அடேங்கப்பா இந்திய ரயில்வே!



இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 14 ஆயிரத்து 300 ரயில்கள் ஓடுகின்றன. இவை அனைத்தும் இணைந்து செல்லும் தூரத்தைக் கணக்கிட்டால், நிலவுக்கு மூன்றரை முறை சென்று வரும் தூரம்.

இந்திய ரயில்களில் தினம் தினம் இரண்டரை கோடிப் பேர் பயணிக்கின்றனர். இது ஆஸ்திரேலியக் கண்டத்தின் மக்கள்தொகையைவிட அதிகம்.

64 ஆயிரம் கி.மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதைகள் போடப்பட்டுள்ளன. இதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்து  உலகில் நான்காவது இடம்   இந்தியாவுக்கு.

இந்தியாவின் மிக வேகமான ரயில், போபால் - டெல்லி சதாப்தி எக்ஸ்பிரஸ். மணிக்கு 140 கி.மீட்டர் வேகத்தில் பறக்கிறது. விரைவில் டெல்லி - ஆக்ரா பாதையில், மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ரயில் பயணிக்கப் போகிறது.

மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில்தான் இந்தியாவின் மிக மெதுவாகப் பயணிக்கும் ரயில். சராசரியாக மணிக்கு 10 கி.மீ வேகம். இது சுற்றுலா ரயில் என்பதால், வேகம் குறித்த புகார்கள் இல்லை.

மிகக் குறைந்த தூர ரயில் பயணம் 3 கி.மீ. இது நாக்பூர் - அஜ்னி இடையே பயணிக்கும் ரயில். நாக்பூர் ஸ்டேஷனிலிருந்து அஜ்னியில் இருக்கும் ரயில்வே ஒர்க்ஷாப்புக்கு ஊழியர்கள் செல்வதற்காக இயங்கும் ரயில் இது.

இந்தியாவின் மிக பரபரப்பான ரயில் நிலையம் லக்னோ. தினமும் 64 ரயில்கள் வந்து செல்கின்றன; இரண்டாவது மிக பிசியான ரயில் நிலையம் மொகல் சராய். இதுவும் உத்தரப் பிரதேசத்தில்தான் உள்ளது.

மிகச் சிறிய பெயர் கொண்ட ரயில்வே ஸ்டேஷன் இப்மிஙி. இது ஒடிசாவில் உள்ளது.

ஹௌரா - அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ்தான் மிக அதிக இடங்களில் நின்று செல்லும் ரயில். இது வழியில் 115 ஸ்டேஷன்களில் நிற்கிறது.

எப்போதும் சரியான நேரத்துக்கு வராத ரயில், கவுகாத்தி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ். இதன் பயண நேரம், 65 மணி, 5 நிமிடங்கள். சராசரியாக இது 10 முதல் 12 மணி நேரம் தாமதமாகவே போய்ச் சேர்கிறது.

மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தில் ஒரே இடத்தில் இரண்டு ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன. ஒருபுறம் செல்லும் ரயில்கள் நிற்கும் ஸ்டேஷனின் பெயர், ஸ்ரீராம்பூர். எதிர்த் திசையில் வரும் ரயில்கள் நிற்கும் ஸ்டேஷனின் பெயர், பெலாபூர்.

இந்தியாவில் ரயிலில் டாய்லெட் வசதி முதல் வகுப்பில் 1891ம் வருடமும்;  அடுத்த வகுப்புகளில் 1907ம் ஆண்டிலும் அறிமுகமாயின.

மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் மட்டுமே இன்று நேரோ கேஜ், மீட்டர் கேஜ், பிராட் கேஜ் என மூன்று ரயில் வழிப் பாதைகளும் உள்ளன.

சுதந்திரத்திற்கு முன் 42 தனியார் ரயில் நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தன.

ரயில்வே ஸ்டேஷன்களில் ‘வீலர்ஸ் இண்டியா’ என்ற பெயரில் புத்தக நிலையம் இருப்பதை காணலாம். இதன் தலைமை இடம் அலகாபாத்!

எந்தெந்த ஸ்டேஷன்களில் என்னென்ன ஸ்பெஷல்?
விருதுநகர் - போளி
சங்கரன்கோவில் - சிக்கன் பிரியாணி
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
மணப்பாறை - முறுக்கு
வாணியம்பாடி - சமோசா
ராமேஸ்வரம் - இடியாப்பம்

இந்திய அளவில் ரயில்வே ஸ்டேஷன்களில் சாப்பிடக் கிடைக்கும் ஸ்பெஷல்கள்...
கௌஹாத்தி - அசாம் டீ
அஜ்மீர் - மேவா (பழக் கலவை)
வாஸ்கோடகாமா - மீன்கறி, கட்லெட்
கோரக்பூர் - ரபடி (இனிப்பு)
லோனாவாலா - கடலை மிட்டாய்
ஷோலாப்பூர் - கரும்பு ஜூஸ்
ஐதராபாத் - சிக்கன் பிரியாணி
கள்ளிக்கோட்டை - பருப்பு வடை
எர்ணாகுளம் - நேந்திரம் சிப்ஸ்
நாக்பூர் - ஆரஞ்சு பழம்
குண்டக்கல் - மாம்பழ அல்வா
ஆக்ரா - பூசணி கேக்
சுரேந்தர நகர் - ஒட்டகப் பால் டீ
பூரி - அல்வா.
அம்பாலா - ஆலு பரோட்டா.
மத்தூர் - மத்தூர் வடை.

- ராஜிராதா,
பெங்களூரு.