டிஜிட்டல் மயம்!



டிவியில் டிஜிட்டல் சேனல் என்கிறார்களே... இதில் என்ன வித்தியாசம்?
- எஸ்.மகேஷ், 9ம் வகுப்பு,
ஜவஹர் பள்ளி, நெய்வேலி.

டிவிக்கு சேனல்கள் வரும் முறையிலுள்ள நவீன மாற்றத்தையே டிஜிட்டல் சேனல் என்று கூறுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பயன்பாட்டில் இருந்த சாதா கேபிள் முறையில் சிக்னல்கள் துல்லியமும் தெளிவும் குறைவாக இருப்பது வழக்கம். இப்போதைய முறையில் என்ன நடக்கிறது? முதலில் தகவல் (ஒளியும் ஒலியும்) டிஜிட்டலாக மாற்றப்படுகிறது. அதாவது இன்புட்டுக்கு தகுந்தாற்போல அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் அனலாக் சிக்னல்களை கணிப்பொறிகளில் பயன்படுத்தும் வகையில் ஆன்/ஆஃப் அல்லது 1/0 பல்ஸ்களாக மாற்ற முடிகிறது.

ஒலி, ஒளி, தகவல் - இப்படி எதுவாக இருந்தாலும் மின் துகளாக மாற்றி அனுப்பி, இறுதி முனையில் பழைய வடிவிலேயே பெற்றுவிட முடியும். இதனால் ஆற்றல் சேமிக்கப்படுவதோடு, தேவையற்ற இரைச்சலும் நீக்கப்படும். அதனால்தான் இப்போது அவ்வளவு அழகான காட்சிகள் உங்கள் சின்னத்திரையில்! இதன் அடுத்த கட்டம்தான் ஹெச்டி சேனல்கள்... துல்லியத்திலும் துல்லியம்!

அருகருகே ஒன்றுக்கு மேற்பட்ட செயற்கைக்கோள்களை நிறுத்த முடியுமா?
- ரம்யா ராமகிருஷ்ணன்,
9ம் வகுப்பு, சங்கரா பள்ளி,
சென்னை-41.

முடியும். டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன் இது. சிக்னல்கள் ஒன்றோடு ஒன்று கலந்துவிடாமலே ஒன்றுக்கும் அதிகமான செயற்கைக்கோள்களை ஒரே லாஞ்ஜிடியூடில் வைக்க முடியும். உதாரணமாக... இன்சாட் 3சி, கல்பனா 1, எஜுசாட் - இந்த மூன்றுமே ஒரே லாஞ்ஜிடியூடில் ஒன்றாக உள்ளன.

இன்சாட் ஈ, பி - இரண்டும் ஒன்றாகவே இருக்கின்றன. ஜியோ ஸ்டேஷனரி ஒளிவட்டப்பாதையில் இருக்கிற ஸ்லாட்கள் வரையறைக்கு உட்பட்டவை என்பதால், அவை சர்வதேச டெலி கம்யூனிகேஷன் யூனியன் மூலமே வழங்கப்படுகின்றன.

மேலும், நிலத்திலுள்ள ஆண்டெனாக்கள் தங்களுக்கான செயற்கைக்கோளை இனங்கண்டு பிரித்தறிய வேண்டும். ஹசனிலும், அங்கிருந்து 1000 கிலோமீட்டர் தொலைவிலுள்ள போபாலிலும் மாஸ்டர் கட்டுப்பாடு மையங்களை இஸ்ரோ அமைத்துள்ளது. இவ்விரு மையங்களும் ஒரே நேரத்தில் செயல்பட்டு, ஒரே இடத்தில் உலவிக்கொண்டிருக்கும் செயற்கைக்கோள்களைப் பிரித்து அறியும். 150 மீட்டர் கோணம் என்ற அற்புதமான துல்லியத்தில் செயற்கைக்கோளின் சுற்றுப்பாதையை வரையறுக்க முடியும்.

ஒவ்வொரு கட்டுப்பாட்டு மையத்திலும் ஜீரோ டிகிரி கிழக்கு லாஞ்ஜிடியூட் முதல் 150 டிகிரி வரை எந்த செயற்கைக்கோளையும் கண்காணித்து அதன் செயல்பாடுகளை மதிப்பிட முடியும். அருகிலிருக்கும் இரு செயற்கைக்கோள்களின் சிக்னல்களைக் கொண்டு, 150 மீட்டர் துல்லியத்தில் செயற்கைக்கோளின் இருப்பிடத்தை வரையறுக்க முடியும். புவியின் லாஞ்ஜி டியூடுக்கு மேல் ஜியோ சிங்க்ரனைஸ் வளையத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயற்கைக்கோள்கள் இருக்கும்போதோ, ஒரே இடத்தில் இரு செயற்கைக்கோள்கள் உள்ளபோதோ இப்படித் துல்லியமாக அறிவது பெரிதும் உதவுகிறது.