கடத்தல் எறும்புகள்



பூச்சிப் பூக்கள் 11


டாக்டர் ஆர்.கோவிந்தராஜ்

சுறுசுறுப்பிற்குப் பேர் போனவை எறும்புகள் என்கிறோம். ஆனால் இந்த எறும்புகளில் சோம்பேறி ரகமும் இருக்கிறது தெரியுமா? இவை கொஞ்சம் முரட்டுப் பேர்வழிகள். சொல்லப் போனால் எறும்பு தாதாக்கள்! இவை சில எறும்புகளை மிரட்டி அதிகமான அளவில் பூக்களில் கிடைக்கும் தேனைக் குடிக்கச் செய்கின்றன. இப்படி இந்த அடிமை எறும்புகள் தமது இயல்புக்கு மேல் நான்கு மடங்கு அதிகமான அளவு தேனைக் குடிக்கின்றன. இதனால் வயிறு உப்பி, மூச்சு வாங்க புற்றுக்கு மீளும், அந்தக் கொத்தடிமை எறும்புகள்!

இவ்வாறு அதிகபட்ச தேனுடன் புற்றிற்கு மீண்ட அடிமை எறும்புகளை, புற்றின் கூரைப்பகுதியில் உள்ள இடுக்குகளில் மட்டுமே தங்க அனுமதிக்கின்றன. அங்கே அமர்ந்து கொண்டு, தம் வயிற்றின் உபாதை பொறுக்க மாட்டாமல் இவை வாந்தியெடுக்கத் துவங்கும். இந்த வாந்தியில் உள்ள தேனின் சத்துக்களை கீழே உள்ள சொகுசு எறும்புகள் சுவைத்து மகிழும்.

நம்ம ஏரியாவில் நறுக்கென்று கடிக்கும் ஒரு எறும்பிற்கு அறுவடை எறும்பு (Harvest Ant) என்று பெயர். இவை பல்வேறு தானியங்களை தமது குடோன்களில் உள்ள குச்சிகளால் ஆன ஷெல்ஃப்களில் சேமித்து வைக்கின்றன. மனிதர்களைப் போலவே வேனிற் காலத்தில் இவற்றையெல்லாம் வெளியில் எடுத்து வந்து, கெட்டு விடாமலிருக்கும் வகையில் வெயிலில் உலர்த்தி மறுபடி ஷெல்ஃபில் அடுக்கி வைக்கின்றன: பொறுப்பான எறும்புகள்!

மற்றொரு ஆச்சரியமான எறும்பிற்கு விவசாய எறும்பு (Agriculture Ant) என்று பெயர். இவை தமக்குத் தேவையான இரையை பிறரை நம்பாமல் தாமே உற்பத்தி செய்து உட்கொள்கின்றன. தன்னம்பிக்கை மிகுந்த இந்த எறும்புகள், சில குறிப்பிட்ட நொதிக்கும் தன்மை கொண்ட தாவரங்களை அடையாளம் கண்டு, அவற்றை தம் வாயில் சூயிங்கம் போல் மென்று, நல்ல ஈரப்பதத்தோடு தம் புற்றிற்குள் பாதுகாப்பாய் சேமித்து வைக்கும். சில நாட்களில் இதில் வளரும் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த காளான் உணவை இந்த எறும்புகள் உட்கொள்கின்றன. இவை பிறஉயிர்களுக்கு எவ்விதமான தீங்கும் இழைக்காமல் இப்படி உணவுண்டு வாழ்வது ஆச்சரியமே! இவை உலக மகா சைவ எறும்புகளாகும்.

சில ரௌடி எறும்புகள் ‘அஃபிட்’ என்னும் ஒருவகைப் பூச்சியைப் பிடித்து வந்து, பசுமாடு போல் அதைப் பராமரிக்கின்றன. கூடவே அவை சுரக்கும் இனிப்பான திரவத்தை நல்லுணவாக உட்கொண்டு மகிழ்கின்றன. இந்த அஃபிட் பூச்சிகள் ஒரு விதத்தில் ஆயுள் கைதிதான்! நிச்சயமாக ஆயுள் தண்டனையே. இதை விடவும் கொடூர எறும்பினங்களும் இருக்கின்றன.

பொதுவாக எறும்புகளின் மீது நம் வீட்டுப் பெண்களுக்கு ஒரு அலாதிப் பிரியம் இருக்கிறது. இந்த எறும்புகள் காலடிபட்டு நசுங்கி இறந்து விடாமலிருக்க புத்தத் துறவிகள் விசிறிக் கொண்டே கூட செல்கிறார்கள். ஆண்களும் கூட ஈ, கொசுவைப் போல் எறும்புகளைக் கையால் அடித்துக் கொல்வதில்லை. இந்த அளவிற்கு நம் அன்பைப் பெற்ற எறும்புகளில் ஒரு வக்கிரமான எறும்பு வகையும் உள்ளது. இவை இரக்கமற்ற இரும்பு எறும்புகள்!

இவை பெருங்கூட்டமாய் மற்றொரு எறும்புப் புற்றுக்குச் சென்று ரெய்டு நடத்துகின்றன. அங்குள்ள இளம் லார்வா புழுக்களான குழந்தைகளைக் கவர்ந்து வந்து தமது புற்றில் வைத்து வளர்த்து ஆளாக்குகின்றன. இவ்வாறு உருவாகும் எறும்புகளுக்கு தமது பெற்றோரும் பூர்வீகமும் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே இவற்றை அடிமைகளாக வளர்த்து, வேலை வாங்குகின்றன என்பது மெய்சிலிர்க்க வைக்கும் நிஜம்.

நம் வீடுகளில் புசுபுசுவென்று உலாவரும் சிறிய பிள்ளையார் எறும்புகளுக்கு சிறிய கருப்பெறும்பு என்ற ஒரு செல்லப் பெயரும் உள்ளது. இந்த எறும்புகள் இயற்கையில் கிடைக்கும் சைவ மற்றும் அசைவ உணவு களை விடவும் சமைத்த உணவுகளையே பெரிதும் விரும்புகின்றன. அதிலும் கூட சர்க்கரை மிகுந்த இனிப்பான பதார்த்தங்களின் மேல் இபுவற்றுக்குத் தீராத நாட்டம்! பூச்சியினத்தைச் சேர்ந்த இந்த எறும்புகளில் இனவிருத்தி செய்யும் ராணி எறும்புகளுக்கு மட்டும்தான் இறக்கைகள் இருக்கின்றன.

இதைக் கொண்டு இவை பறந்து பறந்து உல்லாசம் கொள்கின்றன. மற்றபடி புற்றில் வாழும் அனைத்து ஆண் மற்றும் வேலைக்கார எறும்புகளும் பாவம், நடந்து தான் தூரம் கடக்க வேண்டும். எனினும் இவற்றின் நடையில் மகா ஒழுக்கமும் வேகமும் ராணுவ ரீதியில் அமைந்திருக்கும். எனவேதான் சாரை சாரையாக எறும்புகள் ஊர்வதை நாம் அவ்வப்போது பார்க்கிறோம்!

இப்படியான இயல்புக்கு மாறுதலான பல வேறுபட்ட இயக்கங்களைக் கொண்ட எறும்புகளும் இப்புவியில் இருக்கின்றன. குறிப்பாக ஜம்ப்பிங் எறும்புகள். இவை தாவித் தாவிக் குதித்தே தூரம் கடக்கின்றன. சில எறும்புகள் காற்றில் உயரத்திலிருந்து தரைக்கு நீள்தூரம் பறக்கின்றன. இதுபோக சில எறும்புகள் நீந்தவும், மூழ்கவும் செய்து தண்ணீரில் விளையாடுகின்றன. இவை நீரில் மிதக்கும் காய்ந்த தாவர இலைகளுக்கும் தண்ணீருக்கும் இடையே ஒரு வெற்றிடத்தை உருவாக்கி அதில் ஆக்சிஜனைச் சேமித்துக் கொண்டு நீருக்குள் மூழ்கி ஜமாய்க்கின்றன. சில எறும்புகள், ஒரு பெரிய நீர்க் குமிழிக்குள் சேகரிக்கப்பட்ட ஆக்சிஜனுடன் தைரியமாகத் தண்ணீருக்குள் மூழ்குகின்றன. இது ஒருவகையில் செதிலற்ற மீன் சுவாசம்!

(தொடரும்)