புற்றுநோய்க்கு தடுப்பூசி!



மகிழ்ச்சி

சமீபத்தில் நம்மை அதிகம் பயமுறுத்துவது புற்றுநோய் என்ற அரக்கனே. நாளுக்குநாள் வெளிவரும் புற்றுநோய் தொடா்பான ஆய்வுகளும், தரவுகளுமே அதற்குக் காரணம். நோய் ஒருபுறம் என்றால், இதுவரை புற்றுநோய்க்காக அளிக்கப்படும் கீமோ தெரபி, ரேடியேஷன் சிகிச்சைகளும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளும் கூட நம்மை கலங்க வைப்பதாகவே இருக்கின்றன. இந்த நிலைமையில் அமெரிக்க ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் புற்றுநோய்க்கான தடுப்பூசி பற்றிய தகவலை வெளியிட்டு நம்மை கூலாக்கியுள்ளது.

புற்றுநோய் கட்டிக்குள் நேரடியாக செலுத்தி அழிக்கக்கூடிய ஒரு கலவை மருந்தை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த தடுப்பூசி மருந்தானது குறிப்பிட்ட அந்த புற்றுநோய் கட்டியை அழிப்பதோடு, உடலின் மற்ற பகுதிகளில் இருக்கும் புற்றுநோய் கட்டிகளையும் கொன்றுவிடும் என்பதுதான் சந்தோஷமான செய்தி.

இருவேறு மருந்துகளின் கூட்டுக்கலவையான இந்த தடுப்பூசியானது உடலின் நோய்த் தடுப்பு மண்டலத்தை சீர்படுத்தி, புற்றுநோய் ஏற்பட்டுள்ள செல்களை அழிப்பதோடு, ஊசி செலுத்தப்பட்ட பகுதியைத் தாண்டி உடலின் மற்ற பகுதிகளிலும் வேலை செய்கிறது. எலிகளிடத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை வெற்றி அடைந்திருப்பதால் மனிதர்களிடத்தும் கண்டிப்பாக நேர்மறை விளைவையே ஏற்படுத்தும்.

‘புற்றுநோய் கட்டியை மட்டுமே அழிக்கக் கூடியதாக உருவாக்கிய இந்த மருந்து, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தையே வலுப்படுத்தும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. மனிதர்களின் பயன்பாட்டுக்கு விரைவில் வருமேயானால் புற்றுநோய் இல்லாத உலகை உருவாக்க முடியும்’ என்று நம்பிக்கையளிக்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவரான ரொனால்ட் லெவி.

- இந்துமதி