இரவுக்கு ஆயிரம் கண்கள்



Take Care

கணினி போன்ற பிற தொழில்நுட்பங்கள் சார்ந்த இரவு நேரப் பணிக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற நவீன தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் மட்டுமின்றி, 24 மணி நேரமும் நடைபெறக்கூடிய மருத்துவ சேவைகள், போக்குவரத்துப் பணிகள், செய்தி நிறுவனப் பணிகள், காவல் பணி போன்ற பிற இரவு நேரப் பணிகளுக்குச் செல்பவர்களின் தேவையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

வாழ்க்கைக்கான பொருள்தேடி இப்படி இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டிய சூழல் தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. இதுபோல் இரவு நேரப் பணிக்குச் செல்பவர்களுக்கு ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்னைகள் என்னென்ன? இப்பிரச்னைகளை எதிர்கொள்வது எப்படி என்று பொதுநல மருத்துவர் பவித்ரா பிரதிப்ராஜிடம் கேட்டோம்...

ஆரம்ப காலத்தில் மனிதனின் தினசரி வாழ்க்கையானது இயற்கையோடு இணைந்ததாகவும், இயற்கையின் நியதிகளுக்கு உட்பட்டும் அமைந்திருந்தது. அதன்படி அதிகாலையில் எழுந்து வேலைகளைச் செய்துவிட்டு, இரவில் சீக்கிரமாகவே உணவருந்திவிட்டு தூங்கச் செல்லும் பழக்கம் இருந்தது. ஆனால், தற்போதைய நவீன காலத்தில் மனிதன் இயற்கையின் நியதிக்கு எதிராக செயல்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது பகலில் தூங்கி இரவுநேரப் பணிக்குச் செல்லும் ஆண்கள், பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக அவர்கள் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு ஆளாகி வருகின்றனர். தூக்கம், ஹார்மோன் குறைபாட்டு பிரச்னைகள் இரவு பணிக்குச் செல்பவர்களின் உடல் வளர்சிதை மாற்றம் தொடர்பான உடலியல் செயல்பாடுகளில் அதிகளவு மாற்றம் ஏற்படுகிறது. இதனால் இயல்பான தூக்க முறைகளில் மாற்றம் ஏற்பட்டு தூக்கப் பிரச்னைகள் அதிகமாகிறது.

பொதுவாகவே நாம் இரவு நேரத்தில் தூங்குகிற 6 முதல் 7 மணி நேரத்துக்குள்தான் ஆழ்நிலைத் தூக்கம் வருகிறது. ஆனால், பகல்நேரத் தூக்கத்தில் இது சரியாக வருவதில்லை. இதுபோன்ற ஆழ்நிலைத் தூக்கத்தில்தான் உடல் வளர்சிதை மாற்றத்துக்குத் தேவையான ஹார்மோன்கள் சுரக்கின்றன. இதனால் குறிப்பாக இரவு பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஹார்மோன் குறைபாட்டுப் பிரச்னைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற ஹார்மோன் குறைபாடுகளால் பெண்களுக்கு பல புற்றுநோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.    

புற்றுநோய் ஆபத்து வாழ்க்கைமுறை மாற்றம், உணவு முறை மாற்றம், உடல்பருமன், மது, புகைப்பழக்கம், மரபணு பிரச்னை, சிறு வயதில் திருமணம், தாமதமான குழந்தைப்பேறு உள்ளிட்ட பல காரணங்களால் புற்றுநோய் ஏற்படலாம். மேலும் தொடர்ந்து  இரவுநேரப் பணிக்குச் செல்லும் பெண்
களுக்கும் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. தற்போது 50 வயதுக்குள்ளாகவே புற்றுநோய்களால் பலரும் பாதிக்கப்
படுகின்றனர். 2020-ல் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் புற்றுநோய்களின் பாதிப்பு இன்னும் அதிகளவில் இருக்கும். நம் நாட்டில் ஆண்டுதோறும் புதிதாக 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

தற்போது ஆண்களைவிட பெண்களே புற்றுநோயால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். நுரையீரல், வாய் மற்றும் வயிற்று புற்றுநோய்களால் ஆண்களும், மார்பகம், வாய், கர்ப்பப்பை வாய் மற்றும் கருப்பைப் புற்றுநோய்களால் பெண்களும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது அந்த ஆய்வு. உலக அளவில்  உயிரிழக்கும் மொத்த நபர்களில் 6-ல் ஒருவர் புற்றுநோயால் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

செரிமான பிரச்னைகள்

காலையில் செரிமான உறுப்புகளின் செயல்திறன் அதிகமாக இருக்கும். அதன்பிறகு படிப்படியாகக் குறைந்து இரவு நேரத்தில் அவற்றின் செயல்திறன் குறைந்து உடல் ஓய்வு நிலைக்குச் சென்று ஆழ்நிலைத் தூக்கத்துக்குச் செல்கிறது. இதனால்தான் இரவு நேரத்தில் அதிகளவு உணவருந்தக் கூடாது என்று சொல்கிறோம். இரவு நேரத்தில் செரிமான உறுப்புகளின் செயல்திறன் மிகவும் குறைவாக இருப்பதால், அந்நேரத்தில் நாம் அதிகளவு சாப்பிட்டாலும் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு முழுமையாகக் கிடைக்காது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இரவு  பணிக்குச் செல்கிறவர்களுக்கு செரிமான பிரச்னைகள் அதிகரிக்கிறது. குறிப்பாக கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வருகிற 22   முதல் 28 வயது வரையுள்ள இளைஞர்களில் பெரும்பாலானோர் இதுபோன்ற செரிமான பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்.  

உணவுமுறை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகள்

தற்போது இரவு பணிக்குச் செல்பவர்களின் உணவுப் பழக்க வழக்கத்தில் அதிகளவு மாற்றங்கள் ஏற்படுகிறது. இரவு பணிக்குச் சென்று காலையில் திரும்பி வருபவர்கள் மிகவும் சோர்வாக இருப்பார்கள். இவர்களில் 90 சதவிகிதம் பேர் காலை உணவை சரியான நேரத்தில் சாப்பிடாமல் தூங்கச் சென்றுவிடும் பழக்கத்துக்கு ஆளாகின்றனர். அதுமட்டுமல்ல அவர்களின் மதிய உணவருந்தும் நேரம் மாறுவதுடன், இரவு நேரத்தில் அவர்கள் அதிகளவு உணவு எடுத்துக் கொள்ளும் பழக்கத்துக்கும் ஆளாக நேரிடுகிறது. இதுபோன்ற சீரற்ற உணவு பழக்கங்களால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் முழுமையாகக் கிடைப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் உடலிலுள்ள மற்ற உறுப்புகளிலும் பாதிப்புகள் அதிகரிக்கிறது.

இரவு பணிக்கு செல்பவர்களுக்கு ஏற்படும் மேலும் சில பிரச்னைகள் இரவு பணிக்குச் செல்பவர்களுக்கு சூரிய ஒளியிலிருந்து கிடைக்கக்கூடிய வைட்டமின் D-யில் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அவர்களுடைய எலும்புகளின் உறுதித்தன்மை குறைவதோடு, எலும்பு சார்ந்த பிற பிரச்னைகளும்  ஏற்படுகிறது. அவர்களுக்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு கை, கால் குடைச்சல், ரத்த அழுத்தம் அதிகரித்தல்  போன்ற பிரச்னைகளும் ஏற்படுகிறது.

இரவு நேரத்தில் ஏற்படும் அதிக பணிச்சுமையால் கண்ணழுத்த நோய், கண் எரிச்சல், கண்பார்வைக் குறைவு போன்ற கண் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகிறது. தோல் பிரச்னைகள், முடி கொட்டுதல், செரிமானப் பிரச்னைகள், வாயு பிரச்னைகள் ஏற்படுவதோடு உடல் ஆற்றலிலும் குறைவு ஏற்படுகிறது.   

60 கிலோ எடையுள்ள ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 2.5 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் அவசியம். ஆனால் இரவு நேரப் பணிக்குச் செல்பவர்கள் போதுமான தண்ணீர் அருந்த முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் உடலில் நீர்வறட்சி ஏற்படுவதோடு சிறுநீரக பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையால் உடல் சோர்வு, செரிமானப் பிரச்னைகள், உடல் உறுப்புகளின் செயல்திறன் குறைவு போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது.

இரவு பணிக்கு செல்பவர்களுக்கு முக்கிய ஆலோசனைகள்இரவு பணிக்கு செல்பவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தடுப்பதற்கு சரியான ஊட்டச்சத்துள்ள உணவு முறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

சரியான உணவருந்தும் முறை தற்போதைய நமது உணவு முறை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை சரி செய்வதற்கு நாம் சரியான  உணவருந்தும் முறையை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். காலையில் ராஜாவைப் போலவும், மதியம் மந்திரியைப் போலவும், இரவு நேரத்தில் பிச்சைக்காரனைப் போலவும் உணவருந்த வேண்டும் என்று சொல்வதுண்டு.

அதாவது காலை உணவு என்பது சரியான நேரத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டும். அதை எந்தக் காரணத்துக்காகவும் தவிர்க்கக் கூடாது. அந்த காலை உணவு நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருப்பது அவசியம். மதிய உணவு அதைவிட சற்று குறைவான அளவிலும்,  இரவு உணவு மதிய உணவைவிட குறைவானதாகவும் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். இதோடு பின்வரும் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு பின்பற்றுவது நல்லது.

* சரியான நேரத்தில் காலை உணவு அருந்துவது அவசியம். மேலும் மதியம் மற்றும் இரவு நேர உணவையும் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சரியான உணவு பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

* போதுமான அளவு நீர் கட்டாயம் அருந்த வேண்டும். ஒரு நாளைக்கு ஏதாவது ஒரு வகை பழம் சாப்பிட வேண்டும்.

* தினசரி குறைந்தது 6 முதல் 7 மணி நேரம் நிறைவான தூக்கம் கிடைக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம்.

* உணவருந்தும்போது அதை நன்றாக மென்று சுவைத்து சாப்பிட வேண்டும். நீர் அருந்தும் போது அதையும் பொறுமையாக ருசித்து அருந்த வேண்டும். அவசரமின்றி பொறுமையாக உணவு அருந்துவதற்கான நேரத்தை கட்டாயம் ஒதுக்க வேண்டும்.  

* தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை கட்டாயமாக நடைப் பயிற்சி, உடற் பயிற்சி அல்லது யோகா பயிற்சிகள் செய்ய வேண்டும்.  

* ஒரு மாதத்துக்கு ஒருமுறை உடல் எடை, ரத்த அழுத்த அளவு, ரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த கொழுப்பு  அளவுகளை பரிசோதனை
செய்ய வேண்டும். பரிசோதனையில் இதன் அளவுகளில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் உரிய மருத்துவரை அணுகி அவருடைய ஆலோசனைப்படி நடக்க வேண்டும்.   

* இரவுநேரப் பணிகளில் அதிக பணிச்சுமை இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் மூளை ரத்தக் குழாய்களில் பிரச்னை ஏற்பட்டு பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

* இரவு பணிக்குச் செல்கிற பெண்கள் உடலில் ஏதேனும் அசாதாரணமான கட்டிகள் தென்பட்டால், உரிய மருத்துவரை அணுகி புற்றுநோய் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். புற்றுநோய்க்கு மருந்துகள், அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை போன்ற முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, இதை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் புற்றுநோய் அபாயங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

- க.கதிரவன்