குழந்தைகளின் ஜலதோஷம்...



செக் லிஸ்ட்

குழந்தைகளுக்கு ஏற்படும் ஜலதோஷம் பற்றி பல குழப்பங்களும், சந்தேகங்களும் பெற்றோருக்கு உண்டு. இணையதள செய்திகள், கேள்வி ஞானம் போன்ற தவறான வழிகாட்டுதலால் குழந்தையின் ஆரோக்கியத்துடனும் இதனால் பெற்றோர் விளையாடுகிறார்கள். முதலில் குழந்தைகளின் ஜலதோஷத்தை குணப்படுத்த, அது பற்றிய புரிதல் ஏற்பட வேண்டும்... சில கேள்விகளுக்கும் விடை கிடைக்க வேண்டும்.

1.வைட்டமின் சி கொடுத்தால் ஜலதோஷம் சரியாகுமா?

வைட்டமின் சி என்பது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. அது மட்டுமே ஜலதோஷத்திற்கான தீர்வாகாது. தொடர்ந்து வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழக்கினால் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாகும். அதன் விளைவாக அடிக்கடி நோய்வாய்ப்படுவது தவிர்க்கப்படும்.

வைட்டமின் சி எடுத்துக் கொள்ளும் குழந்தைகளுக்கு ஜலதோஷம் மற்றும் இருமல் வந்தால் அவை நீண்ட நாள் நீடிக்காமல் சீக்கிரமே குணமாகலாம். பால், பூண்டு, பசலைக் கீரை, கொய்யாப்பழம், நெல்லிக்காய் போன்றவற்றில் வைட்டமின் சி அதிகம் என்பதால் இவற்றை குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழக்க வேண்டும்.

2.இருமல், சளி, தாய்ப்பால் குடிக்காது... இந்த மூன்றில் எதை எமர்ஜென்சியாகக் கருத வேண்டும்?

குழந்தை தாய்ப்பால் குடிப்பதை தவிர்த்தாலோ, தாய்ப்பால் குடிக்கும்போது சளியால் சிரமப்பட்டாலோ அதை அலட்சியப்படுத்தக் கூடாது. சாதாரண சளி, இருமல் போலத் தெரிவது கூட சில குழந்தைகளுக்கு நிமோனியாவாக மாறி உயிரையே பறித்து விடும் அபாயம் இருக்கிறது. எனவே, பெற்றோர் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது.

3.சளி, இருமல் பிரச்னைக்கு ஆன்ட்டிபயாட்டிக் கொடுத்தால் போதுமா?

சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்கு ஆன்ட்டிபயாட்டிக் எடுத்துக் கொண்டால் போதும் என்கிற எண்ணம் படித்தவர்கள் மத்தியிலேயே இருக்கிறது. ஆனால், பிரச்னைக்கு என்ன காரணம், அது பாக்டீரியா தொற்றினால் ஏற்பட்டதா அல்லது வைரஸ் தொற்றினால் ஏற்பட்டதா என்பது தெரியாமல் பாக்டீரியாவை மட்டுமே கொல்லும் ஆன்ட்டிபயாட்டிக் எடுத்துக்கொள்வது பாதுகாப்பற்றது. தாமாகவே மருந்துக்கடைகளில் ஆன்ட்டிபயாட்டிக் வாங்கிப் பயன்படுத்துவது மிக மோசமான பழக்கம். அந்த பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து, ஆன்ட்டிபயாட்டிக் வேலை செய்யாத நிலை ஏற்படும்.

4.சளி பிடித்துள்ள குழந்தைகளுக்கு வெந்நீர் கொடுப்பது, ஆரஞ்சு ஜூஸ் கொடுப்பது அல்லது சூப் கொடுப்பது...
மூன்றில் எது சரி?

இந்த மூன்றில் வெந்நீர்தான் சிறந்த மருந்து. வெந்நீர் கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் சுவாசப்பாதை சீராகும். மூச்சு விடுதல் எளிதாகும். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சூப் கொடுப்பதோ, ஜூஸ் கொடுப்பதோ கூடாது. மருத்துவர் அவற்றைக் கொடுக்கச் சொல்லி அறிவுறுத்தும் பட்சத்தில் சுத்தமான முறையில் வீட்டிலேயே தயாரித்து கொடுப்பதே சிறந்தது.

5.அடிக்கடி கைகளை கழுவுவதன் மூலம் சளிப்பிடிக்காமல் காத்துக் கொள்ள முடியுமா?

தொற்றினால் உண்டாகும் சளி, இருமல் பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமே கைகளைச் சுத்தமாகப் பராமரிக்காததுதான். தொற்று உள்ள ஒரு நபர் தும்முவது, இருமுவது போன்றவற்றின் மூலம் தன்னைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிருமிகளைப் பரப்புவார். இந்த இடத்தைத் தொடுவதாலும், இந்தக் காற்றை சுவாசிப்பதாலும் மற்றவர்களுக்கும் தொற்று ஏற்படும்.

உதாரணத்துக்கு சளி பிடித்த ஒருவர் மூக்கிலோ வாயிலோ கையை வைத்து விட்டு அதே கையுடன் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி இருக்கலாம். கதவின் கைப்பிடியைத் தொட்டிருக்கலாம். இன்னொரு நபர் அந்த பொருட்களை உபயோகிக்கும்போதும், தொடும்போதும் அவருக்கும் தொற்று ஒட்டிக்கொள்ளும்.முடிந்தவரை அவ்வப்போது கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம் ஓரளவுக்கு தொற்றைத் தவிர்க்க முடியும்.

- ராஜி