மார்ச் 11 போலியோ சொட்டு மருந்து தினம்



இது அரசாங்கத்தின் வெற்றி அல்ல!

நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்ரிக்க  உள்ளிட்ட நாடுகளில் இளம்பிள்ளை வாதம் இன்னும் ஒழிக்கப்படாமல் உள்ளது. ஆனால், நமது நாட்டில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்பது பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய விஷயம்.

ஆமாம்... 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அன்றுதான் இந்தியா முழுமையாக போலியோ நோய் அற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. இந்த மாபெரும் சாதனை அரசாங்கத்தால் மட்டுமே சாத்தியமாகவில்லை என்பதை சமீபத்தில் நடந்து முடிந்த முதல்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாமின் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

உலக நாடுகள் அனைத்தையும் பயமுறுத்தும் காரணியாக, இளம்பிள்ளை வாதம் என்று சொல்லப்படுகிற போலியோ இருந்து வருகிறது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள், ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள மேலை நாடுகள், வறுமைக் கோட்டுக்குக் கீழே வரும் சோமாலியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் என அனைத்து நாடுகளும் போலியோ நோய் எனும் கொடிய அரக்கனை முற்றிலும் ஒழிக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றுதான் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம். இளம்பிள்ளை வாதம் அற்ற நாடாக இந்தியா திகழ்ந்தாலும், இந்த நோய்க்குக் காரணமாக திகழ்கிற Poliomyelitis என்ற வைரஸ் மீண்டும் ஊடுருவி, விஸ்வரூபம் எடுத்துவிடக் கூடாது என்பதில், மத்திய, மாநில அரசுகள் கண்ணும்கருத்துமாய் இருக்கின்றன.

ஆகவே, ஒவ்வோர் ஆண்டும் இரண்டு தவணையாக 0 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தருவது எழுதப்படாத சட்டமாக கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. எந்த குழந்தைக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்காமல் விட்டுவிடக் கூடாது என்பதற்காக அதை செயல்படுத்தும் விதம்தான் இதில் சபாஷ் போட வைக்கிறது.

அங்கன்வாடி மையங்கள், மாநகராட்சியின் சுகாதார மையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கிற ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், சுற்றுலாத் தலங்களான கடற்கரைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் என ஓர் இடம் விட்டுவைக்காமல் எல்லா இடங்களிலும் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தரப்பட்டு வருவது நிச்சயம் பாராட்டுக்குரியது.

வெளியூர் பயணத்தில் இருப்பவர்களின் குழந்தைகளுக்குக் கூட தவறிவிடக் கூடாது என்பதற்காக அனைத்து சுங்க சாவடிகளிலும் சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டது இதன் உச்சகட்ட சிறப்பம்சம். இவற்றில், சுகாதார துறையைச் சேர்ந்த செவிலியர்கள் தலைமையில் சுங்க சாவடி பணியாளர்கள் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார்கள். இந்த அபார முயற்சியால் நடப்பாண்டில், ஜனவரி மாதம் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற முதற்கட்ட முகாமில் 66 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

இது அரசாங்கத்துக்கு மட்டுமே சொந்தமான வெற்றியல்ல. அரசு சாரா நிறுவனங்கள், தனியார் தொண்டு மையங்கள் ஆகியவற்றின் பங்கும், சமூக ஆர்வலர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், தேசிய மாணவர் படை பிரிவினர், நாட்டு நலப் பணி திட்டத்தைச் சேர்ந்தோர், மக்கள் நலப் பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் போன்றோரின் பங்களிப்பும் கைகோர்த்ததால்தான் இந்த போலியோ அற்ற இந்தியாவை நம்மால் உருவாக்க முடிந்திருக்கிறது. இதை நடப்பாண்டில் நடைபெற்ற முதல் கட்ட போலியோ முகாம்கள் பட்டவர்த்தனமாக நமக்குப் புரிய வைத்தது.

என்னதான் அரசாங்கம் திட்டங்கள் தீட்டினாலும், சட்டங்கள் இயற்றினாலும் பொதுமக்களும் அதனுடன் கைகோர்த்தால்தான் அந்த திட்டம் வெற்றியடையும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். எல்லா சுகாதார நடவடிக்கைகளிலும் இதுபோல் அரசாங்கத்துடன் பொதுமக்களும் களமிறங்கி செயல்பட்டால், நோயற்ற ஓர் இந்தியாவை நிச்சயம் உருவாக்க முடியும்!

- விஜயகுமார்