எதையுமே தூக்கிப் போட மனசு வரலையா...



வணக்கம் சீனியர்

நாம் நினைப்பதைவிடவும், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது நம் சுற்றுப்புறம். வீட்டுக்குள் நுழையும்போதே முழுவதும் துணியும், பொருட்களுமாக கலைந்து போடப்பட்டு இருக்கும் சூழலை நினைத்துப் பாருங்கள்.. அப்படியே மலைப்பாய் இருக்கும். அதுவே, சுத்தமாகவும், பொருட்கள் வரிசையாகவும், அழகாகவும் அடுக்கப்பட்ட வீடாக இருந்தால், அந்த சூழலே மன அமைதியை தரும்.

‘ஒழுங்கற்ற அறை எப்படி மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது? ஹாங்காங் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியரான டாக்டர் ஏஸ்லின் டெரிகிஹேனா, மேற்கொண்ட ஆய்வில், அது பாதுகாப்பற்ற நிலையை மனதில் உணரச்செய்வதால் எளிதில் மனச்சோர்விற்கு உள்ளாகிறோம். மேலும், மன அழுத்தத்திற்கு காரணமான கார்ட்டிசோல் அளவை அதிகரிக்கவும் செய்கிறது’ என்கிறார்.

பின்னாளில் பயன்படக்கூடிய அல்லது மதிப்புமிக்க பொருட்களை எறிந்துவிட யாருமே விரும்புவதில்லை. என்றாலும், நினைவுகளோடு தொடர்புடைய உணர்வுப்பூர்வமான பொருட்களை அளவுக்கதிகமாக சேர்த்து வைக்கும் பழக்கம் ஒரு சிலரிடம் சற்று கூடுதலாகவே இருக்கிறது.

‘‘தேவையற்றவற்றை அவ்வப்போது ஒழித்துக் கட்டாமல், வீட்டில் குப்பைக் கிடங்கு போல வைத்துக் கொள்ளும் இவர்கள் ‘பொருட்கள் சேகரிப்பு குறைபாடு’ (Hoarding Disorder) என்று சொல்லப்படும் நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம்’’ என்று சொல்லும் மனநல ஆலோசகரான பிரிசில்லா சத்யநாதன் இந்த மனநல குறைபாட்டை விளக்குகிறார்.

‘‘குறிப்பிட்ட காலத்துக்கு மேல் உணவு அல்லது பிற பொருட்களை சேர்த்து வைக்கும் மனிதனின் செயலை குவிக்கும் நடத்தையாக Hoarding behavior பற்றி சொல்லலாம். இதை, மற்ற குறைபாடுகளைப்போல பிற அறிகுறிகளை வைத்து தீர்மானிக்க முடியாது என்றாலும் மனச்சோர்வு, மனப்பதற்றம் மற்றும் OCD (Obsessive-compulsive disorder) போன்ற உணர்ச்சி ரீதியிலான மனநலக் குறைபாடுகளுடன் தொடர்பு படுத்தப்படுகிறது.

மொத்த மக்கள் தொகையில் 4 சதவீதத்தினரிடம் பொருட்களை சேகரிக்கும் குறைபாடு இருந்தாலும், 55 வயதுக்கு மேற் பட்டவர்களிடத்தில் சற்று கூடுதலாகவே இருக்கிறது. வயதானவர்கள் பெரும்பாலும் பத்திரிகைகள், புத்தகங்கள், பழங்கால பொருட்கள் மற்றும் ஆடைகள் போன்றவற்றை சேமிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். பிறரிடத்தில் வேறுவிதமான பொருட்களை சேமிக்கும் பழக்கம் இருக்கிறது. இனம், வயது, பாலினம், பொருளாதாரம் அல்லது கல்வி நிலைப்பாட்டையெல்லாம் கடந்து, யார் வேண்டுமானாலும் இந்த பாதிப்புக்கு உள்ளாகலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எனினும், வயது மூப்பு, சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுவது, வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்கள், குடும்ப நிகழ்வுகள், குடும்பத்தினரால் ஒதுக்கப்படுதல் மற்றும் தான் இப்படி செய்கிறோமே என்ற குற்ற உணர்வு இல்லாத நிலை போன்ற காரணங்களால் முதியவர்கள் பொருட்கள் சேகரிப்பு குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள்.’’

எதனால் ஒருவருக்கு பொருட்கள் சேகரிப்பு குறைபாடு வருகிறது?

‘‘இதற்கான சரியான காரணம் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் குழந்தைப் பருவத்திலோ, பருவ வயதிலோ மன அழுத்தம் அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவங்களை எதிர்கொண்டவர்களாக இருக்கிறார்கள். நெருங்கியவர்களின் மரணம், விவாகரத்து போன்ற சம்பவங்களினால் இந்த குறைபாடு ஆரம்பிக்கிறது.

அதேபோல் பெற்றோர்களின் மனநல பாதிப்பு, போதைப்பழக்கம் போன்றவையும் அடுத்த தலைமுறையினரிடம் இந்த குறைபாட்டை ஏற்படுத்தக்கூடிய
காரணங்களாக இருக்கின்றன.’’

ஏற்படும் பாதிப்புகள் என்ன?

‘‘பொருட்கள் சேகரிப்பு குறைபாடுள்ளவர்கள் தங்களுக்கு இருக்கும் இந்த குறைபாட்டைப்பற்றி அறியாதவர்களாகவும், தங்களுடைய இந்த பழக்கத்தால் வீடு முழுவதும் பொருட்களை நிரப்பி, மற்றவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். தங்களுடைய உடைமைகளை மற்றவர்கள் தொடுவதையோ, மற்றவர்கள் பார்ப்பதையோ விரும்ப மாட்டார்கள். தங்களின் இந்த நடவடிக்கைக்காக வெட்கப்பட்டும், வேதனைப்பட்டும் ஒரு கட்டத்தில் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். ஆனாலும், அவற்றை விற்கவோ, மற்றவர்களுக்கு கொடுக்கவோ அல்லது மறுசுழற்சி செய்வதையோ கூட அனுமதிக்க மாட்டார்கள்.

‘இந்தப் பொருள் என்றாவது ஒருநாள் உபயோகப்படும்; இதன் மதிப்பு உனக்குத் தெரியாது; இது அபூர்வமானது; என் உணர்வுக்கு நெருக்கமானது; இதற்கு மாற்றாக வேறு எதுவும் இருக்க முடியாது’ இப்படி உணர்ச்சிமயமான காரணங்களை சொல்வார்கள். இவர்கள் சொல்லும் காரணங்கள் எதுவாக இருந்தாலும், பொருட்கள் கட்டாய சேகரிப்பு குறைபாடு உண்மையிலேயே மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் கோளாறு ஆகும்.

இதனால், வீட்டுக்குள்ளேயே கீழே விழுவது, கூர்மையான பொருட்களினால் காயம் ஏற்படுவது போன்ற அசாதாரண உடல்ரீதியான விபத்துக்களை உருவாக்குவதோடு, அல்சைமர், டிமென்ஷியா அல்லது மனக்கோளாறுகளின் அறிகுறிகளாகவும் முதியவர்களிடம் காணப்படும் இந்தப்பழக்கத்தை எடுத்துக் கொள்ளலாம்.’’

பொருட்கள் சேகரிப்பு குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிவது?

* சாதாரணமாக நாம் புறக்கணிக்கும் பழைய தபால் அட்டைகள், பத்திரிகைகள், பேப்பர்கள், பழைய ஆடைகள் அல்லது உடைந்துபோன, தூக்கிப்போட வேண்டிய பொருட்களை பத்திரப்படுத்தி வைப்பது.

* தங்கள் அறையின் ஜன்னல், கதவுகளை மூடியே வைத்திருப்பது; எப்போதும் ஜன்னல்களை திரைச்சீலைகளால் மறைத்து வைப்பது; தங்கள் அறைக்குள் வெளி ஆட்களையோ அல்லது குடும்ப உறுப்பினர்களையோ கூட அனுமதிக்காமல் இருப்பது.

* அறைகளை அசுத்தமாகவும், நடமாடக்கூட இடமில்லாமலும் வைத்திருப்பது.

* படுப்பதற்குக்கூட இடம் இல்லாதபடி, படுக்கை முழுவதும் பொருட்களை நிரப்பி வைத்திருப்பது.

* சமையலறையில் இருக்கும் பாத்திரங்களையோ, பாத்ரூமில் உள்ள வசதிகளையோ அடையாளம் தெரியாமல் அல்லது பயன்படுத்த தெரியாமல் தவிப்பது; பொருட்களை மாற்றி வைத்துவிட்டு தேடுவது; டேபிள், தரை எங்கும் பொருட்களை பரப்பி வைத்து, வீட்டிற்குள் தாராளமாக நடமாட முடியாமல் திண்டாடுவது.

* அளவுக்குமீறி பொருட்களை வாங்குவது மற்றும் பொருட்களின் மீது அதீத பற்று கொள்வது.

* நிறைய செல்லப்பிராணிகளை வீட்டுக்குள் கொண்டு வந்து, அவற்றை பராமரிக்காமல் இருப்பது.

இவையெல்லாம் ஒருவருக்கு தீவிர பொருட்கள் சேகரிப்பு குறைபாடு இருப்பதற்கான அடையாளங்கள். அவர்கள் மீது கவனம் செலுத்தவேண்டிய அவசர நிலையில் இருப்பதை கவனத்தில் கொண்டு அவருக்கு தேவையான சிகிச்சைகளும், உதவிகளும் செய்ய தொடங்க வேண்டும்.’’
ஹோர்டிங் டிஸ் ஆர்டர் குறைபாடுள்ளவர்களை எப்படி கையாள்வது?

‘‘அன்புக்குரியவர்களின் மனநலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், குறைபாடு இருப்பதை அடையாளம் கண்டவுடன் முதலில் அவர்களிடம் அன்பாக பேசத் தொடங்குங்கள். உன்னுடைய பொருட்களை எங்கேயும் எறிந்துவிட மாட்டோம்.

அவற்றை இந்த ரூமிலிருந்து அந்த ரூமிற்கு மட்டுமே மாற்றி வைக்கிறோம் என்று எடுத்துச் சொல்லி, பின்னர், மெதுவாக அவற்றை அப்புறப்படுத்த முயற்சிக்கலாம். நிலைமை மோசமடைவதற்கு முன் மனநல மருத்துவரிடம் கூட்டிச்சென்று, சிகிச்சையை ஆரம்பித்துவிட வேண்டும்.  

இதற்கு புலனுணர்வு சார் நடத்தை சிகிச்சை(Cognitive Behavioral Therapy)தான் சிறந்த சிகிச்சையாக இருக்க முடியும். குழு சிகிச்சையும் நல்ல பலனை அளிக்கக்கூடியது. பொதுவாக மருந்துகளோடு, சிகிச்சையையும் இணைத்து கொடுக்கப்படும்போது இந்த குறைபாட்டிலிருந்து மீள சில மாதங்களோ அல்லது சில வருடங்களோ ஆகலாம்.

இருந்தாலும், இந்த குறைபாட்டிற்கு உள்ளான தங்களுடைய வயதான பெற்றோர்களிடத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காட்டும் அக்கறையும், அன்பும் அவர்களை வெகு சீக்கிரத்தில் குணமடையச் செய்யும்.

மேலும், முன்னதாக நோயை கண்டறிந்து, எவ்வளவு சீக்கிரம் சிகிச்சையை தொடங்குகிறோம் என்பதையும் ஒருவர் குணமடையும் கால அளவைக் குறைக்கும்’ என்ற நம்பிக்கையைத் தருகிறார்.நிறைவாக இதையும் நினைவில் கொள்ளுங்கள்... பொருட்களை சேமிக்கும் கிடங்கல்ல உங்கள் வீடு; நீங்கள் வசிப்பதற்கானது!’’

- என்.ஹரிஹரன்