கலக்கல் கஃபே



சேவை

தமிழகத்தில் சிறந்த உணவகங்கள் இருக்கின்றனவா? நிச்சயமாக! ஆம்பூர் பிரியாணியிலிருந்து மெக்ஸிகன் உணவு வரை எது வேண்டுமானாலும் கிடைக்கும். சரி... யார் வேண்டுமானாலும் நுழைந்து சாப்பிட முடியுமா? இந்தக் கேள்விக்கு ‘பணம் இருந்தால் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் கூட சாப்பிடலாம்’ என்று எளிதாக பதில் சொல்லிவிடலாம்.

உண்மையில் பேச்சுத்திறன் குறைபாடு உள்ளவர்கள், அறிவுத்திறன் குறைபாடு, பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள், செரிபிரல் பால்ஸி போன்ற கடும் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி வீல் சேரிலேயே வீழ்ந்து கிடக்கிறவர்கள் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி உணவகம் தமிழகத்தில் இல்லவே இல்லை. அந்தக் குறையைப் போக்குவதற்காக உருவானதே ‘கலக்கல் கஃபே.’

சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் ‘வித்யா சாகர்’ சிறப்புப் பள்ளியில் இயங்குகிறது ‘கலக்கல் கஃபே’! ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை, மாலை வேளையில் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், வேறு சில மாற்றுத்திறனாளிகள், முதியோர், சில கல்லூரி மாணவர்கள் என இங்கே கூடுகிறார்கள். ஒளிரும் நியான் விளக்கு வெளிச்சத்தில், இசைக்குழுவினர் வாசிக்கும் இசையை ரசித்தபடி, சாப்பிடுகிறார்கள்... நண்பர்களோடு உரையாடுகிறார்கள்... மகிழ்வோடும் நிறைவோடும் திரும்பிச் செல்கிறார்கள்.

வீல் சேர்களை நுழைத்து, வசதியாக அமரும் வண்ணம் அமைந்த உயரமான மேசைகள்... ஒழுங்கான தரை... குறைந்த பார்வை உடையவர்களும் பார்வை மாற்றுத்திறனாளிகளும் கூட படிப்பதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்ட மெனு கார்டு (பிரெய்லி எழுத்துகள், பெரிய எழுத்துகள் மற்றும் படங்களுடன்),

 சிறப்பாக வடிவமைக்கப்பட்ட குடுவைகள், கிண்ணங்கள், ஸ்பூன்கள், தட்டுகள், பாத்திரங்கள் தவறி விழுந்தாலும் பாதிப்பை ஏற்படுத்தாத மேசை விரிப்புகள், எளிதாக திறக்கக்கூடிய சிறப்பு வாஷ் ரூம் கதவுகள்... மொத்தத்தில், மாற்றுத்திறனாளிகள் யார் உதவியுமின்றி, வசதியாக சாப்பிட்டுச் செல்லக் கூடிய, தன்னம்பிக்கை தரக்கூடிய ஓர் இடம் ‘கலக்கல் கஃபே.’

கலக்கலான இந்த ஐடியா உருவாகக் காரணமாக இருந்தவர் அனுராதா சங்கரன்... வித்யா சாகர் ‘யூத் புரோக்ராம்’ திட்டத்தின் கோஆர்டினேட்டர்... இந்த உணவகம் ஆரம்பித்ததன் பின்னணியை கூறுகிறார்... ‘‘மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான எல்லா மறுவாழ்வுப் பள்ளிகளுமே 18 வயசு வரை பசங்களுக்கு நல்லா ட்ரெயின் பண்ணுவாங்க. அதுக்கப்புறம் அவங்களுக்கு பயிற்சி கொடுக்கறது ரொம்ப கம்மி. உண்மையிலேயே 18 வயசுக்கப்புறம்தான் அவங்களுக்கு வழிகாட்டுதல் அதிகம் தேவைப்படும்.

இது எல்லாத்தையும் யோசிச்சுத்தான் யூத் புரோக்ராம் ஆரம்பிச்சோம். அவங்க தங்களோட திறமையை எப்படி வளர்த்துக்கறது, ஒரு வேலையில சேர்றது எப்படி, வேலையை சிறந்த முறையில செய்ய என்ன செய்யணும்... எல்லாத்துக்கும் பயிற்சி கொடுப்போம். அதே மாதிரி, பல மாற்றுத்திறனாளிகள் பொருட்கள், கலைப்பொருட்களை தயாரிச்சிடுவாங்க. அதை வாடிக்கையாளர்களை தொடர்ந்து வாங்க வைக்கறதுதான் ரொம்ப கஷ்டம்.

ஒரு மாற்றுத்திறனாளி தயாரிக்கிறது பேப்பர் கப்போ, பையோ, ஓவியமோ அதை மேம்படுத்த வேண்டியிருக்கு. அதற்காகவே ஒரு டிசைனரை வச்சு, அழகா டிசைன் பண்ணுவோம். அதன் மூலமா பொருட்களை மார்க்கெட் பண்றது எப்படின்னு பார்க்கறோம்.

 யாரா இருந்தாலும் ஒரு வயசுக்கு மேல வாழ்வாதாரம் அவசியம். அதுக்கு வருமானம் ரொம்ப முக்கியம். ஒரு பொருள் பார்க்க நல்லா இருந்து, விற்றால்தான் இவங்களுக்கு வருமானம் கிடைக்கும். அதனால முடிஞ்ச வரை மார்க்கெட்டிங்குக்கான அவசியத்தை இவங்களுக்குப் புரிய வைக்கிறோம். கத்துத் தர்றோம்.

எல்லாரையும் போல மாற்றுத்திறனாளிகளுக்கும் ஓய்வு நேரம்னு ஒண்ணு வேணும்னு யாரும் நினைக்கறதே கிடையாது. இவங்களும் காலேஜுக்கு போறாங்க, வேலைக்குப் போறாங்க. தனிமை மற்றவங்களை விட இவங்களை அதிகமா துன்புறுத்தும். பொழுதுபோக்குன்னு எதுவும் இவங்களுக்கு  கிடையாது.

அதற்கான வாய்ப்போ, வழிகளோ இல்லை. அதுல நிறைய பிரச்னைகள் இருக்கு. சாதாரண ஓட்டல்களுக்கு போனா, வீல்சேரோட போய் உட்காரக் கூட போதுமான வசதி இல்லை. அதுக்கேத்த மாதிரி டேபிள் உயரமா இருக்காது. அப்புறம் எப்படி மாற்றுத்திறனாளிகள் அங்கே போய் சாப்பிட முடியும்? அவங்களுக்கு எப்படி தன்னம்பிக்கை வரும்? அதனாலதான் இந்த ‘கலக்கல் கஃபே’ ஆரம்பிச்சோம்.

‘கலக்கல் கஃபே’ல இளம் வயதினருக்குப் பிடிச்ச ‘ஃப்ரெஞ்ச் ஃபிரை’, ‘பர்கர்’ மாதிரியான ஸ்நாக்ஸ் கிடைக்கும். மெனு கார்டுல பெரிய எழுத்துல ஒவ்வொரு பேரும் எழுதியிருக்கும். பிரெய்லி எழுத்து இருக்கும். படிக்க முடியாதவங்க படத்தைப் பார்த்தே என்னன்னு தெரிஞ்சுக்கலாம். சிலரால ஒரு கைப்பிடி உள்ள மக்கை தூக்க முடியாது. பலவீனமா இருப்பாங்க. அவங்களுக்காகவே இரண்டு கைப்பிடி உள்ள மக்கை வச்சிருக்கோம்.

இந்த வசதியெல்லாம் கிடைச்சா, இந்தப் பசங்க யாரையும் எதிர்பார்க்க மாட்டாங்க. ஊட்டிவிடச் சொல்ல மாட்டாங்க. தானே கையால எடுத்து சாப்பிடுவாங்க, காபியோ, குளிர்பானமோ அவங்களே குடிப்பாங்க. ஓட்டல்கள்ல தட்டோ, கிண்ணமோ ஸ்கூப் செஞ்சு, வழிச்சு சாப்பிடுறதுக்கு ஏத்த மாதிரி இல்லை. தட்டையா இருக்கும். இங்கே நல்ல வளைவான கிண்ணமா குடுக்கறோம். எல்லாத்தையும் இங்கே பார்த்துப் பார்த்து வடிவமைச்சிருக்கோம்.

ஒரு காலேஜ்ல இருந்து மாணவர் இசைக்குழு தன்னார்வத்தோடு வந்து வாசிக்கறாங்க. சனிக்கிழமை மாலை 5 மணிலருந்து 9 மணி வரைக்கும்தான் இந்த கஃபே இயங்குது. ‘வித்யா சாகர்’ல வேலை பார்க்கறவங்க இங்கே வாலன்டியரா வேலை பார்ப்பாங்க. ஒரு வாரம் படிப்பு, வேலைன்னு இருக்குற இந்தக் குழந்தைகளுக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்.

 ஒரு ஸ்டூடன்டுக்கு வீட்ல எவ்வளவு பாக்கெட் மணி குடுப்பாங்கன்னு கணக்குப் பண்ணிதான் நாங்க இங்கே எல்லாத்துக்கும் விலை வைக்கிறோம். 100 ரூபாய்க்குள்ள அடங்கிடும். பர்கரோ, சாண்ட்விச்சோ, சாஃப்ட் டிரிங்க்ஸோ, டீயோ, காபியோ விருப்பப்பட்டதை சாப்பிடலாம். சாப்டுட்டு, சகாக்களோட பேசிட்டு போகலாம்.

ஃப்ரெண்ட்ஸை மீட் பண்றாங்க... நட்பு வளருது. அடுத்த ஒரு வாரம் அவங்களுக்கு இந்த அனுபவம் நல்ல தெம்பைத் தரும். முன்னாள் மாணவர்கள் மட்டுமில்லை... யார் வேணாலும் இந்த கஃபேக்கு வரலாம். நாங்க வடிவமைச்சிருக்கற இந்த கஃபே ஒரு மாடல்தான். ஓட்டல், ரெஸ்டாரன்ட் நடத்தறவங்க யாராவது இதை எடுத்துப் பண்றாங்கன்னா, அவங்களுக்கு வழிகாட்ட தயாராக இருக்கோம்.

ஒரு கட்டத்துக்கு அப்புறம் இந்த ‘கஃபே’ வெளியே போகணும். எல்லா இடத்துலயும் இருக்கணும். வெளியில எல்லாமே மாற்றுத்திறனாளிகளுக்குக் கிடைக்குதுன்னா இது தேவையே இல்லை. இது மக்களிடம் போய்ச் சேரணுங்கறதுதான் எங்க விருப்பம்’’ என்கிறார் அனு.

‘கலக்கல் கஃபே’ என்பதற்கு தனியாக இடம் என்று ஏதும் இல்லை. ‘வித்யா சாகர்’ கட்டிடத்தின் முன்புறத்தில் ஸ்கூல் பஸ், பைக்குகள் நிறுத்தும் பார்க்கிங் இடம்தான் திடீர் உணவகமாக உருவெடுக்கிறது. எல்லாவற்றையும் அப்புறப்படுத்தி, தரையைப் பெருக்கி, மேசைகள், நாற்காலிகளைப் போட்டு, விரிப்பு களை விரித்து திறந்தவெளி உணவகமாக மாற்றி விடுகிறார்கள் (மழை நாட்களில் வித்யா சாகரின் பிஸியோதெரபி அறைக்கு இடம் பெயர்கிறது ‘கலக்கல் கஃபே’). 2 மணிக்கு வேலையை ஆரம்பித்தால்தான் 4:30 மணிக்குள்ளாகவாவது ‘கலக்கல் கஃபே’யை உருவாக்க முடியும்.

9 மணிக்கு மேல் எல்லாவற்றையும் மறுபடியும் பிரித்து, அகற்றி, இருந்த இடத்தில் வைக்க வேண்டும். இந்த மகத்தான வேலையை கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் செய்பவர்களில் முக்கியமானவர்கள் மூன்று பேர். வாணி, கோகிலா, பாகீரதி. வித்யா சாகரில் வேலை பார்க்கும் கடைநிலை ஊழியர்கள். அங்கே இருக்கும் ஷாப்பில் அவர்களைப் பார்க்கப் போனபோது நம்மை வரவேற்றார் ஷாப்பில் பணியாற்றும் ஜானகிராமன்.

 வீல் சேரில் அமர்ந்தபடி வலம் வரும் ஜானகிராமனுக்கு பலவித உடல் கோளாறுகள். வாய் திறந்து பேச முடியாவிட்டாலும் அவருடைய சேரில் இருக்கும் கம்யூனிகேஷன் போர்டு மூலமாக கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்... சரளமாகப் பேசுகிறார். ‘தி.நகர்ல இருந்து வர்றேன்’, ‘கலக்கல் கஃபே ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆச்சு’. ‘ஒருநாள் கூட நான் இதை தவற விட்டதில்லை’ என்கிறார். நாம் உரையாடும் போது கண்களில் உற்சாகம் கொப்பளிக்கிறது.

‘‘டேபிள், சேரை எல்லாம் செட் பண்றது மட்டுமில்லை. வடா பாவ், சாண்ட்விச் எல்லாம் தயார் பண்ணுவோம். சர்வீஸ் பண்ணுவோம்’’ என்கிறார் கோகிலா. ‘‘கஷ்டமா இருந்தாலும் பசங்களோட சந்தோஷத்தைப் பார்த்து எங்களுக்கும் சந்தோஷமா இருக்கு’’ என்கிறார் வாணி. ‘‘காபி, டீ, சாக்லெட் மில்க் கேட்கற பசங்களுக்கு கொண்டு போய் கொடுப்பேன்.

 பெரும்பாலும் ஓல்டு ஸ்டூடன்ட்ஸ் குழந்தைங்கதான் வருவாங்க. இந்த வேலை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு’’ என்கிறார் பாகீரதி. ‘‘ஏன்?’’ என்று கேட்டால் ஒரு நிமிடம் பதில் சொல்லத் தயங்குகிறார். ‘‘என் பையன் இந்த வித்யா சாகர்லதான் படிச்சான்... இப்போ இல்லை’’-  சொல்லும்போதே பாகீரதிக்கு கண்களில் கண்ணீரும் தளும்புகிறது.

‘‘சாதாரண ஓட்டல்களுக்கு போனா இவங்களால அங்கே தாக்குப் பிடிக்க முடியாது. வீல்சேரோட போய் உட்காரக் கூட போதுமான வசதி இல்லை. அதுக்கேத்த மாதிரி டேபிள் உயரமா இருக்காது. அப்புறம் எப்படி மாற்றுத்திறனாளிகள் அங்கே போய் சாப்பிட முடியும்? அவங்களுக்கு எப்படி தன்னம்பிக்கை வரும்?’’ ‘‘ஒவ்வொருவருக்கும் ஓய்வு நேரம் ரொம்ப முக்கியம். ஆனா, மாற்றுத்திறனாளிகளுக்கும் ஓய்வு நேரம், பொழுதுபோக்கு வேணும்னு யாரும் நினைக்கறதே கிடையாது...’’

 மேகலா படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்