செப்டம்பரில் அமலாகிறது இலவச காப்பீடு!செய்திகள் வாசிப்பது டாக்டர்

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் என்ற பிரம்மாண்ட மருத்துவக் காப்பீடு திட்டம் 2018 செப்டம்பர் 25-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாகவும், இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் இலவச காப்பீடு வழங்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் தாக்கலின்போது ‘தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டம்’ தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருந்தார். அந்த திட்டமே அமலுக்கு வரவிருக்கிறது.

‘இது உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம். இதன் மூலம் 10 கோடிக்கு மேலான ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும். இவர்கள் ஆண்டுக்கு தலா ரூபாய் 5 லட்சத்துக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக உயர்தர சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ஒட்டு மொத்த குடும்பமே பாதிக்கிறது. ஏழைகளுக்கும் சாதாரண மக்களுக்கும் தரமான மருத்துவ வசதி கிடைப்பதற்காகத்தான் அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் 50 கோடி மக்கள் பயனடைவார்கள். இனி அவர்கள் சிகிச்சைக்காக கடன் வாங்கி கஷ்டப்படமாட்டார்கள்.

இத்திட்டம் எவ்வளவு பெரிய திட்டம் என பலருக்குத் தெரியாது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் உள்ள மொத்த மக்கள் தொகையை சேர்த்தால் எவ்வளவு இருக்குமோ அவ்வளவு  பேருக்கு பயனளிக்கும் திட்டம் இது. இத்திட்டத்தை செயல்படுத்த 22 மாநிலங்கள் முன்வந்துள்ளன. இதற்காக மத்திய அரசு ரூபாய் 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது’ என்று மோடி இதுபற்றி தெரிவித்திருக்கிறார்.

‘முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்’ என்ற பெயரில் தமிழகத்தில் ஏற்கெனவே ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இது மத்திய அரசின் புதிய திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுமா அல்லது வழக்கம்போல தமிழக அரசின் காப்பீட்டு திட்டம் தனியாகவே செயல்படுமா என்பது இனிதான் தெரிய வரும்!

- க.கதிரவன்