கேப்ஸ்யூல்



Rx

மீன் எண்ணெய் மாத்திரைகளை தினமும் எடுத்துக் கொள்வது நல்லதா?

 டாக்டர் வாணி விஜய் (பொதுநல மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்):மீன் எண்ணெய் மாத்திரை ஒரு சிறந்த ஆன்டிஆக்சிடென்ட். உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சரும செல்களின் சேதாரத்தை கட்டுப்படுத்தி, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் பளபளப்புடன் இருக்கச் செய்கிறது. வயதை குறைத்துக் காட்டுகிறது. மீன் எண்ணெய் மாத்திரையில் ஒமேகா 3 எனப்படும் கொழுப்பு அமிலமும், வைட்டமின் ஏயும் மட்டுமே உள்ளன.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதயத் துக்கு நல்லது. கொழுப்பில் கரையும் வைட்ட மினான ஏ அதிக அளவு உடலில் சேர்ந்தால் ‘ஹைபர்வைட்டமினோசிஸ்’ என்னும் பிரச்னையை ஏற்படுத்திவிடும். இதனால் கல்லீரலில் தேவைக்கு அதிகமான வைட்டமின்கள் சேர்ந்து, சருமம் கரடுமுரடாக மாறுவது, முடி கொட்டுவது போன்றவை ஏற்படும்.

20 வயதில் இருந்து 40 வயது வரை உள்ளவர்கள் தினமும் ஒரு மாத்திரை எடுத்துக்கொண்டாலே போதும். 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வைட்டமின்களை விட கால்சியம், மக்னீஷியம், துத்தநாகம் போன்ற தாதுச்சத்துகளே அவசியம். இவர்கள் ஒரு நாள் விட்டு மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.-

சேரக்கதிர் விழிப்புணர்வே போதும்!

குழந்தை இல்லை என்பது ஒரு தம்பதியின் தனிப்பட்ட பிரச்னை என்பதைத் தாண்டி ஒரு சமூகப் பிரச்னையாகிறது நம்நாட்டில். பச்சிலை தொடங்கி மண்சோறு என அத்தனை சோதனைகள் குழந்தைக்காக. இதெல்லாம் தேவையே இல்லை. முறையான விழிப்புணர்வு போதும் என்கிறார் மருத்துவர் சாமுண்டி சங்கரி.“உலகமெங்கும் குழந்தைப்பேறு குறைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்குக் காரணம் இன்றைய லைஃப் ஸ்டைல்தான்.

பெரும்பாலும் உணவுப்பழக்கம்  மாறிவிட்டது. ஊட்டச்சத்துகள் அற்ற ‘ஜங் ஃபுட்’டையும் பொரித்த உணவுகளையும் இன்றைய இளம் தலைமுறையினர் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதோடு, நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களைப் பயிரிட உபயோகிக்கிற ரசாயன உரங்களின் தாக்கமும் குழந்தைப் பேறின்மைக்கு முக்கிய காரணமாகிறது. குடியும் சிகரெட்டுமாக திரியும் பெரும்பாலான இளைஞர்களுக்கு அந்தப் பழக்கங்களும் குழந்தைப் பேறின்மைக்குக் காரணமாகும் என்பது தெரிவதில்லை.

பெண்களின் மனநிலை மாறுதல் இன்னொரு முக்கிய காரணமாகிவிட்டது. ஏற்கனவே பருமன், ஸ்ட்ரெஸ் மற்றும் உணவுப் பழக்கத்தால் ‘பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ்’ போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இன்றைய தலைமுறை பெண்கள் தங்கள் திருமண வயதை தள்ளிப்போடுகிறார்கள்.

அப்படியே சீக்கிரம் திருமணமாகிவிட்டாலும் குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போடுகிறார்கள். குழந்தைப்பேற்றைத் தள்ளிப்போடுவதால் சிலருக்கு கருப்பையின் உள்ளே இருக்கும் சவ்வு தடித்துவிடும் Endometrial Thickness பிரச்னை ஏற்படுகிறது. இதுவும் குழந்தையின்மைக்குக் காரணமாகிறது’’ என்கிறார் சாமுண்டி சங்கரி.

- சக்தி