சொக்க வைக்கும் செல்ஃபி நீங்கள் என்ன நிலை?



புது மோகம்

எங்கு பார்த்தாலும் செல்ஃபி மோகம்!ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷனரியின் லேட்டஸ்ட் பதிப்பில் இடம் பெறுகிற அளவுக்கு ‘செல்ஃபி’என்கிற வார்த்தைக்கு அந்தஸ்து உயர்ந்திருக்கிறது. தன்னைத்தானே செல்போனில் படம் எடுத்து அழகு பார்க்கும் செல்ஃபி கலாசாரம், அவரவர் திருப்தியோடு நின்றுகொண்டால் பிரச்னையில்லை. அடிமைத்தனமாக உருவாகி, அடுத்தடுத்த விபரீதங்களை உருவாக்குவதில்தான் பிரச்னையே!

தற்செயலான விபத்து முதல் தற்கொலை வரை பல உயிர் பறிப்புகளுக்குக் காரணமாக இருக்கும் செல்ஃபி மோகத்தை மனநோய்களில் ஒன்றாக அறிவித்துள்ளது அமெரிக்காவின் மனநல அமைப்பு. இந்த நோய்க்குசெல்ஃபிடிஸ் (Selfitis) என்று பெயரிட்டு, இந்த பாதிப்புள்ளவர்களை மூன்று பிரிவினராக பிரித்துள்ளது.

பார்டர்லைன் செல்ஃபிடிஸ் 
(Borderline selfitis)

இது ஆரம்பகட்ட பிரச்னை.இவர்கள் ஒருநாளில் குறைந்தது 3 முறை தங்களை செல்போனில் போட்டோ எடுத்துக் கொள்வார்கள். ஆனால்,சமூகத்தளங்களில் வெளியிட
மாட்டார்கள்.

அக்யூட் செல்ஃபிடிஸ்
(Acute selfitis)

இவர்களுக்கு ஒரு நாளைக்கு தங்களை குறைந்தது 3 முறையாவது செல்போனில் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் போடவில்லை என்றால் தூக்கம் வராது.

க்ரோனிக் செல்ஃபிடிஸ்
(Chronic selfitis)

நாள் முழுவதும் செல்போனில் தன்னைத்தானே படம் எடுப்பதும், சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும், அதற்கு வரும் வரவேற்பை பார்த்து மகிழ்ச்சி அடைவதும்தான் இவர்களின் வேலையே. இவர்களுக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை தேவை. தகுந்த நேரத்தில் சிகிச்சை கொடுக்காவிட்டால் பெரிய அபாயங்களில் சிக்கிக் கொள்வார்கள்.

இந்த செல்ஃபிடிஸ் நோயை ஓசிடி (Obsessive compulsive disorder) எனப்படும் எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோயாக அறிவிக்க வேண்டும் என்று மனநல மருத்துவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். இப்போதைக்கு இந்த மனநோய்க்கு மருத்துவம் இல்லை என்றும், Cognitive Behavioural Therapy (CBT)   எனும் ‘அறிவாற்றல் ஒருங்கிணைப்பு சிகிச்சை’ மட்டுமே தற்காலிகத் தீர்வு என்றும் எச்சரிக்கிறது அமெரிக்கன் சைக்யாட்ரிஸ்ட் அசோசியேஷன்!

இப்போதைக்கு இந்த மனநோய்க்கு மருத்துவம் இல்லை. தற்காலிகத் தீர்வு மட்டுமே உண்டு!