மகிழ்ச்சியுடன் 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்...அன்பும் நன்றியும்

மிரட்டும் புதிய நோய்கள் ஒருபுறம்.... சமூக வலைதளங்களால் பரவும் தவறான மருத்துவ ஆலோசனைகள் இன்னொருபுறம்... பணிச்சுமை காரணமாக நோயாளிகளுக்கு போதுமான விளக்கங்களை அளிக்க முடியாத மருத்துவர்களின் நேர நெருக்கடி மற்றோர் புறம்...
இந்த முக்கோண சிக்கலைக் களைந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கடந்த 4 ஆண்டுகளாக முயற்சி செய்து வந்திருக்கிறோம். மருத்துவம் தொடர்பான எந்தவொரு செய்தியையும் தகுதிவாய்ந்த நிபுணர்களிடம் பெற்று, மிகுந்த கவனத்துடனே அதனை வெளியிட்டு வருகிறோம்.

அழுத்தமான உள்ளடக்கத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போலவே, வடிவமைப்பிலும் மிகுந்த சிரத்தை எடுத்து வருகிறோம். உணவுமுறை, நவீன ஆராய்ச்சிகள், உடற்பயிற்சிகள், மருத்துவ உலக சர்ச்சைகள், மோசடிகள், சிறந்த மருத்துவமனைகளைப் பற்றிய பதிவு என பல தளங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்டுரைகள் வழங்கப்படுகின்றன.

அந்த முயற்சிக்கும், சிரத்தைக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில், இப்போது 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க ஆதரவளித்திருக்கிறீர்கள். இந்த அன்புக்குக் காரணமான வாசகர்கள், விற்பனையாளர்கள், முகவர்கள், விளம்பரதாரர்கள், போஸ்டர் ஒட்டுகிறவர்கள் எல்லோருக்கும் எங்களின் அன்பும், நன்றியும்...

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டிய தகவல் ஒன்றும் இருக்கிறது.சந்தையில் விற்பனையாகி வரும் பல்வேறு மருத்துவ இதழ்களும் விலை அதிகம் கொண்டவை. ஆனால், ‘குங்குமம் டாக்டர்’ ரூபாய் 15/-க்கு மட்டுமே விற்பனையாகி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் பத்திரிகை உலகில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், வாசகர்களின் நலன் கருதி விலையேற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறோம். தொடர்ந்து பயணிப்போம்...

- ஆசிரியர்