கன்னியாகுமரி மருத்துவமனை



ரவுண்ட்ஸ்

கன்னியாகுமரிக்குப் பல்வேறு சிறப்புகள் உண்டு. ‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை’ என்று சொல்லப்படும் அளவுக்கு இந்தியாவின் தெற்கு எல்லைப் பகுதியாக கன்னியாகுமரி விளங்குகிறது. விவேகானந்தர் தியானம் செய்த இடம், வான் புகழ் கொண்டதாக வள்ளுவருக்கு சிலை அமைந்த இடம் என்று பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளமாகவும் சிறப்பு கொண்டது கன்னியாகுமரி.

மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் மலைகளாலும் சூழப்பட்டு குறிஞ்சி, நெய்தல் நிலங்கள் சங்கமிக்கும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதி இது. சுதந்திரத்துக்குபின் கேரளாவில் இணைக்கப்பட்டு பெரும் போராட்டங்களுக்கு பின், தமிழகத்தோடு இணைந்த பகுதியும் கூட.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த குமரி மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் ரவுண்ட்ஸ் வந்தோம். மருத்துவக்கல்லூரி பொறுப்பு முதல்வரும், மருத்துவமனை கண்காணிப்பாளருமான ராதாகிருஷ்ணன் மருத்துவக் கல்லூரியின் வரலாற்றை நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.

‘‘பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த மன்னராட்சி பகுதிகளில் திருவிதாங்கூர் சமஸ்தானமும் ஒன்று. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் இருந்தது. சுதந்திரத்துக்குபின் இந்திய யூனியனுடன் மன்னராட்சி பகுதிகள் ஒவ்வொன்றாக இணைக்கப்பட்டன. 1949-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானம் கேரள மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. பெருவாரியான மக்கள் தமிழர்களாக இருந்ததால் பெரும் போராட்டங்களுக்குபின், தாய்த்தமிழகத்துடன் 1956-ம் ஆண்டு நவம்பர் முதல் தேதி குமரி மாவட்ட பகுதி இணைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாகர்கோவில் கோட்டாரில் அரசு மருத்துவமனையே மாவட்ட தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது. இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை மேல்சிகிச்சைக்காக நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய நிலை இருந்தது. மக்கள்தொகை பெருக்கம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், கன்னியாகுமரி மாவட்டத்துக்கென தனி மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டியது அவசியமானது. 2001ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி மருத்துவக்கல்லூரி அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதற்காக கோட்டாரில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள ஆசாரி பள்ளத்தில் செயல்பட்டுவந்த காசநோய் மருத்துவமனைவளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. 110 ஏக்கர் நிலம் இந்த மருத்துவமனைக்காக கையகப்படுத்தப்பட்டது. காசநோய் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டதால், பேச்சு வழக்கில் எங்கள் மருத்துவமனையை ‘டி.பி ஹாஸ்பிட்டல்’ என்றே அழைக்கின்றனர்.

2001-02 கல்வியாண்டில் எங்கள் மருத்துவக்கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள அனுமதி கிடைத்தது. தற்போது 35-க்கும் மேற்பட்ட உயர் தர சிகிச்சை பிரிவுகளில் நாங்கள் சிகிச்சை அளிக்கிறோம். மருத்துவமனையை தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும் என்பதை எப்போதும் மனதில் வைத்து நாங்கள் பணியாற்றுகிறோம்.

நான் காலையில் பணிக்கு வந்ததும், முதல் வேலையாக ரவுண்ட்ஸ் செல்வேன். மருத்துவமனையின் அனைத்து பகுதிகளின் தூய்மையை உறுதிப்படுத்திவிட்டுதான், என்னுடைய அறைக்கு செல்வேன். நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 3,000 பேர் வரை புற நோயாளிகளாக வருகிறார்கள். அவர்களில் நோய் பாதிப்பை பொறுத்து 700-க்கும் அதிகமானோர் உள் நோயாளியாக இருக்கிறார்கள்.

இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பு தொற்றா நோய் பிரிவு தனியாக இயங்கி வருகிறது. மெயின் பில்டிங்கின் முதல் தளத்தில் நோயாளிகள் பதிவு செய்யும் இடம், ஆண்கள், பெண்கள் அறுவை சிகிச்சை பிரிவு, மருந்து கட்டும் பிரிவு, தொற்றா நோய் பெண்கள் பரிசோதனை அறை, மகளிர் நோய் சிகிச்சை பிரிவு, கர்ப்ப கால முன் மற்றும் பின் கால கவனிப்பு பிரிவு, ரத்த மாதிரிகள் சேகரிப்பு அறை, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு என 18 சிகிச்சை பிரிவுகள் இருக்கின்றன. முதல் தளத்தில் பல் மருத்துவ பிரிவு, தோல் மற்றும் பால்வினை நோய் சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நல பிரிவு, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு உள்பட 10 சிகிச்சை பிரிவுகள் இருக்கின்றன.

பச்சிளம் குழந்தைகள் நலப்பிரிவு, குடல் வால்நோய் சிகிச்சை பிரிவு, சிறுநீரக துறை, இருதய சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவுகள், முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்ட சிகிச்சை பிரிவுகள் போன்றவை கூடுதல் பொது மருத்துவ கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. மருத்துவக் கல்லூரியில் தற்போது ஆண்டுக்கு 100 மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுகிறார்கள். விரைவில் இந்த எண்ணிக்கை 150 ஆக உயர உள்ளது. நர்சிங், மெடிக்கல் டெக்னீஷியன் படிப்புகளையும் நாங்கள் நடத்துகிறோம்.

எங்கள் மருத்துவமனையில் டயாலிசிஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவுக்கு நோயாளிகள் வருகிறார்கள். டயாலிசிஸ் சிகிச்சைக்காக கூடுதலாக 20 இயந்திரங்களை கேட்டு அரசுக்கு கடிதம்
எழுதியுள்ளோம். எங்கள் மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்காக ‘தயா கேந்திரம்’ என்ற பெயரில் தங்கும் விடுதி ஒன்றை அமைத்துள்ளோம். குறைந்த வாடகையில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக 50 படுக்கை வசதியுடன் இந்த தங்கும் இல்லம் செயல்பட்டு வருகிறது. இது பெரிதும் உதவியாக உள்ளதாக நோயாளிகள் குடும்பத்தினர் சொல்கின்றனர்.

நோயாளிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பு சிகிச்சை பிரிவுகளை தமிழக அரசு தந்துள்ளது. ரூ.170 கோடியில் குமரி மாவட்டத்துக்கு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது’’.

ஆறுமுக வேலன் (மருத்துவ நிலைய அதிகாரி)‘‘இங்கு 220 டாக்டர்களும், 300 செவிலியர்களும் பணியாற்றி வருகிறோம். தனியார் மருத்துவமனைகளில் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்குகூட சிறந்த முறையில் நாங்கள் தீர்வு கண்டுள்ளோம். தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர கால பராமரிப்பு பிரிவு (TAEI) விரைவில் வர உள்ளது. இந்த பிரிவு வரும் பட்சத்தில் விபத்தில் சிக்குபர்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும்.’’

அருண் வர்கீஸ் (சிறுநீரகவியல் துறை உதவி பேராசிரியர்)

‘‘டயாலிசிஸ் செய்வதற்காக நாள் ஒன்றுக்கு 25-லிருந்து 30 பேர் வரை வந்து செல்கிறார்கள். வாரத்தில் செவ்வாய், சனிக்கிழமைகளில் புற நோயாளிகளாக 120 பேர் வரை வருகிறார்கள். ஒரு நபருக்கு 4 மணி நேரத்தில் டயாலிசிஸ் முடிக்கிறோம். 10 வயதில் இருந்து 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள் வரை வருகிறார்கள். டயாலிசிஸ் சிகிச்சைக்காக எங்களிடம் 17 இயந்திரங்கள் உள்ளன. விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளோம். அதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது.’’

ரமேஷ்குமார் (பச்சிளம் குழந்தைகள் மருத்துவர்)

‘‘பிறந்தது முதல் 28 நாட்கள் வரையிலான குழந்தைகள் பச்சிளம் குழந்தைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். எங்கள் மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு கழுத்து, முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளோம். பிறப்பின்போது எடை குறைவாக உள்ள குழந்தைகள், பிறந்ததும் அழாத குழந்தைகள், மூச்சு விட சிரமப்படும் குழந்தைகளுக்கு பச்சிளம் குழந்தைகள் பிரிவில் CPAP என்ற சுவாச கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்கிறோம். இதே போல் நுரையீரல் வளர்ச்சி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு கூட சிகிச்சை அளித்து, காப்பாற்றியுள்ளோம்.’’

ஜெயலால்(பொது அறுவை சிகிச்சை துறை நிபுணர்)

‘‘பொது அறுவை சிகிச்சை துறையில் மொத்தம் 4 யூனிட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு யூனிட்டில் ஒரு மருத்துவ பேராசிரியர், 2 உதவி பேராசிரியர்கள் உள்பட 11 முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்ளனர். பொது அறுவை சிகிச்சை துறைக்கு 120 படுக்கை வசதிகொண்ட வார்டு, அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளது.

ஒவ்வொரு மாதமும் 150 பெரிய அறுவை சிகிச்சைகளும், 750 சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்கிறோம். நவீன சிகிச்சை வசதிகளான லேப்ராஸ்கோப்பி உள்ளிட்ட சிகிச்சை அரங்குகளும் எங்கள் மருத்துவமனையில் உள்ளது. முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் இலவசமாக, சிக்கலான பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்து உள்ளோம்.’’

ரவிச்சந்திர பாண்டியன் (புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர்)

‘‘எங்கள் பிரிவுக்கு மாதத்துக்கு 200 பேர் வரை பரிசோதனைக்காக வருகிறார்கள். அதிகபட்சமாக மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கே அதிகமாக சிகிச்சை அளித்துள்ளோம். புற்றுநோய்க்கு சிகிச்சை மட்டுமல்லாமல், அவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்துகிறோம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எங்கள் நோயாளியாக இருந்து மீண்டவர்களை வைத்தே நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை, விழிப்புணர்வு அளிக்கிறோம். புற்றுநோய் வந்தால் மரணம் என்ற எண்ணத்தை நோயாளிகள் மாற்றிக் கொள்கிறார்கள். மனரீதியாக நோயாளிகளை தைரியப்படுத்தினாலே பாதி நோய் தீர்ந்து விடும்.’’

பிரனீத் பெல்ஸ் (புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்)

‘‘புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறோம். முதல் ஸ்டேஜ், இரண்டாவது ஸ்டேஜில் இருந்தால் அறுவை சிகிச்சை மேற்கொள்கிறோம். 3வது, 4வது ஸ்டேஜில் இருந்தால் கீமோதெரபி சிகிச்சை அளிக்கிறோம். 21 நாட்களுக்கு ஒருமுறை 6 சுற்றுகளாக கீமோதெரபி அளிக்கிறோம். ஆனாலும் திருவனந்தபுரத்தில் புற்றுநோய் சிகிச்சை மையத்தை நம்பி குமரி மாவட்ட நோயாளிகளில் பெரும்பாலானோர் அங்கு செல்கின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் காத்திருப்போர் பட்டியல் அங்கு அதிகமாகிறது. இதனால், திருவனந்தபுரத்தில் இருந்து எங்கள் மருத்துவமனைக்கே நோயாளிகளை பரிந்துரை செய்து திருப்பி அனுப்புகிறார்கள். புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் சிறப்புப்பிரிவு இங்கு அமைக்கப்பட வேண்டும்.’’

அகஸ்டின் ஜார்ஜ் (நோயாளி - கருங்கல் பகுதி) :

‘‘வயிற்றில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். அரசு மருத்துமவனையில் முறையான சிகிச்சை இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் எனக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்தனர். டாக்டர்கள், நர்சுகள் கணிவுடன் கவனித்துக் கொள்கின்றனர். விரைவில் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்புவேன்.’’

- சுந்தர் பார்த்தசாரதி, ஆ. ஹரிதாஸ்

படங்கள்: ஆர். மணிகண்டன்