மத்திய பட்ஜெட்டால் மருத்துவத்துக்கு என்ன லாபம்?!



அலசல்

2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி முதல் தேதியன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.  இதில் தேசிய சுகாதார பாதுகாப்பு உள்பட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநரும், இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக தலைவருமான இளங்கோ நடப்பாண்டு பட்ஜெட்டின் சாதக, பாதகங்களை இங்கே அலசுகிறார்.

தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்

தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் மூலம், ஓர் ஏழைக் குடும்பம் ஆண்டுக்கு தலா ரூ. 5 லட்சம் வரை மருத்துவ நிதியுதவி பெற முடியும். 10 கோடி ஏழைக் குடும்பங்கள் இதனால் பயன்பெறும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் முயற்சிக்கப்படும் மிகப்பொிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அறிவிப்பு என்று இதை மத்திய அரசின் மிகப்பெரிய சாதனையாக கருதுகிறார்கள்.

ஆனால் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இருந்தபோதிலும் அகில இந்திய அளவில் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருப்பதற்காக  பாராட்டலாம். இதில் தனியார் மருத்துவமனைகள், காப்பீட்டு நிறுவனங்களின் தலையீடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் தலையாய கடமை.

தேசிய ஊட்டச்சத்து மேம்பாடுதேசிய ஊட்டச்சத்து மேம்பாட்டுத் திட்டத்துக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ. 3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எடை குறைவான குழந்தை பிறப்பு தமிழ்நாட்டில் 13 சதவிகிதமாகவும், கேரளாவில் 5 சதவிகிதத்துக்கு குறைவாகவும் உள்ளது. எனவே, அந்தந்த இடங்களில் இருக்கிற ஊட்டச்சத்துக் குறைபாட்டு அளவுகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது அவசியம்.

ஆயுஷ் துறைக்கு 13 சதவிகிதம் அதிகம் மத்திய அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஆயுஷ் துறைக்கு ரூ. 1,429 கோடிகளை ஒதுக்கியது. இந்த ஆண்டு ரூ. 1,626.37 கோடியாக அதிகரித்திருக்கிறது.

இது கடந்த ஆண்டு ஒதுக்கீட்டைவிட 13 சதவிகிதம் அதிகமாக இருப்பது வரவேற்கத்தக்கது. சுகாதார மையங்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடிநாடு முழுவதும் 1.5 லட்சம் சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களுக்கு இந்த பட்ஜெட்டில் ரூ. 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்புடன் இதுபோன்ற சுகாதார மையங்கள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்கள் ஏற்கெனவே உள்ள துணை சுகாதார மையங்களுக்கு மாற்றாக இருக்குமா என்பதற்கான சரியான விளக்கம் இதில் இல்லை. ஒரு மாதத்துக்கு ஒரு சுகாதார மையத்துக்கு ரூ. 6,666 என்கிற அளவில் மிகவும் குறைவாகவே இதில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள்தான் இந்திய சுகாதார அமைப்பின் அடிப்படை என்பதால் அதற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டியது மிகவும் அவசியம். 

மருத்துவமனைகளின் தரம்அனைவருக்கும் தரமான சிகிச்சை கிடைக்கும் வகையில் 24 மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என்கிற அறிவிப்பும் பாராட்டக் கூடியதுதான்.

இதேபோன்று கிராமப்புறங்களிலுள்ள சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் மருத்துவ வசதிகளையும் தரம் உயர்த்த வேண்டும். மேலும், சென்னை போன்ற பெருநகர மக்களுக்குக் கிடைக்கிற நவீன மருத்துவ வசதிகள், கிராமப்புற மக்களுக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டியது அரசின் கடமை.

பெண்களுக்கு…

பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறுகால விடுப்பு 26 வாரங்களாக நீட்டிக்கப்பட்டுள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், இது அரசு அலுவலகங்களில் பணிபுரிகிற பெண்களுக்கு மட்டுமே சட்டப்படி வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிற பெண்களுக்கும் ஊதியத்துடன்கூடிய விடுப்பு கிடைக்கும்படியான சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்தினால் பணிக்குச் செல்லும் அனைத்து பெண்களுக்கும் உதவியாக இருக்கும்.

மூத்த குடிமக்களுக்கு..

மூத்த குடிமக்களுடைய மருத்துவக் காப்பீட்டுக்கான கட்டணத் தொகை வரிவிலக்கு ரூ. 30 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டிருப்பதோடு, சில குறிப்பிட்ட மருத்துவச் செலவினங்களுக்கும் வரிவிலக்கு வழங்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.500 வழங்கப்படும் என்கிற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.

 - க.கதிரவன்