சாம்பார் என்பது சைட் டிஷ் மட்டுமே அல்ல!



கவர் ஸ்டோரி

‘வெரைட்டி ரைஸில் இருக்கும் முக்கியப் பிரச்னை, அதில் சாம்பாரை இழக்கிறோம்’ என்பதுதான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள். சாம்பார் என்பது வெறுமனே சுவையான சைட் டிஷ் மட்டுமே அல்ல.

சத்துக்கள் நிறைந்த ஒரு மூலிகை குழம்பு என்றும்
கூறியிருக்கிறார்கள். சாம்பாரில் சேர்க்கப்படும் பொருட்களின் முக்கியத்துவம் என்ன? சாம்பாரில் அப்படி என்ன மகத்துவம் இருக்கிறது என்று ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகனிடம் கேட்டோம்...

‘‘சாம்பாரில் துவரம்பருப்பு அல்லது பாசி பருப்புடன் சின்ன வெங்காயம், தக்காளி, கடுகு, உளுந்தம் பருப்பு, கறி மஞ்சள் பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லிக் கீரை, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு போன்றவற்றுடன் கத்தரிக்காய், முருங்கைக்காய், கேரட், முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், தடியங்காய், வெண்டைக்காய் என்று அவரவர்க்கு விருப்பமான காய்கறிகள் சேர்த்து தயார் செய்யும் பழக்கம் நம்மிடையே உள்ளது.

சிலர் இவற்றோடு பூண்டு, வெந்தயம் சேர்த்தும் தயார் செய்வதுண்டு. சாம்பாரில் சேர்க்கப்படும் இதுபோன்ற பொருட்கள், உடலில் ஏற்படும் பல விதமான நோய்களுக்கு நிவாரணியாக உள்ளது. இப்படி சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருட்களுக்கும் பல்வேறு மருத்துவ சிறப்புகள் உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டாலே சாம்பாரின் பெருமை புரிந்துவிடும்’’ என்கிறார் பாலமுருகன்.

துவரம் பருப்பு

உடலுக்குத் தேவையான புரதச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் இதில் உள்ளது. இதில் கொழுப்புச்சத்து இல்லை என்பதால் இதய நோயாளிக்கு உகந்த தானியம் என்று ஆயுர்வேத மருத்துவம் சொல்கிறது.

பாசிப்பருப்பு

இது தானிய வகைகளில் மிகவும் சிறந்தது. இது வயிற்றுப்புண், கண்நோய் போன்றவற்றுக்கு உகந்தது. குறைந்த அளவு உப்புச் சத்துக்களை உடையது என்பதால் ரத்தக் கொதிப்பு நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. இது Low க்ளைசமிக் இண்டெக்ஸ் உடைய தானியம் என்பதால் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.

மஞ்சள் பொடி

நமது குடல் உறுப்புகளில் எந்த நோயும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பதோடு, கிருமித் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது. குறிப்பாக, புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் அதிகக்கொழுப்பு மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, கல்லீரல் நன்றாக செயல்படவும் உதவுகிறது.

சின்ன வெங்காயம்

‘வெங்காயம் உண்டால் தன்காயம் பழுதில்லை’ என்பார்கள். அதாவது வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் நமது உடல் செல்கள் சீராக வேலை செய்யும் என்பதால் நமது காயமான உடல் பழுதடையாமல் இருக்க பெரிதும் உதவுகிறது.

தக்காளி

இதன் மூலம் ரத்தத்தில் வைட்டமின் B, B12 போன்ற சத்துக்கள் அதிகரிக்கிறது. மேலும் இது ரத்தம் சுத்தமடைய உதவுகிறது.

கடுகு

குடலில் கிருமி தொற்று, அலர்ஜி போன்றவை ஏற்படாமல் தடுக்க கடுகு உதவுகிறது.

கறிவேப்பிலை, கொத்தமல்லி

இவையிரண்டும் கல்லீரல் நன்றாக செயல்படவும், செரிமானம் நன்றாக நடைபெறவும் உதவுகிறது. மேலும் இவை உணவின் சுவை மற்றும் மணத்தை
அதிகரிக்கச் செய்கிறது.

மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி

இவையிரண்டும் குடல் உறுப்புகளில் உள்ள சுரப்பிகளைத் தூண்டி, என்சைம்களை சுரக்கச் செய்து, எவ்வளவு கடினமான உணவாக இருந்தாலும், அவற்றை செரிக்கச் செய்துவிடுகிறது. மேலும் இவை குடல் இயக்கங்கள் சீராக இருக்க உதவுகிறது. 

பெருங்காயம்

இது குடல் உறுப்புகளில் வாயு சேர்வதைத் தடுக்கிறது. இதை அதிக அளவு பயன்படுத்தினால் சாம்பாரின் சுவை மாறிவிடும் என்பதால் சிறிதளவே பயன்படுத்த வேண்டும். அப்படி அதிகமானால் அந்த சாம்பார் அதிக வீரியமுடைய மருந்தாகிவிடும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விளக்கெண்ணெய்

தேவைப்படுவோர், சாம்பார் சமைக்கும்போது அதில் சிறிதளவு விளக்கெண்ணெய் கலப்பதால், குடல் உறுப்புகள் மென்மை அடைந்து மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
 
இதேபோல், சாம்பாரில் சேர்க்கப்படும் காய்கறிகளைப் பொறுத்து, அவற்றை நாம் பல வகைகளாகப் பிரிக்கிறோம். காய்கறிகளின் அளவும் வகைகளும் அதிகரிப்பதற்கேற்ப அதன் சுவையும், சத்தும் அதிகமாகிறது. ஊட்டச்சத்து நிறைந்த கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. முருங்கைக்காய் மூட்டுவலி, முதுகுவலி உடையவர்களுக்கு நல்லது. மேலும் இது ஆண்மை சக்தி அதிகரிக்க உதவுகிறது.

முள்ளங்கி சிறுநீரகக் கல், பித்தப்பை கல் நோயாளிகளுக்கு உகந்தது. பூசணிக்காய் விஷத்தை முறிக்கும் திறனுடையது. மேலும் இது வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்ணுக்கு உகந்தது. பரங்கிக்காய் குடல் உறுப்புகளுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. சுண்டைக்காய் சளி தொந்தரவுகளுக்கு நல்லது. வெண்டைக்காய் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.

இப்படி நம் உடலுக்கு தகுந்த வண்ணம், கால சூழ்நிலைக்கேற்ப, கிடைக்கக்கூடிய காய்கறிகளைப் பொறுத்து, எப்படி வேண்டுமானாலும் சாம்பாரைத் தயாரித்து பயன்படுத்தலாம்.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், குடல் புற்றுநோயைத் தடுக்கும் திறன் சாம்பாருக்கு இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. இப்படி மற்றவற்றோடு ஒப்பிடும்போது கூடுதலான சத்துக்களைக் கொண்டிருப்பதால்தான், சைவ விருந்தில் எப்போதும் அது முதல் இடம் பெறுகிறது’’.

- கௌதம்