பல்ஸ் ஆக்ஸிமீட்டர் பயன்படுத்தலாமா?!



கன்சல்டிங்

தற்போது கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் பலர் எந்தவித மூச்சுத்திணறல் அறிகுறிகள் இல்லாமல், அதே வேளையில் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தும், நுரையீரலில் திட்டுக்கள் படிந்தும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இவர்களை பல்ஸ் ஆக்ஸிமீட்டர்(Pulse Oximeter) மூலம் சரியான நேரத்தில் அடையாளம் காண முடியும் என்றும், ஆக்ஸிஜன் மோசமாகக் குறைவதற்கு முன்பே சிகிச்சை அளித்தால் எளிதாகக் காப்பாற்றலாம் என்றும் சொல்கிறார்கள். பல்ஸ் ஆக்ஸிமீட்டரின் தேவை, அது கொரோனா சிகிச்சையில் எவ்விதம் பங்களிக்கிறது போன்ற விவரங்களை நுரையீரல் நிபுணர் சுரேஷ் சகாதேவனிடம் கேட்டோம்...

பல்ஸ் ஆக்ஸிமீட்டர் என்றால் என்ன?

‘‘நம் விரல் நுனியில் க்ளிப் போன்று பொருத்தக்கூடிய ஒரு சிறிய கருவிதான் பல்ஸ் ஆக்ஸிமீட்டர். இது SpO2 எனப்படும் புற ஆக்ஸிஜன் நிலை (Peripheral oxygen saturation) அல்லது நம் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அளவிடுகிறது.’’

ஒருவருக்கு ஆக்ஸிஜன் எந்த அளவில் இருக்க வேண்டும்?

‘‘இயல்பாக ஒருவருக்கு ஆக்ஸிஜனேற்றம் அளவு 95-க்கு மேல் இருக்கும். 92-க்கு கீழ் குறைந்தால், அவருக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதுவே நுறையீரல் நிலை மோசமாக இருக்கும் நாள்பட்ட நுரையீரல் அடைப்புள்ள(COPD) நோயாளிகள் மற்றும் நுரையீரல் தொற்றுநோய் உள்ள நோயாளிகள் அல்லது நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளுக்கு 90-க்கும் குறைவாக இருக்கும். இவர்களுக்கு வீட்டிலேயே பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் அடிக்கடி சோதனை செய்து, ஆக்ஸிஜன் சிலிண்டர் மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்படும்.’’

கோவிட்-19 சிகிச்சையில் ஆக்ஸிமீட்டர் எப்படி உதவுகிறது?

‘‘ஒரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்படும்போது, COVID நிமோனியாவை உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளை வீக்கப்படுத்துகிறது. மேலும் அந்தப்பைகள் திரவம் அல்லது சீழால் நிரப்பப்படலாம். இந்த சந்தர்ப்பங்களில், 85-க்கு கீழ் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிடுகிறது.

அப்போது, நோயாளிகள் மூச்சுத் திணறலை உணரத் தொடங்குகிறார்கள். சரியாக சுவாசிக்கவும் போராடுகிறார்கள். தீவிர தொற்றுநோயான இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு ஆளாகிறார்கள். இவர்களுக்கு உடனடி ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படுகிறது. அதுவே 85-லிருந்து 94-க்குள் இருப்பவர்கள் வீட்டிலிருந்தே போர்ட்டபிள் சிலிண்டர், ஆக்சஜன் கான்சன்ட்ரேட் போன்ற ஆக்சிஜன் ஆதரவு மூலம் பற்றாக்குறையை சரிசெய்து கொள்ளலாம். 85-க்கும் கீழே போனால் மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும்.’’

அறிகுறி இல்லா நோயாளிகளின்(Asymptamatic patient) ஆபத்து என்ன?

‘‘தற்போது அதிகமான அறிகுறியற்ற நோயாளிகள் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார்கள். ரத்த ஆக்ஸிஜன் அளவுகள் குறைவதோ அல்லது ரத்த திசுக்களில் ஆக்ஸிஜன் அழுத்தங்கள்(Hypoxia) இல்லாமலும் கூட இந்த அறிகுறிகளற்ற நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். ஏனென்றால், நோயின் ஆரம்ப கட்டங்களில் குறைந்த ஆக்ஸிஜன் செறிவூட்டலுக்கு வெளிப்படையான சுவாச பிரச்னைகள் எதுவும் இல்லை.

அறிகுறியற்ற நோயாளிகளின் உடலில் இந்த அமைதியான ஆக்ஸிஜன் அளவின் குறைவு இறுதியில் மாரடைப்பிற்கான ஆபத்தை விளைவிக்கும். இப்போது புதிதாக வாசனை, சுவை இழப்புகள் அறிகுறிகள் வருவதாக சொல்கிறார்கள். இவர்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.’’

யாரெல்லாம் வீட்டில் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்?

‘‘அனைத்து வீடுகளிலும், ஆரோக்கியமாக இருப்பவர்களும் கூட பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டுமா என்றால் கண்டிப்பாக தேவையில்லை. இப்படி செய்வதால் நாமே ஒரு கூடுதல் தேவையை(Demand) உருவாக்கிவிடுகிறோம். இதனால் அவசியத் தேவை இருப்பவர்களுக்கு
கிடைக்காமல் போய்விடும்.

உதாரணமாக, மூன்று மாதங்களுக்கு முன்பு வரை 55 ரூபாய்க்கு ஆக்ஸிமீட்டர் விற்கப்பட்டது. மருத்துவர்களும், மருத்துவ உதவியாளர்களும் மட்டுமே உபயோகித்து வந்தோம். தேவையில்லாமல் அனைவரும் வாங்கி இதை உபயோகிக்க ஆரம்பித்த பிறகு, விலையும் தற்போது கூடிவிட்டது. இதன் காரணமாக அவசியம் தேவைப்படுபவர்களுக்குக் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், காசநோயாளிகள் என உடலில் பிறநோய்கள் இருப்பவர்களும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இருக்கும் வீட்டிலும் மட்டுமே இதை வாங்கி வைத்துக் கொண்டால் போதுமானது.

மேலும் கொரோனா தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டவர்களில், மிதமான மற்றும் நடுத்தரமான அறிகுறிகள் இருந்து வீட்டு தனிமைப்படுத்துதல் அறிவுறுத்தப்பட்டவர்கள் மற்றும் இதை வாங்கி வைத்துக் கொள்ளலாம். இவர்கள் ஆக்ஸிஜன் அளவை சோதனை செய்து கொள்வதன் மூலம் நோயின் தீவிர நிலைக்குச் செல்வதை தடுக்க முடியும்.

மேலும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு மற்றும் நுரையீரல் தொற்றுநோய் உள்ளவர்கள், பிற நோய்களுடன் கூடிய வயதானவர்களுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலை வந்தால், அவர்களை மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லும் நேரத்தில் கூட மோசமான நிலைக்கு சென்றுவிட நேரிடும் என்பதால், முடிந்தவர்கள் ஆக்ஸிஜன் சப்ளிமென்ட்களான ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர், ஆக்ஸிஜன் சிலிண்டர், பேட்டரியில் இயங்கும் போர்ட்டபிள் ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்  போன்றவற்றை வாங்கி வைத்துக் கொள்ளலாம். இதனால் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் குறைந்த நேர இடைவெளியில் ஏற்படும் மரணங்களை தவிர்க்க முடியும்.’’

- உஷா நாராயணன்