், அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களும் முடிவு செய்ய வேண்டும். ஆனால், மாற்று மருத்துவ முறையின் மூலம் கட்டுப்போட விரும்பு கிறவர்களுக்கு சில ஆலோசனைகளை சொல்ல விரும்புகிறேன்.

எலும்பு முறிவு மற்றும் எலும்பு இரண்டாக உடைந்து போன இடங்களில் ரணம் ஏதேனும் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், ரணம் ஆறாத நிலையில் எந்த காரணத்துக்காகவும் கட்டு போடக்கூடாது.

மேலும், முறிந்த, உடைந்த எலும்புகளைச் சரி செய்வதற்காக, இறுக்கமாக கட்டு போடக்கூடாது. இவ்வாறு செய்வதால், ரத்த ஓட்டம் தடைபடும். வீக்கம் அதிகமாகும். தோல் மரத்துப்போகும். காயங்கள் குணம் ஆகாத நிலையில், கட்டு போடுவதால், செப்டிக் ஆகி, கை, கால் போன்ற உறுப்புக்களை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன’’ என்கிறார்.

- விஜயகுமார்

படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்