சங்கடங்கள் இல்லாத ஸ்மைல் சிகிச்சை!



பார்வைக் குறைபாட்டை கண்ணாடி அணிந்துதான் சமாளித்தாகவேண்டும் என்ற சம்பிரதாயத்தை மாற்றியது லேஸிக் சிகிச்சை முறை. கண்ணாடியில் பவர் சேர்த்து சரி செய்யப்படும் பார்வைக் குறைபாட்டை, கருவிழியின் அடர்த்தியைக் குறைத்து சரி செய்யும் லேஸர் சிகிச்சைக்கு உலகமெங்கும் வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும், கண்ணாடி அணிய விரும்பாத இளம் தலைமுறையினருக்கு இது பிடித்தமான சிகிச்சையாகவும் இருந்து வருகிறது. இதன் அடுத்த கட்டமாக அறிமுகமாகியிருக்கிறது ஸ்மைல் (Small Incision Lenticule Extraction) என்ற நவீன சிகிச்சை.

ஸ்மைல் சிகிச்சையில் அப்படியென்ன ஸ்பெஷல்? கண் சிகிச்சை மருத்துவரான அருள்மொழி வர்மன் விளக்குகிறார்.‘‘லேஸிக் சிகிச்சையில் கருவிழித் திரையை 100 மைக்ரான் ஆழத்தில், 28 மி.மீ. அளவில் சுற்றிலும் வெட்டி வெங்காயத்தின் தோலை உரிப்பதுபோல 90 சதவிகிதம் எடுக்க வேண்டும். அதனுள் கருவிழித் திரையின் அடர்த்தியைத் தேவையான அளவு குறைத்து, மீண்டும் அந்த கருவிழித்திரையை மூடிவிட வேண்டும்.

இதில் வெட்டப்பட்ட லேயர் மீண்டும் கரு விழித்திரையில் ஒட்டிக்கொண்டு குணமாக இரண்டு மாதம் வரை ஆகும். அதுவரை தண்ணீர் படக்கூடாது. ஏதாவது அதிர்வுகள் ஏற்பட்டால் அந்த திரை விலகிவிடும்.  வெட்டப்பட்ட இடத்து நரம்புகளில் வலி, உறுத்தல் இருக்கும்.இந்த சங்கடங்கள் இல்லாத வகையில் ஸ்மைல் (ஷினீவீறீமீ) சிகிச்சை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஸ்மைல் சிகிச்சையில் கருவிழித் திரையை 2 மி.மீ. மட்டுமே கீறி, உள்ளே கருவிழித் திரையின் அளவை லேஸர் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.

இதனால் விழித்திரையை எடுத்து, மீண்டும் மூட வேண்டியதில்லை. லேஸிக் சிகிச்சையினால் ஏற்படும் பக்கவிளைவுகளும் இருக்காது. அடுத்த நாளே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிடலாம். இந்த ஸ்மைல் சிகிச்சை ஜெர்மனியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டாலும் சமீபகாலமாகத்தான் உலகமெங்கும் பரவலாகி வருகிறது. 18 வயதுக்கு மேல் உள்ள யாரும் இந்த சிகிச்சையை செய்துகொள்ளலாம். லேஸிக் சிகிச்சைக்கு ஒரு லட்சம் வரை கட்டணம் இருக்கும். ஸ்மைல் சிகிச்சைக்குக் கூடுதலாக 30 ஆயிரம் வரை கட்டணம் அதிகமாகும்!’’

 எஸ்.கே.பார்த்தசாரதி
படம்: ஆர்.கோபால்