ரசாயன உரங்கள் இல்லை...பூச்சிக்கொல்லி மருந்தும் இல்லை



மகிழ்ச்சி!

இந்தியாவின் முதல் இயற்கை வேளாண் மாநிலம் சிக்கிம்!

ஆரோக்கிய வாழ்வின் அஸ்திவாரமே உணவில்தான் அமைந்திருக்கிறது. சமீப வருடங்களில் உலக அளவில் புதிய புதிய நோய்களும், எண்ணற்ற உயிரிழப்புகளும் நிகழ்ந்துகொண்டிருப்பதன் பின்னால் ரசாயன உரங்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் மிக முக்கியப் பங்கினை வகித்துக் கொண்டிருக்கிறது. இந்த அபாயத்தை உணர்ந்துதான் இயற்கை வேளாண்மையை ஊக்குவித்துப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.

இந்தியாவிலும் பல மாநிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு முயன்று வருகின்றன. இவற்றில் முழு முதல் வெற்றியை சிக்கிம் மாநிலம் பெற்று இருக்கிறது.  மண்ணையும், மக்களையும் அழிக்கும் ரசாயன சவால்களில் இருந்து சிக்கிம் வெளிவந்த கதை, ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய கதையும் கூட !

வட இந்தியாவில் இமய மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு வடகிழக்கு மாநிலம் சிக்கிம். வடகிழக்கில் உள்ள ஏழு மாநிலங்களில் அரசியல் குழப்பம், அடிதடி பிரச்னை, தீவிரவாத நடவடிக்கைகள் என்று எந்த சர்ச்சைகளும் இல்லாத மாநிலம். இயற்கை அன்னையின் பூரண அரவணைப்புடன் உள்ள அமைதியான ஒரு மாநிலமாக திகழ்கிறது. தற்போது இந்தியாவிலேயே முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய ஒரு மாநிலம் என்கிற பெருமையை இந்த மாநிலம் பெற்றிருப்பதற்கான காரணங்கள் என்ன என்று பார்ப்போம்.

சிக்கிம் மாநிலத்தின் தனிச்சிறப்புகள் சுற்றுச்சூழல் பராமரிப்பு, பொது சுகாதாரம், தூய்மை போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இம்மாநிலம் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு முழுவதும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள கடைகளில் துணிப்பையில்தான் பொருட்கள் தருகிறார்கள். பயண வழியெங்கும், குறிப்பாக மலைப்பகுதிகளில் எத்தனை பயணிகள் வந்து சென்றாலும் அங்கே எந்த ஓர் இடத்திலும் பிளாஸ்டிக் குப்பைகள் கண்களில் படுவதே அரிது.

மலைப்பாங்கான பகுதியில் இருப்பதால் சுற்றுலாவுக்கு ஏற்ற சிறப்பான இடமாக இந்த மாநிலம் திகழ்கிறது. ஏழெட்டு மாதங்கள் சுற்றுலாப் பயணிகளின் வரவு இம்மாநிலத்தின் வருவாயை கணிசமாக அதிகரிக்கிறது.

டாக்சி வாடகை, அறைகளின் வாடகை, உணவுப் பொருட்களின் விலை என்று  எல்லாமே மாநிலம் இருக்கும் உயரத்துக்குப் பொருத்தமாகவே இருக்கிறது. இங்குள்ள பகுதிகளின் உயரம் 3,000 அடி முதல் 28,208 அடி உயரம் வரை வேறுபட்டு காணப்படுகிறது. உலகின் மூன்றாவது உயரமான சிகரமான கஞ்சன் ஜங்கா இருப்பதும் இங்குதான்.

சிக்கிம் மாநிலத்தின் எந்த ஒரு பகுதியிலும் தொடர்ந்து 500 அடி தூரம் சென்றால், அந்த தூரத்துக்குள் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் இருப்பது மிகவும் அரிது. இதனாலேயே இங்குள்ள ஆண்கள், பெண்களுக்கு மட்டுமல்லாமல் காவல் துறையினருக்கும் தொப்பை என்பது அரிதாகவே உள்ளது என்பதும் ஒரு சுவாரஸ்யமான தகவல். இங்கு புகைவண்டித் தடமோ, விமான நிலையமோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. இந்தியாவில் தன் மாநிலத்தின் தேவைக்கு அதிகமான மின் உற்பத்தி உள்ள மாநிலங்களில் முதலாவதாக சிக்கிம் உள்ளது.  

2011-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 6,10,577 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 74.85% மக்களும், நகர்ப்புறங்களில் 25.15% மக்களும் வாழ்கின்றனர். 1,000 ஆண்களுக்கு 890 பெண்கள் என்று பாலின விகிதம் உள்ளது. 7,096 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தியானது, ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு 86 நபர்கள் என்று உள்ளது. இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 81.42 சதவிகிதமாக உள்ளது.

பிளான் இந்தியா என்ற அமைப்பு பெண்கள் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நடத்திய ஆய்வில் ஒட்டு மொத்த புள்ளிகள் அடிப்படையில் கோவா மாநிலம் முதலிடத்தை பெற்றுள்ளது. நாட்டில் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கல்வியில் சிறந்த மாநிலங்களாக  இமாச்சலப்பிரதேசம், சிக்கிம், பஞ்சாப், மகாராஷ்டிரா, கோவா போன்றவை உள்ளன.

 சுகாதார மேம்பாட்டில் கேரளா, தமிழ்நாடு, சிக்கிம், கர்நாடகா, ஆந்திரா போன்றவை சிறந்த இடத்தைப் பிடித்துள்ளன. சிறந்த மாநிலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள சிக்கிம், பஞ்சாப் மாநிலங்கள் வறுமை ஒழிப்பை தவிர அனைத்துத் துறைகளிலும் சிறப்பான இடத்தை பெற்றிருப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

முயற்சிகள் வெற்றியடைந்த விதம்சிக்கிம் முழுவதும் இயற்கை வேளாண் மாநிலமாக மாறியுள்ளதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் அம்மாநில முதல்வர் பவன்குமார் சாம்லிங். இந்தியாவிலேயே 1994-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து ஐந்தாவது முறையும் முதல்வராக நீடிக்கும் பெருமைக்குரிய இவர் அடிப்படையில் ஒரு விவசாயி.

உணவையும் நிலத்தையும் நஞ்சாக மாற்றும் நவீன விவசாய முறையை
ஒழித்துவிட்டு, இயற்கை விவசாய முறையைக் கொண்டுவர வேண்டுமென்று விரும்பிய அவர், 2003-ல் இம்மாநிலத்தை Organic State என்று சட்டப்பேரவையில் பிரகடனம் செய்தார்.

Organic State Board

சிக்கிம் மாநிலத்தில் ரசாயன உரங்களுக்கும், பூச்சிக்கொல்லிகளுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறுவோருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம், மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். வழக்கம் போல இந்த அறிவிப்பும் அரசியலாக்கப்பட்டு எதிர்ப்புகள் தூண்டிவிடப்பட்டன. அங்கு மலைப் பகுதிகளில் வாழும் ஒரு சிலர் இயற்கை விவசாயத்தை எதிர்த்தாலும் அது எடுபடவில்லை. இதுபோன்ற எதிர்ப்புகள் எதைப்பற்றியும் கவலைப்படாத முதல்வர் தனது திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக Organic State Board என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் மாநிலத்தில் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்களை இயற்கை விவசாயத்திற்கு மாற்றுவது என தீர்மானிக்கப்பட்டு அதற்கான செயலில் களம் இறங்கியது இந்த வாரியம்.இயற்கை வேளாண்மையை ஆதரிக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டதோடு, இயற்கை வேளாண்மையை மேற்கொள்வதற்கும், இயற்கை உரங்களைத் தயாரிப்பதற்கும் தாராளமாக மானியங்களை வழங்கியது மாநில அரசு.

இதன் மூலம் மாநிலம் முழுவதும் 24,536 இயற்கை உரத் தயாரிப்பு மையங்களும், 1,447 பசுந்தாள் உரத் தயாரிப்பு மையங்களும் நிறுவப்பட்டன. இயற்கை உரத் தயாரிப்பு முறைகள் குறித்து உழவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளால் 2009-ம் ஆண்டு இறுதிக்குள் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு மாற்றப்பட்டன.

2006-07 ஆம் ஆண்டில் மத்திய அரசு வழங்கிய மானியத்துடன்கூடிய ரசாயன உரக் கோட்டாவை வேண்டாம் என்று அறிவித்தார் முதல்வர். அடுத்த கட்டமாக ஓராண்டுக்குள் 14 ஆயிரம் ஏக்கரை நஞ்சில்லா பூமியாக மாற்றுவது என திட்டமிடப்பட்டு அதுவும் நிறைவேற்றப்பட்டது.

Bio Village

Sikkim Organic Mission என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் கீழ் கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு இயற்கை வேளாண் முறைகள் பிரபலப்படுத்தப்பட்டன. இந்த கிராமங்கள் Bio Village என்று அழைக்கப்பட்டன. நல்ல திட்டங்கள் பலன் தராமல் தோற்றுப் போவதற்கு, தொடர் ஆராய்ச்சிகளும் வளர்ச்சியும் இல்லாமல் போனதுதான் காரணம்.

இதைப் புரிந்துகொண்டு இயற்கை வேளாண்மையை மேம்படுத்தவும், அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காகவும் Center Of Excellence For Organic Farming என்ற ஆராய்ச்சி மையத்தை முதல்வர் உருவாக்கினார். இத்தனை முன்னேற்பாடுகளுடன் 2015-ஆம் ஆண்டு இறுதிக்குள் சிக்கிம் மாநிலத்தை நஞ்சில்லா விவசாய பூமியாக மாற்றத் திட்டமிட்டு, அதை வெற்றிகரமாகச் சாதித்தும் காட்டியிருக்கிறார் சிக்கிம் முதல்வர்.

பயோ ஃபெர்ட்டிலைசர்ஸ் என்று சொல்லப்படும் இயற்கை உரம்தயாரிக்கும் பெரும் தொழிற்சாலையை அரசே நிறுவியிருக்கிறது. இந்த தொழிற்சாலையில் ஒரே நேரத்தில் 3000 மெட்ரிக் டன் இயற்கை உரம் தயாரிக்க முடியும். தெற்கு சிக்கிமில் ராவங்லா என்ற இடத்தில் 440 ஏக்கரில் அரோமா ஆர்கானிக் தேயிலைத் தோட்டத்தையும் அரசு நடத்துகிறது. இங்கு விளையும் உலகத் தரம் வாய்ந்த தேயிலை பெருமளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தொடக்கத்தில் சில சிரமங்கள் இருந்தாலும் இப்போது சிக்கிம் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையின் மகத்துவம் புரிந்துள்ளது. இவர்கள் விளைவிக்கும் இயற்கை வேளாண் பொருட்களை வாங்குவதற்கு டெல்லி மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் இருப்பவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். நமது பாரதப் பிரதமர் சிக்கிமில் நடந்த விவசாயிகள் கருத்தரங்கில், இயற்கை விவசாயத்தில் சாதித்த இம்மாநில முதல்வருக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கௌரவித்திருக்கிறார்.

மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள சிக்கிம் மாநில மக்கள் ரசாயனத்தின் ஆபத்தை உணர்ந்து இயற்கை விவசாயத்துக்கு மாறிவிட்டார்கள். ஆனால் நம் நாட்டில் பலர் இது குறித்த விழிப்புணர்வுகூட இல்லாமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரிய ஒன்று.

மனித உயிர்களை பறிக்கும் பூச்சிக்கொல்லிபசுமைப் புரட்சிக்கு முன்பு நாட்டில் இவ்வளவு நோய்கள் இல்லை. அதிக மகசூல் என்று ஆசைகாட்டி நிலங்களையும் உண்ணும் உணவையும் விஷமாக்கி விட்டார்கள். ரசாயன உரங்கள், உணவு உண்ணும் அத்தனை உயிர்களையும் சிறுகச் சிறுகக் கொல்கின்றன.

தற்போது இந்தியாவில் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். இதுபோன்ற நோய்களுக்கு ரசாயன உரங்களும் ஒரு முக்கியக் காரணியாக உள்ளது. ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் மற்றும் இயற்கை முறை பூச்சி மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.  

ஒரு பூச்சியின் வாழ்க்கை சுழற்சியானது முட்டை, புழு, கூட்டுப்புழு, தாய்ப்பூச்சி என நான்கு உருமாற்ற நிலைகளைக் கொண்டது. பயிர்களைப் பாதிக்கும் பூச்சிகளின் இந்த நான்கு வாழ்க்கை நிலைகளையும் ஒருசேர அழிக்கும் பூச்சிக்கொல்லிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அதற்கான முயற்சியில் நாளுக்கு நாள் பூச்சிக்கொல்லிகளின் நச்சு வீரியம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முதல் தலைமுறை பூச்சிக்கொல்லிகள் மனிதர்களின் தோல் பரப்பை மட்டுமே பாதிக்கும் தொடு நஞ்சாக இருந்தன. இரண்டாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகள் உடலுக்குள் ஊடுருவிக் குடல்வரை பாதித்தன.

தற்போது ஐந்தாம் தலைமுறையாகப் பயன்பாட்டில் இருப்பவை நமது நரம்புகளைப் பாதிக்கும் நஞ்சு அடங்கிய பூச்சிக்கொல்லிகளாக இருக்கிறது. இப்படி தற்போது நாம் பயன்படுத்திவரும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஒட்டுமொத்த உயிர்ச் சமநிலையைப் பாதிப்பதோடு மனித உயிர்களை பறிக்கும் உயிர்க்கொல்லிகளாக மாறி வருகிறது. தற்போது ரசாயன உரங்களை ஒழிப்பதற்காக அனைவரும் இணைந்து போராடுவது தவிர்க்க
முடியாத ஒன்றாகிவிட்டது.

எது நல்ல வளர்ச்சி?

நல்ல பூச்சிகளுக்கு இடையூறு விளைவிக்காமல் கெட்ட பூச்சிகளை அகற்றுவதே புத்திசாலித்தனமான வேளாண்மை. நமது மூதாதையர்கள் இயற்கையோடு இயைந்து, அப்படித்தான் வேளாண்மை செய்துவந்தார்கள்.

நாமோ அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகளுக்காக மிக அதிகம் செலவழிக்கிறோம். இதனால் விளைச்சல் கணிசமாக உயர்ந்தாலும், கடைசியாகக் கூட்டிக் கழித்துப்பார்த்தால் நிகர லாபத்தில் அடி வாங்கிவிடுகிறது. அதாவது நமது மூதாதையர்கள் ரூ.3 செலவழித்து ரூ.10 எடுத்ததைவிட, நாம் ரூ.10 செலவழித்து ரூ.20 எடுப்பதை வேளாண் வளர்ச்சி என்கிறோம்.

இதில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி மண், நீர், காற்று என மொத்த உயிர்ச்சூழலும் பாழாவதால் ஏற்படும் நஷ்டத்தை மறந்து விடுகிறோம். எனவே நமது நிலத்தையும், மக்களின் உடல் நலத்தையும் கெடுக்காமல், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்  இயற்கை முறையிலான வளர்ச்சியே நல்ல வளர்ச்சியாக இருக்க முடியும்.

எது சரியான பூச்சி மேலாண்மை?

பூச்சிகளுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்ட போராட்டத்தின் ஆரம்பம் பூச்சிகளை முற்றிலும் அழித்தொழிப்பதாக இருந்தது. அது நடைமுறையில் சாத்தியமற்றது என்பதை உணர சில பத்தாண்டுகள் பிடித்தன. எனவே, பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது என்ற உத்தியில் அடுத்த சில பத்தாண்டுகள் சென்றன.

பூச்சிகளைப் புரிந்துகொண்ட பிறகே பூச்சி மேலாண்மை என்ற தெளிவான வியூகத்துக்கு உலக நாடுகள் வந்துள்ளன. இந்த வகையில் பயிரைப் பூச்சிகள் பாதிக்காமல் இருக்க, நடைமுறைக்கு ஒத்துவரும் பூச்சி மேலாண்மையைப் பின்பற்ற வேண்டும். அதில் ரசாயனப் பூச்சிக்கொல்லிகளுக்கு இடமில்லாமல் செய்ய வேண்டும்.

தற்போது ரசாயன உரங்களால் நஞ்சாக மாறியிருக்கும் நிலங்களில் இயற்கை முறையிலான பூச்சி மேலாண்மை, உரப் பயன்பாடுகள் மற்றும் வேளாண் முறைகள் மூலமாக படிப்படியான நடவடிக்கைகள் மேற்கொண்டு, அந்த நிலங்களை மீட்டெடுத்து இயற்கை முறை விவசாயத்துக்கு உகந்ததாக மாற்ற முடியும். அப்படி இந்தியாவில் சிக்கிம் மாநிலம் முழுமையாக பூச்சிக்கொல்லி இல்லாத முதல் மாநிலமாக தற்போது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நாம் எப்போது மீள்வோம்?

சிக்கிம் மாநிலத்தைத் தொடர்ந்து உத்தரகாண்ட், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றன. ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் இது குறித்த விவாதங்கள் தொடங்கிவிட்டன. ஆனால், வளமான விவசாய பூமியைக் கொண்ட தமிழகத்தில் இயற்கை விவசாயம் குறித்த முழுமையான புரிதல் வேளாண் அதிகாரிகளுக்கே இல்லை.

எனவே, இயற்கை விவசாயத்தின் அவசியம் மற்றும் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வை வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என்று அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டியது தற்போது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. இனிமேலும் காலம் தாழ்த்தாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.

 தொகுப்பு: க.கதிரவன்