பழங்கள்... எதற்கு? எவ்வளவு? எப்படி?



கவர் ஸ்டோரி

# A To Z Complete Coverage

‘நிறைய பழங்கள் சாப்பிடுங்க’ என்பது டாக்டர்களும், டயட்டீஷியன்களும் எப்போதும் தவறாமல் சொல்கிற அட்வைஸ். உடல்நலம் குன்றி எதுவும் சாப்பிட முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும்போதும் ‘பழங்கள் மட்டும் சாப்பிட்டீங்கன்னாகூட போதும்’ என்று பரிந்துரைக்கிறார்கள்.

அதுவும் முடியாத பட்சத்தில் ஜூஸ்!பழங்களில் அப்படி என்னதான் சத்துக்கள் இருக்கிறது? யார்யார் பழங்கள் சாப்பிடலாம்? என்னென்ன பழங்களை எந்த அளவில் சாப்பிட வேண்டும்? சாப்பிடுவதற்கென்று முறைகள் ஏதேனும் இருக்கிறதா? இப்படி பழங்கள் பற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் விடை சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி.  

பழங்களில் குறைந்த அளவிலான கொழுப்பு, சோடியம் மற்றும் கலோரிகளே உள்ளன. அத்துடன் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் C மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான பல ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

வாழைப்பழம், கொடிமுந்திரி, கிர்ணி பழம், பீச், ஆப்ரிகாட் பழங்கள், கொடி முந்திரி மற்றும் ஆரஞ்சு போன்றவற்றில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இது உடலின் ரத்த அழுத்த ஆரோக்கியத்தை சீராகப் பராமரிக்க உதவுகிறது. நார்ச்சத்துள்ள பழங்கள் ஆரோக்கியமான உணவின் ஒரு முக்கியப் பகுதியாக உள்ளது. இது ரத்தக் கொழுப்பு அளவைக் குறைக்க உதவுவதோடு இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.

சரியான குடல் இயக்கங்களுக்கு அவசியமான நார்ச்சத்து மலச்சிக்கலைக் குறைக்க உதவுகிறது. பழச்சாறுகளைக் காட்டிலும், முழு அல்லது வெட்டப்பட்ட பழங்களில்தான் இந்த சத்து அதிகமாக உள்ளது. உடல் திசுக்களின் வளர்ச்சி மற்றும் அதை சரி செய்வதற்கு வைட்டமின் சி உதவுகிறது. மேலும் இது உடலில் ஏற்படும் வெட்டுக்கள், காயங்களைக் குணப்படுத்த உதவுவதோடு பற்கள், ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

Folate என்கிற ஃபோலிக் அமிலம் உடலில் ரத்த சிவப்பணுக்கள் உருவாக்கத்துக்கு உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கு ஃபோலிக் அமிலம் மிகவும் அத்தியாவசியமானது. இந்தச் சத்தானது நாம் உட்கொள்கிற பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் மூலமாகக் கிடைக்கிறது.

மேலும், இந்தச் சத்து நிறைவாக இருக்கும்படி தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை மருத்துவர் அறிவுரைப்படி எடுத்துக் கொள்வதின் மூலமும் இதைப் பெறலாம். கரு வளர்ச்சியின்போது நரம்புக்குழாய் குறைபாடுகள், முதுகெலும்பு மற்றும் உடல்கூறு சார்ந்த குறைபாடுகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க இது உதவுகிறது.

ஒட்டுமொத்த ஆரோக்கிய உணவின் ஒருபகுதியாக பழங்களையும் காய்கறி களையும் சாப்பிடுவதன் மூலம்  மாரடை ப்பு, பக்கவாதம் மற்றும் இதய நோய்களுக்குரிய ஆபத்தைக் குறைக்கலாம். இதேபோல ஒரு சில பழங்களும் காய்கறிகளும் சில வகை புற்றுநோய்களை எதிர்த்து நம்மை பாதுகாக்கிறது.

நார்ச்சத்துள்ள பழங்களையும் காய்கறிகளையும் நமது உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் இதயநோய், உடல்பருமன் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் ஆபத்தைக் குறைக்கலாம். பொட்டாசியம் சத்து நிறைந்த பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தம் குறைகிறது. மேலும் சிறுநீரகக்கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைப்பதோடு, எலும்பு தேய்மானம் ஏற்படுவதைக் குறைக்க உதவுகிறது.

குறைவான கலோரி தேவைப்படுவோர், கலோரி அதிகமுள்ள உணவுப் பொருட்களை தவிர்த்துவிட்டு, குறைவான கலோரி உள்ள பழங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. பழங்கள்… பழச்சாறு… எது பெஸ்ட்? பழங்களை அப்படியே சாப்பிடுவதன் மூலமே அதனுடைய நன்மைகளை முழுமையாகப் பெற முடியும்.

பழச்சாறுகள் மூலம் அதன் சத்துக்களை எளிமையாக பெற முடிகிறது. இந்த பழச்சாறுகளை 100 சதவிகிதம் பழங்களை மட்டுமே கொண்டு தயார் செய்வதன் மூலம் அதன் பலன்களை நிறைவாக பெறலாம். ஆனால், அதில் கூடுதலாக சேர்க்கப்படும் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் பிற கூடுதல் பொருட்களால் அதன் ஊட்டச்சத்து மதிப்பு கூடவோ, குறையவோ வாய்ப்புள்ளது. குறிப்பாக, நார்ச்சத்துள்ள பழங்களை ஜூஸாக சாப்பிடும்போது அந்த சத்தினை இழக்க வேண்டியிருக்கும். அதனால், பழங்களாக சாப்பிடுவதே சிறந்தது.

பழங்கள் பலவிதம்ஒரு குறிப்பிட்ட புவியியல் மற்றும் காலநிலைகளைப் பொறுத்து குறிப்பிட்ட பருவ காலங்களில் வளர்கிற பழங்கள் அனைத்தையுமே பருவகால பழங்கள் (Seasonal Fruits) என்று சொல்கிறோம்.

இந்தியாவில் மாம்பழங்கள் கோடைகாலத்தில் சாப்பிடுவதற்கு உகந்ததாக இருப்பதை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த பழங்களை அந்தந்த காலங்களில் அவரவர் உடல் தேவைக்குஏற்ப சாப்பிட வேண்டும். இது நமது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் சுவையான மற்றும் இயற்கையான ஒரு வழிமுறையாக உள்ளது.

தற்போது எல்லா பழங்களும் எல்லா காலங்களிலும் கிடைக்கும்படி பதப்படுத்தி, பாதுகாக்கப்பட்டு கிடைக்கிறது. செயற்கை முறையில் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்தல் மற்றும் நீண்ட நாட்கள் பயன்படுத்துவதற்காக பதப்படுத்துதல் போன்றவற்றால் உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் நாம் வாங்குகிற பழங்கள் புதியதாக, சுத்தமானதாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். முலாம்பழத்தில் அதிகளவு நீர்ச்சத்து இருப்பதோடு பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற சத்துக்கள் உள்ளது. இந்த பழத்தை வெப்பமான மாதங்களில் சாப்பிட்டால் உடனடியாக புத்துணர்ச்சி கிடைக்கிறது.

கோடை காலத்தில் மாம்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் வெப்பம் குறைகிறது. புதிதாக சேகரிக்கப்பட்ட இதுபோன்ற பருவகால பழங்களில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது !

சில குறிப்புகள்...

* பழங்களை காலை நேரத்தில் சாப்பிடுபவர்களுக்கு, அது உடலிலுள்ள நச்சுத்தன்மை மற்றும் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
*  பழங்களை எல்லா நேரங்களிலும் சாப்பிடுவதைக் காட்டிலும் காலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அதன் பலன்களை அதிகமாகப் பெறலாம்.
* பழங்களின் இயல்பான தரம் குறையும் என்பதால் அதை அதிக குளிர் மற்றும் அதிக சூடான இடங்களில் பாதுகாத்து வைக்கக்கூடாது.
* பழங்களைப் பாதுகாக்க மிதமான வெப்பம் மற்றும் குளிர்நிலைகளே உகந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பழங்களை சாப்பிடலாம்.
* பருவகால பழங்களை அந்தந்த காலங்களில் அவரவர் உடலின் தேவைக்கேற்ப எடுத்துக்கொள்வது நல்லது.