எலிக் காய்ச்சல்… எச்சரிக்கை!



மழைக்காலம் துவங்கிவிட்டாலே புதிது புதிதாக நோய்களும் படையெடுக்கத் தொடங்கிவிடுகின்றன. டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் ஒரு பக்கம் மக்களைக் காவு வாங்குகின்றன என்றால், எலிகள் மூலமாகப் பரவும் எலிக்காய்ச்சலும் இன்னொரு பக்கம் தீவிரமாகப் பரவிவருகிறது.
நோய் குறித்த எந்த ஒரு தீவிரத்தையும் ஆரம்பநிலையில் அறிகுறியாகக்கூட வெளிப்படுத்தாமல் இருப்பதில், இந்தக் கிருமிகள் சைலன்ட் வில்லன்கள். இதனாலேயே, இந்த எலிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் பரவலாக இல்லை.

விலங்குகள் மூலம் பரவக்கூடிய நோய்களில் ஒன்றுதான் எலிக்காய்ச்சல். மழைக்காலத்தில் தெருக்களில், சாக்கடைகளில் வசிக்கும் நோய்த்தொற்று ஏற்பட்ட எலிகள் கடிப்பதன் மூலமாகவோ அல்லது நோய்த்தொற்று ஏற்பட்ட எலிகளின் கழிவுகள் மூலமாகவோ விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இந்த நோய் பரவுகிறது. எலிக்காய்ச்சல், லெப்டோஸ்பிரா (Leptospira) எனப்படும் நுண்கிருமியினால் உருவாகிறது.

பரவும் விதம்:

எலிகளுக்கு லெப்டோஸ்பிரா கிருமித்தொற்று இருந்தால், மழைக் காலத்தில் தேங்கும் நீரில் எலிகள் புழங்கும்போது அவற்றின் சிறுநீர், ரத்தம், சதை ஆகியவற்றின் மூலம் கிருமிகள் பரவுகின்றன. உடலில் காயங்கள், புண்கள் உள்ள மனிதர்கள் இந்த நீரில் புழங்கும்போது அவர்களுக்கு இந்தக் கிருமிகள் தொற்றுகின்றன.

நல்ல நீரில் நோய்த்தொற்று உள்ள எலிகள் புழங்கினாலும் அந்த நீரைப் பயன்படுத்துவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது.

பெரும்பாலும் எலியினால்தான் பரவுகிறது. என்றாலும், லெப்டோஸ்பிரா தொற்று ஏற்பட்ட நாய், ஆடு, மாடு போன்ற விலங்குகள்மூலமாகவும் இது மனிதர்களுக்குப் பரவ வாய்ப்பு உள்ளது. ஆனால், ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்கு இவை தொற்றுவது இல்லை என்பது ஒரு ஆறுதல்.

அறிகுறிகள்:

தொடர் காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுவலி, கண் எரிச்சல், உடல் வலி போன்றவை எலிக்காய்ச்சலின் முக்கிய அறிகுறி. இந்த அறிகுறிகள் யாருக்கு இருந்தாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இல்லை எனில், உயிரையே பறிக்கும் அபாயம் உள்ளது.  

பரிசோதனைகள்:

ஒரு வாரத்துக்கும் மேற்பட்ட தொடர் காய்ச்சல் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். ரத்த மாதிரிகள் பிசிஆர், எலிசா (PCR, ELISA) பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும். இந்தப் பரிசோதனையில் லெப்டோஸ்பிரா ஆன்டிபாடி மற்றும் ஆன்டிஜன்கள் இருந்தால், அவை நுண்ணோக்கியில் தெரியும். இதைக்கொண்டு இந்தக் காய்ச்சலை உறுதிப்படுத்தலாம். சிலருக்கு, அவர்களின் உடல்நிலைக்கு ஏற்ப சிறுநீர்ப் பரிசோதனையும் செய்ய வேண்டியது இருக்கும்.

எலிக்காய்ச்சலுக்கு  முறையான சிகிச்சை எடுக்காமல் விடும்போது, மஞ்சள் காமாலை, சிறுநீரகப் பாதிப்பு, கணையப் பாதிப்பு, பித்தப்பை பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். மேலும், நோய் முற்றும்போது விஷத்தன்மை உடலில் அதிகமாகி செப்டிக் ஷாக் (Septic shock) ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு மரணம் சம்பவிக்கவும் வாய்ப்பு உள்ளது என்பதால் உடனடியாக சிகிச்சை அளிக்க வேன்டியது அவசியம்.

சிகிச்சைகள்:

எலிக்காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. மனிதர்களுக்கு  எலிக்காய்ச்சல் வராமல் இருப்பதற்கான தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் விலங்குகளுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தக்க சமயத்தில் கண்டறிந்து, முறையான சிகிச்சை அளிக்கும்போது ஒரு வாரத்தில் இந்தக் காய்ச்சல் குணமாக வாய்ப்பு உள்ளது.

உணவு எடுத்துக்கொள்ளுதல்:

எலிக்காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் மிகவும் காரம் இல்லாத, எண்ணெய் அதிகம் இல்லாத, நன்கு வேகவைத்த உணவுகளை அளவாக எடுத்துக்கொள்வது நல்லது.

எலிக்காய்ச்சல் தடுக்க...தவிர்க்க!

மழைக்காலங்களில் வெளியில் சென்று வந்ததும் கை, கால், முகம் ஆகியவற்றை சோப்பு போட்டு நன்கு கழுவிவிட வேண்டும். வீட்டில் எப்போதும் எலி ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது, நம் குடும்பத்தாரின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. மேலும், காய்ச்சல் குறித்த அறிகுறிகள் ஏற்பட்டவுடன், தங்கள் குடும்பநல மருத்துவரை, உடனடியாக அணுகுவது நல்லது.

- சரஸ்

எலிக்காய்ச்சல் Vs உலகம்  

எலிக்காய்ச்சல், உலக அளவில் ஒரு வருடத்துக்கு 10 லட்சம் பேருக்கும் மேல், பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதில், ஒரு லட்சம் பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. இதில், ஒரு சதவிகிதத்தினர் இறந்துவிடுகின்றனர்.