குழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்



அதிர்ச்சி

‘‘பொதுவாக உயர் ரத்த அழுத்தம் என்பது வயது வந்தவர்களை மட்டுமே பாதிக்கிற பிரச்னை. அப்படித்தான் இதுவரை நினைத்திருந்தோம். காலமாற்றத்தின் காரணமாக குழந்தைகளுக்கும் நீரிழிவு வருவது போல, இப்போது குழந்தைகளும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்’’ என்ற அதிர்ச்சி தகவல் சொல்கிறார் இதய சிகிச்சை மருத்துவரான நரேந்திர குமார். குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் பெற்றோரும், ஆசிரியர்களும் இதுகுறித்து அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்துகிறார்.

‘எனக்கு செம டென்ஷன்’ என்ற வாசகத்தை இன்றைய குட்டிக் குழந்தைகளிடம்கூட கேட்க முடிகிறது. கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைப் பருவ உயர் ரத்த அழுத்தம் என்ற பிரச்னை நம்மிடையே உள்ளது. வழக்கமாக உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உண்டாக உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை மற்றும் உடற்பருமன் காரணமாக உள்ளது.

இது இன்றைய குழந்தைகளுக்கும் பொருத்தமான காரணமாகவே உள்ளது. மைதானத்தில் குழந்தைகள் விளையாடுவது குறைந்துவிட்டது. செல்போனிலும், வீடியோகேமிலும் பெரும்பாலும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நொறுக்குத் தீனிகள் மற்றும் ஆரோக்கியக் கேடான பானங்களையே குழந்தைகள் உண்டு வருகிறார்கள்.

இதனால் இன்றைய குழந்தைகளில் 3.5 சதவீதம் பேருக்கு குழந்தைப் பருவ ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 10 முதல் 11 சதவீதம் குழந்தைகளிடம் ரத்த அழுத்தம் உள்ளது. குழந்தைப் பருவத்திலேயே உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு ரத்தக்குழாய் நோய்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

உயர் ரத்த அழுத்தம் உள்ள இளம் பருவத்தினரிடம் விரைவுபடுத்தப்பட்ட ரத்தநாள முதிர்ச்சி பிரச்னைக்கான வாய்ப்புகள் அதிகமாகவும் உள்ளன. வளர்ந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதத்தினருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆய்வுகள் இன்னும் இந்திய அளவில் நடத்தப்படவில்லை. ஆனால், நம் நாட்டில் பள்ளிக் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 2 முதல் 5 சதவீதம் குழந்தைகளிடம் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இன்று உயர் ரத்த அழுத்தம் ஒரு அத்தியாவசியப் பிரச்னையாக மாறியுள்ளது.

உயர் ரத்த அழுத்தம் அல்லது சிறுநீரகம், நாளமில்லா சுரப்பிகளில் கோளாறுகள் மற்றும் இதன் விளைவாக ஏற்படும் இரண்டாம் நிலை உயர் ரத்த அழுத்தம் என வகை பிரிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக நிலையாகவும், கடுமையான அல்லது உயர் ரத்த அழுத்தத்துக்கான அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு ஏதாவது நோய் அவர்களை அடிக்கடி தாக்கும். நாள்பட்ட உடல்நலக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். தீவிரமான நோய்த்தாக்குதலுக்கு ஆளாகவும் வாய்ப்புள்ளது. இவர்களுக்கு வயதாகும் போது ரத்தக் குழாய் அடைப்பு மற்றும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது இளம் வயதிலேயே கூட இவர்களைத் தாக்கலாம்.

குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளதா எனக் கண்டறியும் பரிசோதனைகள் மீது விழிப்புணர்வு ஓரளவு அதிகரித்துள்ளது. இது சற்று ஆறுதலான விஷயம். இது இன்னும் அதிகரிக்கும் விதமாக 3 வயதுக்கு மேற்பட்ட அனைத்துக் குழந்தைகளிடமும் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என AAP/IAP பரிந்துரை செய்கிறது.

யாருக்கெல்லாம் இப்பரிசோதனை அவசியம்?

* குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள்.
* மிகக் குறைந்த உடல் எடையுடன் பிறப்பது, பிறந்த போது தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த குழந்தைகள்.
* இதய நோயுடன் பிறந்தவர்கள்.
* சிறுநீர்ப்பாதைத் தொற்று திரும்பத் திரும்ப ஏற்படுகிறவர்கள்.
* பிறப்பில் இருந்தே சிறுநீரகக்
கோளாறுடன் இருத்தல்.
* உடலுறுப்பு மாற்றப்பட்ட பின்னர் ஏற்படும் புற்றுநோய்.
* சிறுநீரகம் அல்லது இதய நோய் மற்றும் வலிப்பு நோய்த்தாக்கம் உள்ள குழந்தைகள்.
* உணர்திறனில் மாற்றங்கள், தலைவலி மற்றும் பார்வைத்திறன் கோளாறுகள்.

மேற்கண்ட அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கு கண்டிப்பாக ரத்த அழுத்தப் பரிசோதனை செய்யப்பட வேண்டும். ரத்த அழுத்த பாதிப்பை அறிந்து அதற்கான சிகிச்சை அளிக்க இப்பரிசோதனை மிக அவசியம். ஆம்புலேட்டரி முறையில், அதாவது நாள் முழுவதும் குழந்தைகளின் ரத்த அழுத்தம் இப்பரிசோதனையில் கண்காணிக்கப்படுகிறது. இதனால் உண்மையான ரத்த அழுத்தம் துல்லியமாகப் பிரதிபலிப்பதாக நம்பப்படுகிறது. உடல் உறுப்பில் ஏற்பட்டுள்ள சேதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. தொடர்ந்து குழந்தைகளிடம் உயர் ரத்த அழுத்தம் இருக்குமானால் அது அவர்களுக்கு ஏற்கனவே உள்ள சிறுநீரகப் பிரச்னையின் இரண்டாம் நிலை நோய் அறிகுறியாக இருக்கலாம்.

சமீப ஆண்டுகளில் உயர் ரத்த அழுத்தமானது ஒரு முக்கியமான சுகாதாரப் பிரச்னையாக மாறியுள்ளது. இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகள் பெரும்பாலும் பூப்படைதலுக்குப் பிந்தைய நிலையிலும், அதிக உடல் பருமன் உள்ளவர்களாக இருக்கின்றனர்.

நோய் பாதிப்புகள்

உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ள குழந்தைகளிடம் அதற்கான அறிகுறிகள் பெரும்பாலும் தெரிவதில்லை. ஆனால், வேறுவிதமான அறிகுறிகள் அவர்களிடம் காணப்படுகிறது:

* கடுமையான உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ள குழந்தைகள், உயர் ரத்த அழுத்த அவசர நிலைக்கு ஆளாகும் ஆபத்தில் உள்ளனர்.

* தொடர்ந்து நிலையான உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு கண்கள், இதயம், சிறுநீரகங்கள், மூளை மற்றும் ரத்த நாளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

நோய் மேலாண்மை

பிரதான உயர் ரத்த அழுத்தத்தில் இருந்து இரண்டாம் நிலை ரத்த அழுத்தத்தை வேறுபடுத்திப் பார்ப்பது முக்கியம். உயர் ரத்த அழுத்தத்தின் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களுக்கு வாழ்க்கைமுறை மாற்றங்கள் அவசியமானதாக இருக்கும். இரண்டாம் நிலை உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தத்துக்கு எதிரான மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிகிச்சை முறை

பிரதான உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு ஆரம்ப நிலையில் வாழ்க்கை முறைத் திருத்தங்கள், மாற்றங்களின் வழியாக சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். 6 மாத கால அளவில் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும் 95 சதவீதத்துக்கும் கீழ் ரத்த அழுத்தம் குறையாமல் இருக்கும் பொழுது  அல்லது சிறுநீரக நோய், நீரிழிவு அல்லது ரத்தத்தில் அதிகளவு கொழுப்புகள், உடலுறுப்புகளில் சேதம் ஏற்பட்டிருந்தால் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும்.

வாழ்க்கைமுறை மாற்றங்களில் குழந்தைகள் உயர் ரத்த அழுத்தப் பிரச்னையில் வெளியில் வர அதிகம் உதவுகிறது. உடல் எடையைக் குறைப்பது, உப்புச்சத்துடன் ரத்த அழுத்தத்திற்கான உணர்திறனைக் குறைக்கிறது. இதய நோய்க்கான ஆபத்தையும் குறைக்கிறது. சரியான உடல் எடையைக் கொண்டிருப்பது அவசியம்.

10 சதவீதம் அளவுக்கு உடல் நிறைக் குறியீட்டு எண்ணை(BMI) குறைப்பது ரத்தத்தில் 8-12 mm Hg குறைய வழி வகுக்கும். உடல் சார்ந்த உழைப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு முறையில் மாற்றங்கள் வழியாக உடல் எடையைக் குறைக்க வேண்டும். அதிகமாக உடல் எடை அதிகரிக்காமல் தடுப்பது, எதிர்காலத்தில் ரத்த அழுத்தம் உயர்வதை மட்டுப்படுத்தும்.

குழந்தைகள் பின்பற்ற வேண்டிய உடற்பயிற்சிகள்

உடல் எடைக் கட்டுப்பாட்டிற்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த உடல் நலனுக்கும் உற்சாகமாக விளையாட குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட உடற்பயிற்சிகளான ஏரோபிக்ஸ், டிரெட்மில்லில் நடப்பதும் சிலருக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். அன்றாட செயல்பாடுகளையே உடற்பயிற்சிக்கான வாய்ப்பு இருக்கும்படி மாற்ற முடியும். பள்ளிக்கு நடந்து செல்வது, சைக்கிளில் செல்வது, வெளியிடங்களில் நண்பர்களுடன் விளையாடுவது, மற்றும் நீச்சல் பயிற்சியும் தொடர்ந்து செய்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுவதுடன் உடல் இயக்கம் சார்ந்த பயிற்சிகள் தொடர்ந்து அவசியமாகிறது. 30 முதல் 60 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டியதும் அவசியம். வளர் இளம் பருவ சிறுமிகளுக்கும் இத்தகைய விளையாட்டுகள் மிகத் தேவையாக உள்ளது.

உணவு முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்உணவில் உப்பின் அளவைக் குறைப்பது நல்லது. உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், பீட்சாக்கள், ஊறுகாய்கள், உப்பு சேர்க்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் உட்பட்ட துரித உணவுக்கடைகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். பசுமையான காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கொழுப்பு அகற்றப்பட்ட பால் பொருட்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டாம் நிலை உயர் ரத்த அழுத்தம்

இரண்டாம் நிலை உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு உயர் ரத்த அழுத்த எதிர்ப்பு மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இருக்கும். கடுமையான ரத்த அழுத்தம் உள்ள குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்த அவசர நிலைகளினால் ஏற்படும் ஆபத்தை மருத்துவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

குழந்தைப் பருவத்தில் தோன்றும் ரத்த அழுத்தத்தை கவனிக்காமல் விடுவது அவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை பாதிக்கும். மிக இளம் வயதில் இதய நோயாளியாகவும், பலவிதமான நோய்களின் பாதிப்புக்கு ஆளாகவும் வாய்ப்புள்ளதால் விரைவில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.

- கே.கீதா