தேவையறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்!



கவர் ஸ்டோரி

மாற்று மருத்துவம் மற்றும் அலோபதி சர்ச்சை பற்றி சித்த மருத்துவர் சத்யா, தன்னுடைய பார்வையை பகிர்ந்து கொள்கிறார்.

‘‘இன்றைய நவீன காலகட்டத்தின் வேகத்துக்கேற்ப நோய்களை தீர்க்கும் வழிகளும் துரிதமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. அதனால்தான் ஆங்கில மருத்துவத்தை நாடுகிறோம்.
அவசர சிகிச்சைக்கு ஆங்கில மருத்துவம் சிறந்ததுதான். அதில் மாற்று கருத்தில்லை. ஆனால், Non-communicable diseases என்று சொல்லக்கூடிய நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், தைராய்டு நோய்கள், கருப்பை கோளாறுகள், வயிற்று நோய்கள், கல்லீரல் சார்ந்த நோய்களுக்கு தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது நம் உடலில் பக்க விளைவுகள் ஏற்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் கூட்டு மருந்து சிகிச்சை முறைப்படியும் ஆங்கில மருத்துகள் தரப்படுகிறது. தொடர்ந்து ஆங்கில மருத்துவத்தினால் ஏற்படும் நோய் பாதிப்பு மற்றும் பக்க விளைவுகளில் இருந்து காத்துக் கொள்ள மாற்று மருத்துவங்களை கடைப்பிடிக்கலாம்.

இந்திய மருத்துவங்களை பொறுத்தளவு நீயா நானா என போட்டி போடாமல் மருத்துவங்களை ஆராய்ந்து யாருக்கு எப்போது எந்த மருத்துவம் தேவை என்பதை அறிந்து அதை அவர்களுக்கு அளிக்கவேண்டும். இந்திய மருத்துவங்களை ஒருங்கிணைந்து ஒரு வட்டத்திற்குள் கொண்டுவந்து அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

ஆங்கில மருத்துவம் மருந்துகள் முழுக்க முழுக்க குறிப்பிட்ட வேதிப்பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. நோய்கள் விரைந்து குணமானாலும் அதன் பக்க விளைவுகளை தவிர்க்க முடிவதில்லை.

மேலும், கடந்த காலமாக இதில் ஏற்படும் பக்க விளைவுகளை மக்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.  காரணம் நம் உடலின் வேதிப்பொருட்கள் அதிக அளவு சேர்வதால் அது நஞ்சுநிலையாக மாறி பக்க விளைவுகளையும் பல்வேறு புதிய நோய்களையும் தோற்றுவிக்கிறது.

ஆங்கில மருத்துவம் நாள்தோறும் புதிய மருந்துகள் சந்தைக்கு வந்த வண்ணம் உள்ளது. ஒரே நோய்க்கு பல்வேறு மருந்துகள் இருக்கின்றன, இவையெல்லாம் உண்ணும்போது பக்க விளைவு என்பது நம்மில் சாதாரணமான ஒன்றாகி விடுகிறது. அந்த வகையில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, அக்குபங்சர், இயற்கை மற்றும் யோகா மருத்துவம் சிறந்து விளங்குகிறது.

பொதுவாக ஆங்கில மருத்துவத்தில் எதற்கெடுத்தாலும் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுவது பொதுவான அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. தவிர்க்க முடியாத பட்சத்தில்தான் அறுவை சிகிச்சை செய்கிறோம் என ஆங்கில மருத்துவம் விளக்கம் தந்தாலும் இது குறித்து விழிப்புணர்வையாவது அவர்கள் ஏற்படுத்த வேண்டும்.

நோய் ஆரம்ப நிலையில் உள்ளது எனில் சாதாரண உணவுப் பழக்கவழக்கத்தின் மூலம் அதை சரி செய்ய அவர்களை பழக்க வேண்டும். முடியாத பட்சத்தில்தான் அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் தந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

ஆங்கில மருத்துவத்தை பொறுத்தளவு அரசு மருத்துவமனைக்கு வசதியில்லாதவர்கள் பயன்படுத்தும் மருத்துவமனையாகவும், வசதி படைத்தவர் தனியார் மருத்துவமனைக்கு செல்பவர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் காசு கொடுத்தால்தான் சிறந்த மருத்துவம் கிடைக்கும் என இயல்பாக மக்கள் மனதில் தோன்றுகிறது. இதை அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதுபோல மக்களும் அரசு மருத்துவனையை பயன்படுத்த வேண்டும்.
 
தனியார் மருத்துவமனைகளில் சாதாரண சிகிச்சை முதல் பெரிய அறுவை சிகிச்சைவரை அதிக செலவு செய்ய வேண்டியிருக்கிறது. மருத்துவமனைகள் மருத்துவ சேவையின் எல்லையை கடந்து லாப நோக்கோடு செயல்படுவது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. தனியார் மருத்துமனைகள் இங்கு தவிர்க்க முடியாமல் இருந்தாலும் அவர்கள் சேவை நோக்கோடு செயல்பட்டால் மக்களுக்கு தனியார் மருத்துவமனைகள் மீது
இருக்கும் அச்சம் தீரும்.

இந்தியாவில் மாநிலங்களில் உள்ள மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளில் அலோபதி, சித்தா, ஆயுர்வேதா, யுனானி, இயற்கை மருத்துவம் போன்ற மாற்று மருத்துவத் துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த மருத்துவத்திலும் மக்களை சிகிச்சை பெறச்செய்ய வேண்டும்.

தவிர்க்க முடியாத சூழ்நிலையிலும் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கலாம். ஆனால் சாதாரண நோய்கள், நோய் ஆரம்ப நிலையில் உள்ள நோய்களுக்கு மாற்று மருத்துவத்தை பரிந்துரைக்கலாம்.

குறிப்பாக மருத்துவம் சேவை மனப்பான்மையோடு செயல்பட்டு நோய்பட்டவருக்கு நோயை நீக்கி அவருக்கு நம்பிக்கையை தந்து அவரை காக்கும்போது நோயாளி ஒரு மருத்துவத்தின் மீது அச்சத்தை தவிர்த்து அதை நம்புவார்’’ என்கிறார்.

- க.இளஞ்சேரன்