முத்தான 3 விஷயங்கள்



நேர்மை

ஆசிரியர் பத்து கேள்விகளைக் கொடுத்து, ‘‘இந்தக் கேள்விகளுக்கு யார் சரியான பதிலை எழுதி வருகிறார்களோ அவர்களுக்குப் பரிசு’’ என்று கூறிச் சென்றார். ஒரு சிறுவன் ஒன்பது கேள்விகளுக்கு பதில் எழுதி விட்டான். பத்தாவது கேள்வியின் விடை அவனுக்குத் தெரியவில்லை. அதைத் தன் நண்பனிடம் கேட்டு எழுதினான். மறுநாள் வகுப்பறையில் அந்தச் சிறுவனைத் தவிர வேறு எவருமே சரியான பதிலை எழுதவில்லை. ஆசிரியர் அவனை அழைத்து பரிசு தந்தார்.

சற்று யோசித்த பின் அவன், ‘‘ஐயா, பத்தாவது கேள்வியின் விடையை என் நண்பன்தான் கூறினான். என்னை மன்னிக்கவும். என்னால் இந்தப் பரிசை வாங்கிக் கொள்ள முடியாது’’ என்றான்.

அதைக் கேட்டு வியந்த ஆசிரியர் சொன்னார்: ‘‘இருக்கட்டும். ஆனாலும் இது உனக்கேதான். உன் நேர்மையைப் பாராட்டி, இந்தப் பரிசை உனக்கு அளிக்கிறேன்’’ என்றார்.
அந்தச் சிறுவன் யார் தெரியுமா? பின்னாளில் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரரான கோகலே!

ஐஸ்கட்டி

 அறிஞர் அண்ணா சொன்ன பிரபலமான குட்டிக் கதை இது:ஃபிரெடெரிக் தி கிரேட் என்ற மன்னன், தனது பிரபுக்களையும் அமைச்சர்களையும் பார்த்துக் கேட்டான். ‘‘ஏழைகளுக்கு எவ்வளவோ செய்கிறேன். ஆனால், ‘எதுவும் கிடைக்கவில்லை’ என்று குறை கூறுகிறார்களே, ஏன்?’’

வயது முதிர்ந்த அமைச்சர் ஒருவர், ‘‘நான் இதற்கு பதில் சொல்கிறேன்’’ என்று சொல்லி விட்டு, விருந்தில் தனக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு ஐஸ்கட்டியை எடுத்துப் பக்கத்தில் இருந்தவரிடம் கொடுத்து, ‘‘இதை அடுத்த பிரபுவிடம் கொடுத்து மன்னரிடம் சேருங்கள்’’ என்றார். அந்தப் பிரபு தன் பக்கத்தில் இருந்தவரிடம் கொடுத்தார். இப்படி 50, 60 கைகள் மாறி, கடைசியிலே மன்னர் கையில் போய்ச் சேரும்போது, இரண்டு சொட்டுத் தண்ணீர்தான் மிச்சம் இருந்தது.

‘‘ஒரு ஐஸ்கட்டியாகப் புறப்பட்டது, இத்தனை இடைத்தரகர்கள் வழியே வந்ததால், கடைசியில் உங்களுக்கு இரண்டு சொட்டுத் தண்ணீர்தான் கிடைத்தது. நீங்கள் ஏழைகளுக்கு செய்யும் உதவிகளும் இப்படித்தான் போகிறது!’’ என்று விளக்கினார் அமைச்சர்.  
 
முயற்சி


எடை குறைந்த பேட்டரியைக் கண்டுபிடிக்க முயன்ற தாமஸ் ஆல்வா எடிசனின் சுமார் 800 முயற்சிகள் தோல்வியுற்றன. ஒரு நிருபர் அவரிடம், ‘‘தங்களது 800 ஆராய்ச்சிகளும் வீண்தானே?’’ என்று கேட்டார்.எடிசன் கூறினார். ‘‘இல்லை. 800 வழிகளில் எனது பேட்டரியை உருவாக்க முடியாது என்று கண்டுபிடித்தேன்.

ஒருவேளை நான் அந்த பேட்டரியை உருவாக்க முடியாவிட்டாலும் எனக்குப் பிறகு வரும் அறிஞர்கள் இந்த எண்ணூறு விதங்களைத் தவிர்த்து வேறு புதிய வழிகளில் தங்கள் ஆராய்ச்சியைத் தொடரலாமே?’’ என்றார்.மேலும் சில நூறு முயற்சிகளுக்குப் பிறகு எடிசன் அந்த பேட்டரியைக் கண்டு பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 மு.சுலைஹா, கீழக்கரை.