எப்போதும் சோர்வாக உணர்கிறீர்களா?!



தகவல்

நீண்ட தூர பயணம், கடுமையான வேலை, அலைச்சல், வெயில் போன்ற தருணங்களில் களைப்பாக இருப்பதை எல்லோருமே உணர்வோம். அது இயல்புதான். ஆனால், அடிக்கடி களைப்பாக இருப்பது போல் தோன்றினால் அதற்கு மருத்துவரீதியான காரணங்கள் இருக்கலாம்.

நீண்ட நாட்கள் நீடிக்கும் களைப்பு நோய்த் தொகுதி குறித்தும், அது எப்படி ஏற்படுகிறது என்றும் மருத்துவர்களால்கூட இன்னமும் முழுவதுமாக அறிய முடியவில்லை. ஃப்ளூ காய்ச்சல் போன்ற பிற நோய்களைத் தொடர்ந்து உங்கள் உடலின் திறன் முழுவதும் இழந்த நிலை ஏற்படலாம். இது பல ஆண்டுகள்கூட நீடிக்கலாம். இதற்கு முன்னர் நல்ல ஆரோக்கியத்துடனும் நல்ல ஊக்கத்துடனும் பணிபுரிந்த பலரும் கடும் களைப்பு, மூட்டுகளில் வலி, தசைகளில் வலி, நிணநீர் சுரப்பிகளில் வலி, தலைவலி போன்ற அறிகுறிகளை உணர்வார்கள்.

நாளமில்லாச் சுரப்பு மாறுபாடுகள், மனநல மாறுபாடுகள், நோய் எதிர்ப்புத் திறன் முறைமையில் மாறு பாடுகள் மற்றும் நரம்பு மண்டல மாறுபாடுகள் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஆய்வின்படி இந்த அறிகுறி உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தம் இயல்பிற்குக் கீழாக இருப்பதாகவும், இதனால் மயக்கம் எதிர்விளைவாக ஏற்படுகிறது எனவும் தெரிய வருகிறது. நோய்க்குறிகளற்ற நிலையை ஏற்படுத்துவதே இந்நோய்க்கான சிகிச்சையாக உள்ளது. அழற்சி எதிர்ப்பு, வலி நீக்கும் மருந்துகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இவை பெரிய அளவில் பயனளிப்பதில்லை.

மனச்சோர்வு நீக்கும் மருந்துகளைச் சற்றுக் குறைந்த அளவில் எடுத்துக் கொள்வதாலும், நல்ல உறக்கம் காரணமாகவும் நாள்பட்ட உடல்நலக் குறைவு ஓரளவு குறையக்கூடும். இந்நோயினால் அவதிப்படும் மக்கள் தங்கள் கடந்த கால உடல், மனநிலையை இழப்பதால் முறையான உடல் செயல்பாடுகள் மிகவும் அவசியம். இது தசைகளின் தளர்ச்சியைக் குறைப்பதுடன், நீண்ட நாட்கள் இயக்கமற்ற ஓய்வினால் ஏற்பட்ட சோர்வையும் நீக்கும். நோயினால் ஏற்படும் சிக்கலையும், அதனால் ஏற்படும் இழப்புகளையும் தெரிந்தவர்கள் மூலம் அறிந்து ஆறுதல் கொள்ளலாம்.

- க.கதிரவன்