டியர் டாக்டர்




*‘மெடிக்கலில் என்ன லேட்டஸ்ட்?’ என்ற தலைப்பிலான தகவல்கள் யாவும் உடல் நலம் குறித்து நல்லதொரு விழிப்புணர்வுக்கு வித்திட்டிருந்ததுடன் சுவாரஸ்யமாகவும் இருந்தது. மருத்துவ உலகின் புதிய ஆராய்ச்சிகளை உடனுக்குடன் வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் உங்கள் பணி தொடரட்டும்!
- இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

*உணவு மற்றும் ஊட்டச்சத்துத் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவியான கோகிலவாணியின் ‘மாத்தி யோசி’ விஷயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. உணவுப் பொருளின் சத்துக்களைத் திருத்தி அமைத்தால் உணவியலில் இன்னும் பெரிய புரட்சி ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
- சு.இலக்குமணசுவாமி, மதுரை.

*‘எலும்பே நலம்தானா?!’ தொடரின் கடந்த அத்தியாயத்தில் இளமையில் கூன் விழும் பிரச்னையை அலசி இருந்தீர்கள். புத்தகப்பை இத்தனை பெரிய சிக்கலை உண்டாக்கும் என்பதை உணர்ந்து இதற்கு நிரந்தரத் தீர்வினை கல்வியாளர்களும், ஆட்சியாளர்களும் கொண்டு வர வேண்டும். காலம் மாறினாலும், தொழில்நுட்பம் வளர்ந்தாலும் குழந்தைகள் இன்னும் புத்தகப்பையை சுமக்கும் நிலைமை இன்னும் மாறவில்லை என்பது வேதனை.
- சி.கோபாலகிருஷ்ணன், மேற்கு தாம்பரம்.

*‘வருகிறது ஜீன் எடிட்டிங்...’ கவர் ஸ்டோரி சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் பார்ப்பது போன்ற த்ரில்லிங்கைத் தந்தது. நோய், நொடிகள் இல்லாத ஒரு மனிதன் உருவாவது சாத்தியம் என்ற தகவல் மருத்துவ உலகில் பெரும் மைல் கல்லாக அமையும். அதுவும் சிறப்பான குணநலன்களோடு ஒரு மனிதனை உருவாக்கவும் முடியும் என்பது இன்னும் சிறப்பு.
- ஆர். ராஜசேகர், மடுவின்கரை.

*டான்ஸ் ப்ளஸ் எக்ஸர்சைஸை இணைத்து செய்யும் ‘டான்ஸர்சைஸ்’ கட்டுரையும் படங்களும் ரசிக்க வைத்தது. வாழைத்தண்டு புராணம் கிரேட்!
- எல்ஜின் ஜோசப், செங்குன்றம்.    

*‘விதைப்பை புற்றுநோய் அலர்ட்’ பற்றிய கட்டுரைக்காக, அனைத்து ஆண்கள் சார்பில் உளமார்ந்த நன்றி. புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஓரளவு இருந்தாலும் விதைப்பை புற்றுநோய் பற்றிப் பலருக்கும் தெரியாது என்பதே உண்மை. சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்திருக்கிறீர்கள்.
- உத்திராடம், வண்டலூர்