புயல்களை கடந்து செல்லுங்கள்



உளவியல்

திரும்பும் திசையெல்லாம் பிரச்னையாக, செய்வதறியாது திகைக்கும் தருணங்களை நவீன வாழ்க்கையில் அதிகம் சந்திக்கிறோம். எந்த பக்கமும் நகர முடியாமல், எதையும் யோசிக்கக் கூட முடியாத சங்கடங்கள் சூழ்ந்த நிலையைக் கடந்து வருவது எப்படி என்று பலருக்கும் புரிவதில்லை.

அப்படி வாழ்க்கையில் நெருக்கடிகள் விரட்டும் சந்தர்ப்பத்தில் என்ன செய்ய வேண்டும், எப்படி அதில் இருந்து வெளியேறி வெற்றி பெற வேண்டும் என்பதற்கு உளவியல் அறிஞர்கள் பல எளிதான வழிகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

அவற்றில் முக்கியமானது சோதனைகள் நிறைந்த சூழல் எந்த கணத்தில் வேண்டுமானாலும் மாறலாம், வாழ்க்கையில் அதிசயங்கள் எந்த விநாடியிலும் நடக்கலாம் என்பதையே முதல் அடிப்படை ஆலோசனையாக உளவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அதற்காக, அவர்கள் சொல்லும் புத்த மதக் கதை இது...

கருவுற்ற மான் ஒன்று பிரசவ நேரம் வந்து விட்டதை உணர்ந்து, தகுந்த இடம் தேடி வனத்தில் அலைந்து கொண்டிருந்தது. ஓர் ஓடைக்கு அருகில் இடத்தை தேர்ந்தெடுத்து நிமிர்ந்து பார்த்தால் இடது பக்கம் புதரில் மறைந்துள்ள வேட்டைக்காரன் வில்லில் அம்பேற்றி குறி பார்த்துக் கொண்டிருக்கிறான். வலது பக்கம் பசியோடு ஒரு சிங்கம் பாய்வதற்கு தயாராக நின்று கொண்டிருக்கிறது.

அதே கணத்தில் வானில் தோன்றிய இடி ஒன்று எதிரே உள்ள மரங்களின் மேல் விழுந்து காடு தீப்பற்றி எரியத் தொடங்குகிறது. மானுக்கு எந்தப் பக்கமும் தப்பிக்க வழி இல்லை. எல்லா சூழலும் எதிராக இருந்தாலும் அவற்றை கண்டு கலங்காமல், தன்னுடைய குட்டியை ஈனுவதில் முழு கவனத்தையும் செலுத்த முடிவெடுக்கிறது மான்.

வேடன் அம்பினை எய்துவிட்டான், மான் பிரசவிக்க கீழே குனிகிறது; அந்த நொடிப்பொழுதில் வேடன் எய்திய அம்பு சிங்கத்தைத் துளைக்கிறது. ஒரேநேரத்தில் இரண்டு பிரச்னைக்கு தீர்வு கிடைத்தாயிற்று. சற்றும் எதிர்பாராமல் மழை கொட்டத் தொடங்கி தீயும் அணைந்துவிடுகிறது.

இந்த கதையை எப்போதும் நினைத்துக் கொள்ளுங்கள். அடுத்த விநாடி என்ன நடக்கும் என்பது தெரியாததுதான் வாழ்வின் சுவாரஸ்யமே என்பார்கள். அந்த சஸ்பென்ஸ் நிகழ்வு நமக்கு சாதகமாகவும் இருக்கும் என்று நம்புவதுதான் பலன் தரும் நல்ல வழிமுறை.

அன்றாட வாழ்வில் நமக்கு பிடித்த மாதிரி மனிதர்களையோ, நிகழ்வுகளையோ, ஏன் வார்த்தைகளைக் கூட நம்மால் கேட்க முடிவதி–்ல்லை. நம்மைச் சுற்றிலும் நடக்கும் விஷயங்கள் எல்லாமே நம்மை பாதிப்பதாகவோ அல்லது சில நேரங்களில் நம் வாழ்க்கையை புரட்டிப் போடும் நிகழ்வுகளும் நடந்துவிடுகிறது.

அம்மாதிரியான நேரங்களில் வாழ்க்கை ஏமாற்றுவது போலத்தான் இருக்கும். அது ஏமாற்றமல்ல. உங்கள் தன்னம்பிக்கைக்கான பரீட்சைதான் அது.
‘நமக்கு பாதகமாகவே எல்லாம் நடக்கிறதே என்று கவலைப்படுவதாலோ, பயப்படுவதாலோ எந்த பயனும் இல்லை. சமயோசிதமாக செயல்பட்டு அதிலிருந்து தப்பிக்கும் வழியை தேட வேண்டும்.

நம்முடைய செயல்களில் மட்டும் கவனம் செலுத்தினால், மீதியை இயற்கையே பார்த்துக் கொள்ளும்’ என்ற தத்துவத்தை விளக்கும் ஒரு புத்த துறவி கூறும் கதையே இது.இதிலிருந்து மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினை என்ன?எந்த கடினமான சூழலுக்கும் மனதை குழப்பிக் கொள்ளாமல் அந்த நேரத்துக்கான தேவையில் மட்டும் கவனம் செலுத்தினால், இயற்கை அவனைக் காப்பாற்றும் என்பதே. மானைப் போலவே புயலே வந்தாலும் அசராத மனிதர்களை நிஜவாழ்விலும் சந்தித்திருப்போம்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மெடிக்கல் ஸ்கூல் நூற்றுக்கணக்கான மனிதர்களிடத்தில், 75 வருடகாலம் நடத்திய Harward Study என்னும் மகிழ்ச்சியான மனிதர்களைப்பற்றிய ஆய்வுதான் உலகின் முதல் நீண்டகால வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு. ‘உங்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையின் ரகசியம் என்ன?’ என்ற கேள்விக்கு பெறப்பட்ட பதில்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நீண்டகாலம் நடத்தப்பட்ட ஆய்வினை அலசிப்பார்த்த ஆய்வாளரும், மனநல நிபுணருமான ஜார்ஜ் வில்லியன், ‘மகிழ்ச்சியான மக்கள் அனைவருமே, அருவெறுக்கத்த சூழ்நிலைகளில் இருந்துதான் தங்களுக்கான வெற்றிக்கனியை கண்டெடுத்தனர்’ என்னும் ஆதாரத்தைக் கூறுகிறார்.

‘‘வாழ்க்கையின் மோசமான சூழ்நிலைகளை உறுதியுடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவமே ஒரு மனிதனின் வெற்றிக்கும், மகிழ்ச்சிக்கும் வித்தாக அமைகிறது.
ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்நாள் முழுவதும் சந்திக்கும் சவாலான நிகழ்வுகளை Challenge notebook என்னும் குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தும் ஜார்ஜ், எதையும் திட்டமிட்டு செய்யாதீர்கள் என்பதே மகிழ்ச்சியான மனிதர்கள் அனைவரும் சொல்லும் மந்திரம்’ என்பதுடன் கடுமையான பிரச்னைகள் நம்மை பாதிக்காதவாறு, பாதுகாத்துக் கொள்ளும் உத்திகளையும் பட்டியலிடுகிறார்.

இதிலிருந்து நான் என்ன கற்றுக் கொண்டேன்?

மிகப்பெரிய பிரச்னையிலிருந்து வெளியில் வந்த பிறகு, நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி ‘இந்த சூழலிலிருந்து நான் என்ன கற்றுக் கொள்ள முடியும்’ என்பதே! எதுவும் இல்லை என்ற பதில் கண்டிப்பாக ஒப்புக் கொள்ளக்கூடியது இல்லை. எந்த ஒரு சூழலும் கண்டிப்பாக எதையாவது கண்டுபிடிக்க உதவும். நீங்கள் விண்ணப்பித்த வேலை உங்களுக்கு கிடைக்காது போனால், அதற்காக சோர்ந்து போய்விடாது, ‘நானே இந்த வேலை வேண்டாமென்று நினைத்தேன்.

இந்த வேலை எனக்கானது அல்ல. அடுத்தமுறை இதைவிட சிறப்பாக செய்ய வேண்டும்’ என்று கற்பனையாக உங்களுக்குள்ளேயே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம். நிச்சயம் நல்ல விடை கிடைக்கும்.இந்த சூழல் என்னை எப்படி வலுவாக்கியது?

சவால்களை வாய்ப்புகளாக எடுத்துக் கொள்வது மனிதனின் அதிசயத்தக்க குணம். நம் எல்லோருக்குள்ளும் ஒரு திறமை கண்டிப்பாக இருக்கும். நாம் உணர்கிறோமோ, இல்லையோ? நம்மை பாதிக்கும் தோல்விகளே நம்மை வலுப்படுத்தும். ஆண்டாண்டு காலமாக நிரூபிக்கப்பட்ட இந்த உண்மையை ஒப்புக் கொண்டால், நமக்கே தெரியாத நம் திறமைகள் மற்றும் வலிமைகளை வளர்த்துக் கொண்டு, நம் முன்னே வரும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராகிவிடுவோம்.

துயரத்திலிருந்து கிடைக்கும் பலனை யோசியுங்கள் சோகமான சூழல்களை சற்று உற்று நோக்கினால், அதிலிருந்து நமக்கான அருமையான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதை உணர முடியும்.

செல்லமாக வளர்த்த ஒரே பையன், சாகசப் பயணத்தை மேற்கொள்ளப் போகிறான். அவனது பயணம் அவ்வளவு எளிதானதல்ல. கரடுமுரடான, பனி நிறைந்த மலை, எந்நேரமும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். மகனின் தற்காலிக பிரிவு உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் துயரத்தைத் தரலாம்.

ஆனால், அந்த சோகமே மகனின் வெற்றிப் பயணத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தால் அவனது நீண்ட காலக்கனவு கலைந்துவிடும் அல்லவா? ஒரு சின்ன பிரிவுத்துயரம், மிகுந்த பலனைத் தரும் என்றால் அதைத் தாங்கிக்கொள்வதில் தவறில்லையே.

நமக்கு கிடைத்த அனுபவத்தை மற்றவர்களுக்கு எப்படி பயன்படுத்தலாம்?உங்கள் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் ஒரு சிறு முடிவால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனால் மனம் உடைந்து உட்காருவதால் பயன் ஏதுமில்லை.

மாறாக எந்த இடத்தில் தவறு செய்தோம்? எதனால் நஷ்டம் ஏற்பட்டது? என அலசி ஆராய முற்படலாம். அதிலிருந்து உங்களுக்கு கிடைத்த அனுபவம் என்ன? ஒன்று அதிலிருந்து நீங்களும் கற்றுக் கொள்ளலாம். அது உங்களின் வெற்றிப்பயணத்துக்கு படிப்பினையாக பயன்படும். அதை உங்களைப் பின் தொடர்கிறவர்களுக்கும் நாளை கற்றுத் தரலாம்!

- உஷா நாராயணன்