பல்லி மீது பழி போட வேண்டாம்!



தெரியுமா?

உதட்டோரத்தில் கொப்புளங்கள் ஏற்படும் நிலையில் பல்லி எச்சமிட்டதுதான் காரணம் என்று நாம் பொத்தாம் பொதுவாக சொல்லிவிடுகிறோம். ‘ஹெர்பீஸ் சிம்ப்ளக்ஸ்’ என்னும் வைரஸ் தாக்குதலால்தான் இது மாதிரியான கொப்புளங்கள் ஏற்படுகின்றன. அதனால் பல்லியை சபிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது குறித்து  விளக்குகிறார் சரும நோய் நிபுணர் ரவிச்சந்திரன்.

‘‘ஹெர்பீஸ் வைரஸ் தாக்குதலின் ஒரு பிரிவுதான் ஹெர்பீஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் தாக்குதல். எளிதில் தொற்றக்கூடிய தொற்று நோய். ஹெர்பீஸ் சிம்ப்ளக்ஸ் டைப் 1, டைப் 2 என இரு வகைப்படும். டைப் 1 என்பது Labilis என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக உதடு மற்றும் வாய்ப்பகுதிகளில் கொப்புளங்கள்ஏற்படுகின்றன. Primary எனப்படும் முதன்முறைத் தாக்குதல், Recurrent எனப்படும் அடிக்கடி தாக்குதல் என டைப் 1 இருவகைப்படும்.

முதன்முறை இத்தாக்குதலுக்குஆளாகும்போது கொப்புளங்களில் வலி அதிக அளவில் இருக்கும். தாடையில் நெறி கட்டிக்கொள்ளும். காய்ச்சலும் வரலாம். அடிக்கடி
தாக்கும்போது உடல் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராகி விடும் என்பதால் பெரிய விளைவுகள் இருக்காது. இந்த கொப்புளங்களைத்தான் பலர்பல்லியின் எச்சத்தால் ஏற்படும் புண், காய்ச்சல் புண், மாதவிடாய் புண் என்று சொல்கிறார்கள்.

எல்லோர் உடலிலும் ஹெர்பீஸ் வைரஸ் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் வரையிலும் அது நம்மைத் தாக்காது. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுதல் அவசியமாகும். வாயில் கொப்புளங்கள் இருப்பவர்கள் முத்தம் இடுவதைத் தவிர்த்து விட வேண்டும்.டைப் 2 என்பது Genital herpes - அதாவது, பிறப்புறுப்பில் ஏற்படக்கூடிய கொப்புளங்கள். இதுவும் Primary, Recurrent என்று இருவகை தாக்குதல்களை நடத்தவல்லது. பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாக வரும் பால்வினை நோய்தான் இது.

பெண்கள் மகப்பேறு காலத்தில் இத்தாக்குதலுக்கு ஆளானால் சிசேரியன் மூலம் குழந்தையை பெற்றுக்கொள்வதே சிறந்தது. பிறப்புறுப்பின் வழியாகவெளியேறும் சூழலில் குழந்தையும் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகலாம். Acyclovir எனும் வைரஸ் எதிர்ப்பு மருந்தின் மூலம் இதனை சரி செய்யலாம். ஹெர்பீஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் தாக்குதலை முறையான மருத்துவ ஆலோசனையின் மூலம் எதிர்கொள்வதே சிறந்தது’’ என்கிறார் ரவிச்சந்திரன்.

- கி.ச.திலீபன்
 படம்: ஆர்.கோபால்