‘ஓம் க்ரீம் க்லீம் ஜபாம் உனக்கு மூக்கு முளைக்கட்டும்!’



கல்லாதது உலகளவு!

‘எந்திரன்’ படத்தில் ஒரு சீனில் ரோபோ ரஜினிக்கு பாம் வெடித்து கை போய்விடும். சயின்டிஸ்ட் தாடி ரஜினி புது கை மாட்டுவார். இன்னொரு சீனில், `ரோபோ குழந்தை பெத்துக்கிறதுக்கு வேண்டிய எல்லா அயிட்டமும் ரெடி பண்ணிட்டேன்’ என்பார். `என்னடா குண்டக்க மண்டக்கன்னு எதையாவது தயாரிச்சுட்டானா’னு பாத்தா, `செயற்கை மரபணு ரெடி பண்ணிட்டேன்’னு சொல்வார். கூடிய சீக்கிரமே இது இரண்டையும் ஆராய்ச்சிக்
கூடத்தில் தயார் செய்யும் நிலைமை வந்து விடும்!

பட்டைப்புழு (Flatworm) தன் தலை துண்டிக்கப்பட்டால் கூட புது தலையை வளர்த்துக் கொள்ளுமாம். பல்லி வால் கட் ஆனால், புது வால் முளைப்பதை நாமே பார்த்திருக்கிறோம். நட்சத்திர மீனின் ஒரு கால் வெட்டப்பட்டால் திரும்ப முளைத்து விடும். `மெக்சிகன் சாலமென்டர்' எனும் பிராணி தலை, வால், கால், தோல் என எதையும் புதிதாக உருவாக்கிக் கொள்ளும்.

நம்மாலோ முடி இழந்தால் கூட புதிதாக வளர வைக்க முடியாது. பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்வதெல்லாம் சூப்பர் காமெடி மோசடி. ஆனால், நம்
கல்லீரலுக்கு வளரும் சக்தி உள்ளது. அதனால் உயிரோடு இருக்கும் போதே கொஞ்சம் கல்லீரலை இல்லாதவர்களுக்கு தானமாகக் கொடுத்தால் கூட உங்கள் கல்லீரல் திரும்ப பழைய சைஸுக்கு வளர்ந்து விடும்.

சின்ன வயதில் சைக்கிளில் குரங்கு பெடல் போட்டு முட்டியில் அடிபட்டிருக்கிறோம்... பாட்டி, பேய் கதை சொல்லி கனவில் அது துரத்தி, கட்டிலில் இருந்து விழுந்து மண்டையில் அடிபட்டிருக்கிறோம். கபடி, கிரிக்கெட்டில் படாத அடியா, போடாத தையலா? ஆனால், வயதானால் ஏன் எந்தக் காயமும் உடனே ஆறுவதில்லை?  அது படைப்பின் ரகசியம். இளவயதில் நாம் ஓடி ஓடி உழைக்க வேண்டும். அதனால் காயம் சீக்கிரம் ஆற வேண்டும். முதுமையில் ரெஸ்ட்தானே... அதனால் லேட்டானால் பரவாயில்லை என இயற்கை நமக்கு விதிகளை வகுத்திருக்கிறது.

இளமையில் காயங்கள் சீக்கிரம் ஆறுவதற்கு, லின் 28A எனும் மரபணுதான் காரணம். முதுமையில் இந்த மரபணு ஸ்விட்ச் ஆஃப் ஆகி விடுகிறது. இந்த லின் மரபணுவை நமது நன்பனான சுண்டெலியில் தூண்டியிருக்கிறார்கள்.

அது காயங்களை உடனே ஆற்றுவதோடு, உடைந்து போன அதன் கால் விரலை மறுபடியும் வளர உதவியிருக்கிறது. எலியின் காலை உடைத்த ஆளை திட்டாதீர்கள். நாளை நமக்கே இந்த ஆராய்ச்சி பயன் தரலாம். பிராய்லர் கோழி ஆட்களுக்கு இந்த வெட்டினால் வளரும் மேட்டர் கையில் கிடைத்தால் ஜாலியாகக் கூடும். கோழி லெக் பீசை டெய்லி வெட்டி விக்கலாம். திரும்ப வளர்ந்து விடும். செம கல்லாதான்!

சேலத்தில் `ஸ்பைனா பைபிடா' எனும் நோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு அவர்கள் செல்லை வைத்தே சிறுநீர்ப்பையை உருவாக்கி பொருத்தி இருக்கிறார்கள். சில குழந்தைகளுக்கு புதிதாக சிறுநீர் குழாயான யுரித்ராவை வளர்த்து பொருத்தியிருக்கிறார்கள். உடனே, `எனக்கு ஒரு கிட்னி இல்லை. சேலத்துக்கு தட்கல் டிக்கெட் போடு’ன்னு சொல்லக்கூடாது. இது அமெரிக்காவில் இருக்கும் சேலம்!

அடாலா எனும் அங்குள்ள டாக்டர், பேஷன்ட் நெஞ்சில் உள்ள கார்ட்டிலேஜை கொஞ்சம் எடுத்து, காது போல உருவம் அமைத்து அவரின் வயிற்றுப்பகுதி தோலுக்கு அடியில் வைத்து விட்டார். கொஞ்ச நாளில் அதை எடுத்துப் பார்த்தால் காதாகவே மாறியிருந்தது. போரில் வெடிகுண்டு வெடித்து காது துண்டான பலருக்கு இப்படி புது காதுகளை உருவாக்கி ஒட்டி இருக்கிறார்கள்.

இந்தக் கும்பல் ஒரு முயலின் ஆணுறுப்பை வெட்டி எரிந்து விட்டு ஏதேதோ அகால் ஜுகால் ஆராய்ச்சி வேலை செய்து ஃப்ரெஷ்ஷாக புது உறுப்பை வளர்த்து விட்டிருக்கிறார்கள். செம கெத்து பார்ட்டிகள்! அது நன்றாக வேலையும் (?) செய்கிறதாம். அந்த முயல் இப்போ குடும்பத்தோடு ஜாலியாக டிஸ்கவரி சேனல் பார்க்கிறது. அந்த குஜிலி டாக்டர்கள் சீக்கிரமே நுரையீரலையும் கல்லீரலையும் உருவாக்கி விடுவார்கள் போலிருக்கிறது.

இதைப் போன்ற பல ஆராய்ச்சி ஐடியாக்கள் நம் புராணங்களிலும், கதைகளிலும் உள்ளன. நம் பழைய புராணங்களை புரட்டினால் பொற்கைப் பாண்டியன் இருப்பார். காற்று குழாயான டிரக்கியாவை ஒருவர் இழந்து விட்டார். அவரது ஸ்டெம் செல்லை எடுத்து அச்சில் வைத்து பிவிசி குழாய் செய்வது போல காற்று ட்யூபை செய்து ஃபிக்ஸ் பண்ணியிருக்கிறார்கள். இஸ்ரேல் பார்ட்டிகள் அழிக்கவும் மட்டுமில்லை, ஆக்கவும் செய்வார்கள். அச்சில் ஸ்டெம் செல்களை வைத்து, புது எலும்பை செய்து காட்டி பிராணிகள் உடலில் வைத்தும் காட்டியிருக்கிறார்கள். இன்னும் ஐந்து வருடங்களில் இதை மனிதர்களிடம் செய்து காட்டப் போகிறார்களாம்.

இதனால் ஹை இம்பாக்ட் (High impact) விபத்துகளில் சிக்கி எலும்பு கூழாகி அதை இழந்தவர்கள் வருங்காலத்தில் பயன் பெறுவார்கள். ஜப்பானில் கொஞ்சம் செல்களை வைத்து குட்டி குட்டி கல்லீரலை உருவாக்கி இருக்கிறார்கள். `பெரிய ஈரல் போனால் என்ன, பல குட்டி ஈரலை உடலில் வைத்து விடுவோம்’ என்கிறார்கள்.

 எலியில் இதை வெற்றிகரமாக செய்து காட்டி, `ஜப்பானில் இருப்பவன் எல்லாம் சப்பாணி அல்ல' என்பதை நிரூபித்திருக்கிறார்கள். பிட்யூட்டரி சுரப்பி குறைவாக வேலை செய்யும் போது அதை எடுத்துவிட்டு ஆய்வுக்கூடத்தில் புதுச் சுரப்பியை உருவாக்கி எலிக்குள் வைத்து அது வேலை செய்வதையும் காட்டியிருக்கிறார்கள் ஜப்பானின் ஜக்குபாய்ஸ்!

‘இதெல்லாம் கேட்டா நல்லாதான் இருக்கு, இப்ப எதுனா இருக்கானு சொல்லு’ என்பவர்களுக்கு `காஞ்சனா-2' லெவலுக்கு ஒரு கிர்ரடிக்கும் மேட்டர். 15 வருடங்களாக ஒரு சர்ஜரி பல இடங்களில் நடந்து வருகிறது. கையில் கன்னாபின்னா என அடிபட்டு காயப்போட்ட கிச்சன் துணி மாதிரி ஆகிவிட்டால், முடிந்த அளவு ஒட்டி, பட்டி டிங்கரிங் பார்த்து, வயிற்றின் தோலுக்கடியில் வைத்து தைத்து விடுவார்கள்.

நம் உடலே அதை ஓரளவுக்கு ஆற்றி தசை, தோல் எல்லாவற்றையும் புதிதாக உருவாக்கி விடும். அப்புறம் தையலை பிரித்து கையை யூஸ் பண்ணிக்கலாம். விரல் துண்டானாலும் அதை எடுத்துக் கொண்டு சீக்கிரம் மருத்துவமனைக்கு போனால் ஒட்ட வைத்து வயிற்றில் வைத்து தைத்தால் ஒட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. தோல் எரிந்து போன அல்லது விபத்தில் தோல் உரிந்து போனவர்களுக்கும் இது மிகப்பெரும் வரப்பிரசாதம்.

கண் தானம் செய்த பின் மருத்துவர்கள், வெளியே இருக்கும் கார்னியாவை மட்டும் எடுத்து கார்னியா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்குப் பொருத்துவார்கள். கார்னியாவை லேபிள் வைத்து தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டு இருக்கிறது. இதயம், ஈரல், நரம்பு செல்கள், தண்டுவடம், எலும்பு, கை, கால், கிட்னி, கண், தோல் போன்ற பல உறுப்புகள் வருங்காலத்தில் ஆராய்ச்சிக்கூடத்தில் உருவாக்கப்படலாம்.

நமக்கு அல்ல, நமது வருங்கால சந்ததியினருக்கு. நமது பொறுப்பு அவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்குவது மட்டுமே. அவர்களுக்கு கை போனாலும் கால் போனாலும் அறிவியல் அதை உருவாக்கி கொடுத்து விடும். குணத்தை டெஸ்ட் ட்யூபில் உருவாக்க முடியாது. அதை நாம் தான் புகட்ட வேண்டும்.

புதிதாக கை முளைத்தாலும், `அது அணை க்க மட்டுமே, ஆசிட் அடிக்க இல்லை’ என்ற மனதுடன் இருக்க வேண்டும்.  இப்போது நம்மால் செய்யக்கூடியது உறுப்பு தானம் மட்டுமே. இருக்கும் போது ரத்த தானம் செய்யலாம். ஒருவர் மூளைச்சாவு அடைந்த  பின் அவரின் கண், எலும்பு, தோல், இதய வால்வு, இதயம், காது ஜவ்வு, கணையம், கிட்னி, கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை தானம் செய்யலாம். இந்த உறுப்புகள் இல்லாதவர்கள் படும் பாட்டை பார்த்தால் நமக்கு இதயம் கனக்கும். இதில் பலர் உயிரை கையில் பிடித்து கொண்டு வாழ்பவர்கள்.

 அதில் பலர் குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக இருப்பவர்கள். சாகப் போகிறோம் எனத் தெரிந்த பின் குடும்பத்தை தவிக்க விட்டுப் போகிறோமே என்ற இயலாமையில் புழுங்கி சாகிறவர்கள். உங்கள் உறவினர் மூளைச்சாவு அடையப் போகிறார் என்றால் மருத்துவரிடம் கூறி உறுப்பு தானம் செய்ய சம்மதம் எனச் சொல்லுங்கள். தானம் பெறும் குடும்பங்களுக்கு நீங்கள் குல தெய்வம் ஆகி விடுவீர்கள்.    
 
நம்மாலோ முடி இழந்தால்கூட புதிதாக வளர வைக்கமுடியாது. பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்வதெல்லாம்சூப்பர் காமெடி மோசடி!

நமது பொறுப்பு வருங்கால சந்ததியினரை நல்ல மனிதர்களாக  உருவாக்குவது மட்டுமே. அவர்களுக்கு கை போனாலும் கால் போனாலும்
அறிவியல் அதை  உருவாக்கி கொடுத்து விடும். குணத்தை டெஸ்ட் ட்யூபில் உருவாக்க முடியாது. அதை நாம்தான் புகட்ட வேண்டும்!

- ஆச்சரியங்கள்
காத்திருக்கின்றன!

டாக்டர் வி.ஹரிஹரன்