9 லட்சம் சிசேரியன்கள் தவிர்க்கக் கூடியவை! மருத்துவ மாணவரின் அதிர்ச்சி ஆய்வறிக்கை



செய்திகள் வாசிப்பது டாக்டர்

‘பணத்துக்காக சிசேரியன் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்ற குற்றச்சாட்டு தனியார் மருத்துவமனைகள் மீது ஏற்கெனவே இருந்து வருகிறது.
‘தேவையைக் கருத்தில் கொண்டே செய்யப்படுகிறது. ஒரு சில மருத்துவமனைகள் வேண்டுமானால் அப்படி இருக்கலாம்’ என்று அதற்கான பதிலையும் மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது ஒரு புதிய ஆய்வு.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் அம்பிரிஷ், இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். ‘சுகப்பிரசவத்தில் ஏற்படும் சிக்கலைத் தடுப்பதற்காக சிசேரியன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இப்போது தனியார் மருத்துவமனைகளில் மிகப் பெரிய வர்த்தகமாக சிசேரியன் மாறிவிட்டது.

இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 70 லட்சம் குழந்தைகள் சிசேரியனால் பிறக்கின்றன. இவற்றில் 9 லட்சம் சிசேரியன்கள் தடுக்கக்கூடிய மற்றும் தேவை இல்லாதவை. குறிப்பாக, பணத்தை குறிக்கோளாகக் கொண்டு இந்த சிசேரியன்கள் செய்யப்படுகின்றன.

தேவையற்ற நிலையில் செய்யப்படும் சிசேரியன்கள் காரணமாக பணம் செலவு ஆவது மட்டுமின்றி பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதும் தாமதமாகிறது. குழந்தைக்கு குறைந்த எடை, சுவாசக் கோளாறு உள்ளிட்டவை ஏற்படும் அபாயமும் உள்ளது. 13.5 முதல் 14 சதவிகிதம் பெண்கள் அதிகமாக தனியார் வசதிகளை விரும்பி தேர்வு செய்வதன் காரணமாக திட்டமிடப்படாத சிசேரியன்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் 40.9 சதவிகித குழந்தை பிறப்புகள் சிசேரியன் மூலமாகவே  செய்யப்படுகின்றன என்று கடந்த 2015-2016-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இதுவே அரசு மருத்துவமனைகளில் 11.9 சதவிகித சிசேரியன்களே செய்யப்படுகிறது.

தனியார் மருத்துவமனையில் சுகப் பிரசவத்துக்கு ஆகும் செலவு சராசரியாக ரூ.10,814 ஆகவும், சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும்போது ஆகும் செலவு ரூ.23,978 ஆகவும் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படும் சிசேரியன்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு அரசு பொது மருத்துவமனைகளில் நல்ல சிகிச்சைக்கான வசதிகளை வலுப்படுத்த வேண்டும்’ என்கிறார் அம்பிரிஷ்.
 

- அஜி