துணையுடன் சண்டை போட்டால் உடல் குண்டாகும்!



திருமணத்துக்குப் பிறகு உங்கள் துணையுடன் அடிக்கடி சண்டையிட்டு உங்களின் மன அமைதி கெட்டுப் போகிறதா? ‘ஆமாம்’ என்றால் உங்களுக்கு பருமன் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சமீபத்திய அமெரிக்க ஆய்வு சொல்கிறது. துணையுடன் சண்டை போட்ட பிறகு, அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்டால், அந்த உணவிலுள்ள ஆற்றல் கரைவதில் மாற்றம் ஏற்படுவதே இதற்குக் காரணம். 24 முதல் 61 வயது வரை உள்ள 43 தம்பதிகளை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த முடிவை அறிவித்துள்ளார்கள்.

‘மன அழுத்த நோயினால் நீண்ட நாட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பொதுவாகவே பருமன் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அவர்களின் மனநலக் கோளாறுகளை சரி செய்வதே பருமனை குறைக்க முதல் வழி’ என்கிறார் அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜன் கிகோல்ட் கிளாசர். கணவன் - மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வருவது சகஜம்தான். ஆனால், அதன் பிறகு கொழுப்பு உணவுகளை அவர்கள் எடுத்துக் கொண்டால், உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில் பலவித பிரச்னைகள் ஏற்படுகின்றன. கொழுப்புள்ள உணவில் உள்ள கலோரிகளில் சில மட்டும் கரைந்துவிடும்.

மற்றவை இன்சுலினை அதிகமாகச் சுரக்கச் செய்து, கொழுப்பு அமிலங்களையும் அதிகமாக்கி, கரையாத கொழுப்பாக ரத்தத்தில் தங்கிவிடுகின்றன. இதன் காரணமாகத்தான் எளிதாக பருமன் ஏற்படுகிறது. உணவு சாப்பிட்ட பின் கலோரி செலவாவது குறைவதன் மூலம், ஆண்டுக்கு 5.4 கிலோ எடை அதிகரிக்கும். பருமன் ஆவதால் இதய நோயும் நீரிழிவும் எளிதில் தாக்கும். ஸோ... சண்டையிலும் சாப்பாட்டிலும் கவனமா இருங்க!

சண்டையில் மட்டுமல்ல... சண்டைக்குப் பிந்தைய சாப்பாட்டிலும் கவனமா இருங்க!

காட்டுத்தக்காளி உடலுக்கு நல்லது!

நாட்டுத் தக்காளி நல்லதா? பெங்களூரு தக்காளி நல்லதா? இந்தக் குழப்பம் பலருக்கும் உண்டு. ‘இரண்டையும் விட காட்டுத் தக்காளியே சிறந்தது’ என்கிறார்கள் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள். அதிக அளவு ஆன்டிஆக்சிடன்ட்டுகள் உள்ள காட்டுத் தக்காளி களை உருவாக்கும் முயற்சி இப்போது தொடங்கியுள்ளது.

காட்டுத் தக்காளி சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகிறது. நோய் எதிர்ப்புத் திறனுக்குக் காரணமான ஆன்ட்டி ஆக்சிடன்ட்டுகளை தக்க வைத்துக் கொள்கிற காட்டுத் தக்காளிகளின் சக்தி, தோட்டங்களில் பயிரிடப்படும் தக்காளிகளில் இருப்பதில்லை என்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

 இவ்வகை தக்காளிச் செடிகளை வீடுகளில் வளர்க்கலாமா என்றும் ஆராய்ச்சி செய்கிறார்கள். சாதாரண வகை தக்காளிகளில் ஆன்டி ஆக்சிடன்ட்டுகளை அதிகமாக்கவும் முயற்சி செய்கிறார்கள்.