இமைக்கா விழிகள்



தெரிந்துகொள்வோம்

மருத்துவத்தில் அபூர்வமான, விநோதமான பல பிரச்னைகள் உண்டு. அவற்றில் இமை மூடாமை என்பதும் ஒன்று. கண் இமைகளை மூட முடியாத இந்நிலையை Lagophthalmos என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.
இந்த வார்த்தை கிரேக்கச் சொல்லான லாகோஸ் என்பதில் இருந்து உருவானது என்கிறார்கள். லாகோஸ் என்ற கிரேக்க சொல்லுக்கு முயல் என்று பொருள். முயல் கண்ணைத் திறந்து வைத்துக்கொண்டே உறங்கும் என்று நம்பப்படுவதால் இத்தகைய பெயர் அமைந்ததாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

பரவலாக அறியப்படாத இப்பிரச்னை பற்றி தெரிந்துகொள்வோம்…
Lagophthalmos என்பது இமைகளை மூட முடியாத நிலையாகும். உறங்கும்போது மட்டும் மூட முடியாத நிலை ஏற்படுவதற்கு Nocturnal lagophthalmos என்று பெயர். சில நேரங்களில் ஏதேனும் ஒரு நோயின் அறிகுறியாகவோ தென்படலாம். எனவே, கண் சிமிட்டுவதிலோ அல்லது இமைகளை மூட முடியாத நிலை ஏற்பட்டாலோ கண் சிகிச்சை மருத்துவரை சந்திப்பது நலம் என்று ஆலோசனை சொல்கிறார்கள்.

கண் இமைகளை மூட முடியாததுதான் இதன் முதல் அறிகுறியாகும். மேலும், கண்ணீர் அதிகம் வருவது, கண்ணில் அந்நியப் பொருட்கள் உறுத்துவது போன்ற உணர்வு, கண்களில் வலி, எரிச்சல் போன்றவை. குறிப்பாக, காலை நேரத்தில் இந்த அறிகுறிகள் இருப்பது போன்றவை கவனிக்க வேண்டிய அறிகுறிகள்.

 இமை மூடாமையில் பல வகைகள் இருக்கின்றன. இதில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் இரண்டு வகைகளைப் பார்ப்போம். முதல் வகை மண்டையோட்டின் நரம்பு சேதமடைவது, இந்த நரம்புதான் கண் இமைகளின் தசைகளைக் கட்டுப்படுத்துகிறது. இது Facial nerve என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இந்த நரம்பு பாதிக்கப்படுவதற்கு காயம், ஆழமான காயங்கள், பக்கவாதம், கட்டிகள், முகவாதம் என்கிற Bells palsy, ஆட்டோ இம்யூன் நோய் எதிர்ப்பு போன்றவை காரணமாக அமையும்.

இரண்டாவதாக கண் இமையைக் காயப்படுத்தும் காரணிகள் இதுவாக இருக்கலாம். தீக்காயத்தால் ஏற்படும் தழும்பு, காயங்கள், ஏற்கெனவே இருக்கும் உடல்நலக் கோளாறுகள். மருத்துவரை சந்திக்கும்போது ஏற்கெனவே ஏதேனும் காயங்கள் ஏற்பட்டிருக்கிறதாஅல்லது நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை விளக்க வேண்டும். அதன் அடிப்படையில் மருத்துவர் சில பரிசோதனையை செய்வார்.

இமைகளைச் சரிவர மூட இயலாமையால் ஏற்படுபவை

*கண்ணீர் ஆவியாதல் அதிகரித்தல்
*மோசமான கண்ணீர்ப்படலப் பரவல்
*கண்ணீர் படலத்தின் சளி அடுக்குக் கூறு முறிதல்
*வெண்படலம் உலர்தல்
*கண் பரப்பு உடைதல்

கண் மூடாமையின் காரணங்கள்

*கண் கோளம் முன்னோக்கி பிதுங்குதல்
*செங்குத்து மேல் அல்லது கீழ் இமை குறுகல்
*முன் தள்ளும் விழிக்குழி வட்டத் தசை செயலிழப்பு
*ஏழாவது மண்டையோட்டு உள் நரம்பு செயலிழப்பு
*இமைக் கோள ஒட்டு உருவாதல்.

இமை மூடுவது எனப்படுவது கீழ் நோக்கி இறங்கும் மேல் இமையின் செயல்பாடு. கண்களை மூடும்போது கீழ் இமை மேல் நோக்கி மிகச் சிறிய அளவே நகர்கிறது. ஆகவே, மேல் இமையின் செயல்பாடு சரியாக இருந்து கீழ் இமையின் நகர்ச்சி சிறிதளவோ அல்லது இல்லாமலோ இருந்தாலும் அறிகுறிகள் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்தால் நோயாளிகள் இதைப் பெரிதுபடுத்துவதில்லை.

சுற்று விழிக் கோளாறுகள் இல்லாத சில நோயாளிகள் தங்கள் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே தூங்க முடியும். இவர்களுள் ஒரு சிலர் கண் வெளிப்படுதல் அறிகுறிகளால் துன்புறுவர். இவர்களில் பெரும்பான்மையோர் பெல் நிகழ்வால் பாதுகாக்கப்படுகின்றனர் (இமையை மூடும்போது கண் கோளம் மேல் செல்லுதல்). பகலில் இமைமூடாமைக் கோளாறு கொண்டவர்களுக்கு கண் பரப்பு சிதைவு அறிகுறிகள் தோன்றும்.

மீளாத்துயில் நிலை நோயாளிகளுக்கு இமை மூடாமை பெரும்பாலும் காணப்படும். ஏழாவது உள் மண்டையோட்டு நரம்பு வலு போதுமானதாக இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணம். மேலும், இந்த நோயாளிகளுக்கு ஐந்தாவது உள்மண்டையோட்டு நரம்பு செயலிழப்பும் இணைந்து காணப்படலாம். இதனால் வெண்படல மேற்திசு சிதைவு ஏற்படும் ஆபத்து உண்டு.

நோய் கண்டறியும் முறை

மருத்துவ ரீதியாகவே நோய் கண்டறியப்படுகிறது. ஒரு கண் மருத்துவரால் பிளவு விளக்கு சோதனை செய்யப்படுகிறது. இதில் இமைக்கிடை புள்ளி மேற்திசு வெண்படல நோய் காணப்பட்டால் இமை மூடாமை அல்லது அரைகுறை இமைப்பு என்று கண்டறியப்படும். இரவு இமைமூடாமை நோயாளிகளில் வெண்படல இருப்புநிலையைப் பொறுத்துப் புள்ளி மேற்திசு வெண்படல நோய்பரவல் அமையும்.

நோயாளி மெதுவாக கண்களை மூடும்போது முழு இமை மூடலுக்கான புற சோதனை செய்யப்பட வேண்டும்.முகமுடக்கு வாதம், காயம் அல்லது மருத்துவ விளைவு காயம் ஆகியவற்றால் ஏற்படும் கடும் ஏழாவது மண்டையோட்டு நரம்பு செயலிழப்பால் இமை மூடாமை உருவாகலாம். நுட்பமான கண் சுற்று வட்டத்தசை பலவீனம் கொண்ட நேர்வுகளில், பலவந்தமாக மூடும்போது ஏற்படும் உடலியலான இமை திசை திருப்பம் பலவீனத்தை வெளிப்படுத்தும். இதனால் இரவு கண் மூடாமை அல்லது அரைகுறை இமைத்தல் ஏற்படும்.

ஐந்தாவது மண்டையோட்டு நரம்பு செயலிழப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்த வெண்படல உணர்திறனை அறிவது முக்கியம்.இமை மூடாமை சந்தேகம் உள்ள நோயாளிகளின் மேல் கீழ் இமைத் தோல் செங்குத்துப் பரிமாணத்தை மதிப்பிடுதல் அவசியம்.

கீழ் இமையில் பொதுவாக செங்குத்து குறைபாடு தெளிவாகத் தெரியும். இது வெண்படல வெளித்தெரிகை அல்லது இமை பின்வலித்தல் ஆகக் காணப்படும். இருப்பினும் மேல் இமைகளில் இமை விளிம்பு இயல்பான உயரத்திலேயே நிற்கும். இமையைக் கீழ் இழுக்கும் போதே செங்குத்துத் தோல் குறைவு வெளிப்படையாகத் தெரியும்.

இமை மூடாமைக் கோளாறு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் அனைத்து நோயாளிகளிலும் மேல் இமை உயர்த்தும் தசை செயல்பாடு அளக்கப்பட வேண்டும். இயல்பான அளவுக்கு தோல் இருந்தாலும் மேல் இமை நகர்வு போதுமானதாக இல்லாத நோயாளிகளுக்கு இமைமூடாமை இருக்கக்கூடும்.

மேல் விதானத்தில் குமிழ் மற்றும் இமைசார் கண்சவ்வுக்கு இடையில் இணை இமை இருந்தாலும் மேல் இமையின் கீழ்நோக்கிய நகர்ச்சியை அது கட்டுப்பட்டுத்துவதால் இமைமூடாமையை உண்டாக்கும். கோளம் வெளிப்பிதுங்குதல் காரணமாகக் கண் மூடும்போது இமை நகர்ச்சி வெண்படலத்தை மூடும் அளவுக்குப் போதுமானதாக இல்லாமல் போகிறது. இமை வீழ்ச்சியோடு இணைந்த இமைமூடாமை வெளித்தோன்றல் வெண்படல நோயை உருவாக்கும்.

இரவு இமைமூடாமை விழிக்கும்போது அயல் பொருள் உணர்வையும் நீரொழுகலையும் உண்டாக்கும்.ஏழாவது மண்டையோட்டு நரம்பின் வலு போதுமானதாக இல்லாமல் இருப்பதால் ஆழ்மயக்க நோயாளிகளில் பெரும்பாலும் இமை மூடாமை காணப்படும்.இமை மூடாமைக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகளும், அறுவை சிகிச்சை அல்லாத வழக்கமான சிகிச்சைகளும் இருக்கின்றன. செயற்கையான கண்ணீர் (Artificial tears) போன்ற திரவ மருந்தை அளிப்பது முதல் சிகிச்சை.

இதன் மூலம் இமைகளை மூட முடியும். இதன்மூலம் கண்கள் உலர்வதிலிருந்தும், அரிப்பு ஏற்படுவதிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும். கண்களைப் பாதுகாக்கும் ஆயின்மெண்ட்டுகளையும் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

இமை மூடாமை என்பது ஆபத்துக்குரிய நோய் ஒன்றும் அல்ல. அதே சமயத்தில் கண் சார்ந்த சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் சாத்தியம் உண்டு. பிரச்னையின் தன்மை எப்படி இருக்கிறது என்பதன் அடிப்படையில் மருத்துவர் முடிவெடுப்பார். இமைகளின் ஈரப்பதத்துக்கான மருந்துகள் வழங்குவதா அல்லது அறுவை சிகிச்சையா என்பது நோயாளியைப் பரிசோதிக்கும்போதுதான் தெரிய வரும்.

- ஜி.ஸ்ரீவித்யா