வியப்பூட்டும் தொங்கூசிப் பாறை!



சில குகைகளில் ஊசி ஊசியாக நீர் சொட்டுவது போல ஓர் அமைப்பு காணப்படுகிறதே... அது ஏன்?
- எஸ்.பாரதி, 9ம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர், தஞ்சாவூர்.

சுண்ணாம்புக்கல் குகைகளிலேயே பொதுவாக இதுபோன்ற விந்தைத் தோற்றம் காணப்படுகிறது. இக்குகைகளின் உள்ளே - சுண்ணாம்புக்கல் அறைகளில் நிரம்பிக் கிடக்கும் நீர், நிலத்தடி நீர்மட்டத்தை அடையும்போது அதிகக் கரை திறனோடு இருக்கும். அங்கே நீரின் அளவு குறையும்போது, குகையிலுள்ள நீரும் கசியும். காலியாக உள்ள குகைகளில்தான் மழைநீர் ஆர்வத்துடன் கசிந்து ஒழுகும். அங்குள்ள மணலில், வெளியில் உள்ளதை விட 100 மடங்கு அதிக கார்பன்-டை-ஆக்சைடு செறிந்து காணப்படுவதே இதற்குக் காரணம்.

நீரில் கரைந்திருக்கும் கார்பன்-டை-ஆக்சைடு, குகையிலுள்ள காற்றோடு வினை புரிந்து ஆவியாகும். அதனால் சுண்ணாம்புக்கல்லில் இருந்து உறிஞ்சிய கால்சியம் கார்பனேட்டை நீர் இழந்து விடும். அது குகையின் தரையிலோ, மேற்சுவரிலோ படிந்துவிடும். மேற்கூரையில் தாதுப்பொருள் படிதல் அதிகமானால், அங்கே தொங்கூசிப் பாறை உருவாகும்.

கடலோரக் குகைகளில் பாறையின் கரைசல் துளி சொட்டு சொட்டாக வீழ்வதால் மோட்டிலிருந்து தொங்கலாகக் கீழ்நோக்கி ஊசிவடிவில் இந்தப் பாறை வளரும். சுண்ணாம்பு மிச்சங்கள் தரையில் செட்டில் ஆவதற்கு முன்பே, நீர்வரத்து வேகமானால், தரையிலிருந்தும் கூட தொங்கூசிப் பாறைகள் வளரும்.

ஈரக்கசிவினால் இப்பாறைகள் பளபளக்கும். நீரிலுள்ள தூய்மையற்ற வேதிப்பொருட்கள் பாறைக்கு ஆரஞ்சு அல்லது பழுப்பு வண்ணம் தீட்டுகின்றன. குறிப்பாக, தண்ணீர் சுவரில் கசியும் இடங்களில் ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட திரை போன்ற பூச்சு ஏற்படும். சுண்ணாம்புக்கல் குகைகளுக்குள் ஒளிந்து கிடக்கும் அறிவியல் பற்றி ஆராய்வது உலகெங்கும் தொடர்ந்து நடைபெறுகிறது!

உணவு பதப்படுத்தும் முறை எப்போது தோன்றியது?
- ம.ராஜாராம், 10ம் வகுப்பு,
ஜெயகோபால் கரோடியா பள்ளி, சென்னை-94.

பழங்காலத்திலேயே இதற்கான ஆயத்தங்கள் தொடங்கி யிருக்கக்கூடும். உணவு மீதமான முதல் நாள் தொடங்கியே இது பற்றிய சிந்தனை வளர்ந்திருக்கும். இருப்பினும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களை குழப்பிக்கொண்டிருந்த ‘உணவு பதப்படுத்தும் முறை’ கண்டுபிடிப்பு முடிவுக்கு வந்தது 1800களில்தான்.

 அப்போதுதான் டின் உணவுகள் புழக்கத்துக்கு வந்தன. ஆனால், அவற்றைச் சாப்பிடும் வேளையில் திறந்து பார்ப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே கறி இருந்தாலும் சுவை இல்லை.

நாய்க்கு மட்டும்தான் அந்தச் சுவை பிடித்திருந்ததாம்! பிறகு மெல்ல மெல்ல இந்தப் பதப்   படுத்தும் முறையை மேம்படுத்தி உள்ளே இருக்கும் உணவைச் சாப்பிட வைத்தார்கள் பெயர் தெரியாத ஆராய்ச்சியாளர்கள். உணவை உறைய வைக்கும் முறையை அறிந்த பிறகுதான் இது முழுமையாக வெற்றி அடைந்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த முறையை அதிக அளவில் கையாண்டார்கள். இப்போது உணவு பதப்படுத்துதல் என்பது பல கோடி லாபம் ஈட்டும் தொழில்!