நிமோனியாவுக்கு புதிய தடுப்பு மருந்து!



மகிழ்ச்சி

நிமோனியாவைத் தடுக்கும் விதமாக தடுப்பு மருந்தை வெற்றிகரமாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். இதன் பரிசோதனை நிறைவு கட்டத்தில் இருப்பதால் விரைவில் இந்த மருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நுண்கிருமிகளின் தொற்று காரணமாக நுரையீரலில் ஏற்படும் அழற்சியை நிமோனியா என்கிறோம். காற்று மூலமாக நிமோனியா ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு வேகமாகப் பரவும் தன்மை கொண்டது. உலகெங்கும் ஆண்டுக்கு 20 லட்சம் பேரை கொல்லும் அபாயகரமானதாகவும் இந்நோய் இருக்கிறது என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி, 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மரணத்தில் மட்டுமே 16 சதவீதம் நிமோனியா தொற்றினால் ஏற்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களும் நிமோனியாவால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதனால் வரும் முன்னர் காக்கும் முயற்சியாக இதற்கான தடுப்பு மருந்தை தயாரிக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்சமயம் இந்த ஆராய்ச்சி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. பரிசோதனை அடிப்படையில் புதிய தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு கொடுத்து சோதிக்கும் முயற்சியும்
துவங்கியுள்ளது.

நிமோனியாவை உண்டாக்கும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே(Streptococcus pneumoniae) கிருமியில் 98 வகைகள் உள்ளன. ஆனால், தற்போதுள்ள நிமோனியா தடுப்பு மருந்துகள் 13 வகை கிருமிகளை மட்டுமே எதிர்க்கும் திறன் கொண்டவை. எனவே, அனைத்து கிருமிகளையும் எதிர்க்கும் வண்ணம் இந்த புதிய தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஜி.பி.என்., வேக்சின்ஸ் நிறுவனமும் அடிலெய்டு பல்கலைக்கழக தொற்று நோய்கள் ஆய்வு மையமும் இணைந்து இந்த மருந்து தயாரிப்பினை மேற்கொண்டிருந்தனர். இம்முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. எனவே, விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும், நிமோனியாவில் இருந்து மனிதகுலத்துக்கு விடிவு பிறக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறது மருத்துவ உலகம்!

- கௌதம்