கொரோனா வைரஸைத் தடுக்கும் சரியான மாஸ்க் எது?!



கவர் ஸ்டோரி

குறைந்தது ஒரு வருட காலத்திற்கு முகக்கவசம் இல்லாமல் யாரும் எங்கும் போக முடியாது என்ற கட்டாயமான சூழல். ஒருபக்கம் முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் போன்ற பெரிய வி.ஐ.பிக்கள் எல்லாம் என்.95 மாஸ்க் அணிந்து கொண்டு தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிறார்கள். ஆனால், வீதிகளிலோ சர்வ சாதாரணமாக ஆண்கள் கர்சீப்பை கட்டிக்கொண்டும், பெண்கள் துப்பட்டா, புடவைத்தலைப்புகளால் முகத்தை மூடிக்கொண்டும், இன்னொரு பக்கம் லெக்கின்ஸ் கலருக்கு மேட்சாக மாஸ்க் அணிந்து கலக்கும் நவநாகரீக இளைஞிகளை பார்க்க முடிகிறது.

இதற்கெல்லாம் ஹைலைட் மணப்பெண்களுக்கு டிசைனர் ப்ளவுஸ் போலவே டிசைனர் மாஸ்க்கும் வந்துவிட்டது. பிரபல கம்பனிகளின் மாஸ்க் விளம்பரங்களும் களை கட்டத் துவங்கிவிட்டது. இதெல்லாம் சரியானதுதானா? பாதுகாப்பானதா? எந்த முகக்கவசம் யார் அணிவது? மாஸ்க் அணிவது மற்றும் தயாரிப்பில் அரசு தரப்பில் நிலையான இயக்க நடைமுறை (Standard Operating Procedure SOP) ஏதேனும் வகுக்கப்பட்டுள்ளதா? இப்படி மாஸ்க் பற்றிய டன் கணக்கில் சந்தேகங்கள் பற்றி விளக்கம் தருகிறார் இன்டர்னல் மெடிசன் மருத்துவர் அஸ்வின் கருப்பன்.

‘‘இதுவரை உலக சுகாதார மையம் மாஸ்க் போட்டால் கொரோனா நோயைத் தடுக்க முடியும் என்பதை அங்கீகரிக்கவில்லை. உலகின் அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் அடர்த்திக்கு ஏற்றவாறு முடிவு செய்வதை உலக நாடுகளின் கைகளில் விட்டுவிட்டது. அதாவது சென்னை போன்ற மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள நகரங்களில் தொற்றுநோய் வேகமாகப் பரவும் என்பதால், மாஸ்க் அணிவதை அறிவுறுத்துகிறது. அதற்காக ‘மாஸ்க் அணிந்தால் கொரோனா தொற்று எனக்கு வராதா’ என்று கேட்கக் கூடாது.

ஏனெனில், எச்சிலோடு கலந்திருக்கும் வைரஸ் ஒருவர் தும்மும்போதோ, இருமும்போதோ அல்லது பேசும்போதுகூட அடுத்தவர் மேல் பட்டு பரவ வாய்ப்பு உண்டு. மாஸ்க் அணிவதால் இது தடுக்கப்படுகிறது.

 நீங்களும் மாஸ்க் அணிந்திருந்து, எதிரில் இருப்பவரும் மாஸ்க் அணிந்திருந்தால் தொற்று பரவல் 95 சதவீதம் வரை தடுக்கப்படும். இதைவிட வாய்க்குள் எச்சில் சுரப்பு இருந்துகொண்டே இருக்கும். ஒருவர் வாயைத் தொட்டுவிட்டு அருகில் உள்ள பொருட்களைத் தொடுவதால் வைரஸ் இன்னும் வேகமாகப் பரவும். நோய்த்தொற்று இருப்பவர்களிடமிருந்து இல்லாதவர்களுக்கும், வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வேண்டுமென்றால் அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்பதை அரசு வலியுறுத்துகிறது. சாதாரண துணி மாஸ்க் போட்டால்கூட நம் எச்சில் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவுவது 95 சதவீதம் வரை தடுக்கப்படுகிறது என்பதாலேயே கர்ச்சீப், துணி மாஸ்க் போன்றவற்றை அனுமதிக்கிறார்கள். இப்போது 3 விதமான மாஸ்க்கை உபயோகப்படுத்துகிறோம்.

* N 95 மாஸ்க்: இது 95 சதவீதம் பாக்டீரியாக்களையும், வைரஸ்களையும் உள்ளே இழுக்காமல் தடுக்கக்கூடியது. இதை யாரெல்லாம் போட வேண்டுமென்றால் கொரோனா வார்டில் நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவப்பணியாளர்களும் பயன்படுத்தினால் போதுமானது. பொதுமக்கள் அணியத் தேவையில்லை. அதேநேரத்தில் என்.95 அணிந்தாலே முழுவதுமான பாதுகாப்பு என்பதற்கும் எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. இதனால் பொதுமக்கள் சாதாரண துணிமாஸ்க் போட்டாலே போதும்.

* சர்ஜிகல் மாஸ்க் : நீலக்கலரில் 3 அடுக்குகளாக வரும் சர்ஜிகல் மாஸ்க்கை ஒரு பிரிவினர் உபயோகப்படுத்துகிறார்கள். மருத்துவர்கள் கூட கொரோனா வார்டைத் தவிர ஓ.பி போன்ற இடங்களில் சாதாரணமாக இதைத்தான் பயன்படுத்துகிறார்கள். இது 50 சதவீதம் வரையில் வைரஸ், பாக்டீரியாக்களைத் தடுக்கக் கூடியது.

துணி மாஸ்க்கையும், சர்ஜிகல் மாஸ்க்கையும் ஒப்பிட்டால் இரண்டுக்கும் 15 முதல் 20 சதவீத பாதுகாப்புத்தன்மை வித்தியாசப்படுகிறது. சர்ஜிக்கல் மாஸ்க்கை 4 மணி நேரத்துக்கு மேல் உபயோகப்படுத்தும்போது நாம் விடும் மூச்சால் ஈரப்பதம் அடைந்துவிடும். ஈரப்பதம் பாக்டீரியா, வைரஸ்களை எளிதில் ஈர்க்கும் என்பதால் 4 மணிநேரத்துக்கு 1 முறை சர்ஜிகல் மாஸ்க்கை மாற்றிவிட வேண்டும்.

நிறையபேர் சர்ஜிக்கல் மாஸ்க்கை மறுமுறை உபயோகிக்கிறார்கள். அதை மீண்டும் உபயோகிக்கும்போது அதன் பாதுகாப்புத்தன்மை இருக்காது.
எனவே இதை கொரோனா தொற்று உள்ள நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறோம். இவர்கள் துணி மாஸ்க்கை உபயோகித்தால் அதை மற்றவர் துவைக்கும்போது அவர்கள் கை மாசுபட்டு, அவர்களுக்கு நோய்த்தொற்று ஒட்டிக்கொள்ளும். நோயாளிகள் சர்ஜிக்கல் மாஸ்க்கை பயன்படுத்தும்போது அதை ஒரு பேப்பரில் சுற்றி சீல்டு கவரில் போட்டு அப்புறப்படுத்தவோ அல்லது எரித்துவிடவோ செய்யலாம். இதன்மூலம் மற்றவர்களுக்கு பரவுவது தடுக்கப்படும்.

* துணி மாஸ்க்
நல்ல உடல்நிலையில் இருக்கும் அனைவரும் அணியலாம். டிட்டெர்ஜன்ட் சோப்பைக் கொண்டு துவைத்து 6 மாதங்கள் வரை மீண்டும் பயன்படுத்தலாம். இதேபோல் K9 என்ற மாஸ்க்கும் விற்கப்படுகிறது. இது சீனாவில் தயாரிக்கப்பட்டது. இதன் தரத்திற்கான உத்தரவாதம் எதுவும் வழங்கப்படவில்லை.

என் 95, சர்ஜிகல் மற்றும் துணி மாஸ்க்குகளுக்கு ஏதேனும் தரக்கட்டுப்பாடு வழிமுறைப்படுத்தப்பட்டுள்ளதா?

N 95 மாஸ்க்குகள் மற்றும் சர்ஜிகல் மாஸ்க்குகள் இரண்டையும் Centers for Disease and Prevention, National Institute for Occupational Safety and Health, Occupational Safety and Health Administration ஆகியவை கட்டுப்படுத்துகின்றன. இவற்றில் NIOSH குறியீடு இருக்க வேண்டும். ‘பொதுவாக ஃபேஸ் மாஸ்க்குகள் கோவிட் 19-ன் சமூக பரவலைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. அறிகுறியற்ற மற்றும் அறிகுறிக்கு முந்தைய பரவலின் போதும், 2 மீட்டர் வரையிலான சமூக இடைவெளியில் நீர்த்துளிகள் மூலம் பரவலின்போதும், வைரஸின் சமூகப்பரவலை கட்டுப்படுத்துவதை தங்களது பகுப்பாய்விலிருந்து ஆதாரங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக லண்டன் ராயல் சொஸைட்டி குறிப்பிடுகிறது.

N95 மாஸ்க் மற்றும் சர்ஜிகல் மாஸ்க்குகளை பயன்படுத்தும்போது அவற்றை அப்புறப்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தாவிட்டால், சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கான வாய்ப்பு அதிகம். அதுவே துணி மாஸ்க்குகளை
சோப்பினால் துவைத்து 6 மாதங்கள் வரை மறு உபயோகம் செய்து கொள்ளலாம்.

COVID-19 உள்ள... ஆனால் அறிகுறிகள் இல்லாத(Asymptomatic) நபர் களால் வைரஸ் பரவுவதைத் தடுக்க எளிய துணிமுகக்கவசங்களை பரவலாகப் பயன்படுத்த அமெரிக்காவின் Centers for Disease Control and Prevention (CDC) யும் பரிந்துரை செய்கிறது. முகக்கவங்கள் அணிவதால் மட்டுமே கோவிட் 19 வைரஸ் பரவலை தடுக்க முடியுமா என்று கேட்டால், சமூக விலகல் சாத்தியமில்லை அல்லது கணிக்க முடியாத சூழ்நிலைகளில் முகக்கவசங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான, பொது போக்குவரத்து, கடைகள் மற்றும் ஷாப்பிங் வீதிகள், வேலை செய்யும் இடங்கள், வீடுகள், கிளினிக்குகள், மருத்துவமனைகளில் டோக்கன் வழங்கும் இடங்கள், பராமரிப்பு இல்லங்கள், சமூக பராமரிப்பு மற்றும் பிஸியான நடைபாதைகள் ஆகிய இடங்களில்,. பரவலாகவும் சரியாகவும் ஆபத்து அடிப்படையிலும் பயன்படுத்தினால், வீட்டில் தயாரிக்கப்பட்ட துணி முகக்கவசங்கள் கூட வைரஸ் பரவலைக் குறைக்கலாம்.

யாருக்கு எந்த மாஸ்க்?!

சர்ஜிக்கல் மாஸ்க்கினை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் இருக்கும் நோயாளிகள், கொரோனா நோய்த்தொற்று அதிகம் பரவியுள்ள ஏரியாக்கள் மற்றும் 1 மீட்டர் அளவில் கூட சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத மார்க்கெட், கடைவீதி போன்ற பொது இடங்களுக்குச் செல்பவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், பிறநோய்கள் உள்ளவர்கள் அணிய வேண்டும்.

துணி மாஸ்க் மூன்று அடுக்குகள் கொண்டதாக இருத்தல் வேண்டும். கொரோனா நோய்த்தொற்று இல்லாத நல்ல உடல்நிலையில் இருப்பவர்கள், நோய்த்தொற்று பரவியுள்ள இடங்களுக்குச் செல்பவர்கள், குறைந்தபட்சம் 1 மீட்டர் சமூக இடைவெளி கடைபிடிக்கக்கூடிய இடங்கள், கேஷியர்கள், ஹோட்டல் சர்வர்கள், சமூக சேவையாளர்கள், பொதுப் போக்குவரத்துகளில் பயணிப்பவர்கள், அலுவலகங்கள், மளிகைக்கடை, சூப்பர் மார்க்கெட் மற்றும் கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்குச் செல்பவர்கள் பயன்படுத்தலாம்.

N 95 மாஸ்க்கை கொரோனா வார்டில் பாதிக்கப்பட்ட  நோயாளிகளுடன் அதிக நேரம் இருக்கும் மருத்துவர்களும் மற்ற சுகாதார உதவியாளர்களும் அணிந்தால் போதுமானது. ஏசி அறைகள் மற்றும் சென்ட்ரலைஸ்டு ஏசி ஹாலில் வேலை செய்யும் அலுவலகங்களில் பணிபுரிவர்கள் கட்டாயம் துணியாலான மாஸ்க்காவது அணிந்து வேலை செய்ய வேண்டும்.