அட்டை... ஆட்டம்...



அட்டைப் பூச்சிகள் கடிப்பதால் மனிதனுக்கு மட்டுமின்றி, பல்வேறு ஜீவராசிகளுக்கும் பாதிப்பு. சமயத்தில் அதிக ரத்தப் போக்கினால் இறப்பும் ஏற்படுகிறது. எனினும் ஓரிரு அட்டைகளின் கடிக்கு இத்தனை வல்லமை இல்லை.

ஆனால் பல அட்டைகள் ஒன்று கூடிக் கும்மாளம் போட்டுக் கடிக்கையில் எமலோகம் அனேகமாகக் கூப்பிடு தூரம்தான்! அட்டைகளால் கடிபட்டிருக்கும் மனிதனுக்குக் காலதாமதமின்றி சிகிச்சை அளிக்க வேண்டி யது அவசியம். பொதுவாக இந்த அட்டைகள் தமது முன்பகுதி வாயுறிஞ்சியை மனிதத் தோலோடு, எளிதில் பிரிக்க முடியாதபடி இறுக சீல் வைத்திருக்கும். பிடித்து இழுத்தால் மனிதனின் தோலோடுதான் நெகிழ்ந்து நீளும். பிடி விலகுவதில்லை.

இந்த அட்டைகளின் கிடுக்கிப்பிடியை ஓரளவிற்குத் தளர்த்தி பாதிக்கப்பட்ட மனிதனின் இம்சையைக் குறைத்து எளிதில் இவற்றை நீக்கிட சில வேதியியல் பொருள்களும் வெப்பமும் உதவுகின்றன. குறிப்பாக வினிகர், சோடா, ஆல்கஹால், சிட்ரிக் அமிலம் போன்றவற்றால் முதலில் நன்றாகக் கழுவி விட்டுப் பிறகு அட்டையை நீக்கினால் அவை எளிதில் உடலில் இருந்து விடு படும். இதேபோல் வெப்பம் மிகுந்த, கூடவே மனிதனால் தாங்கக் கூடிய அளவில் தீச்சுடரைக் காட்டினாலும் அட்டைகள் ஆகிருதி குறைந்து போகும்.

ஆயினும் இன்னும் ரத்தப் போக்கு இருந்து கொண்டே இருக்கும். இப்போக்கு 3 மணி நேரத்திலிருந்து 3 நாட்கள் வரை கூட நீடிக்கும். இப்படி ரத்தம் தொடர்ந்து வீண் ஆனால் அவனுக்குக் கட்டாயமுண்டு ஹார்ட் அட்டாக்! ஆகவே அட்டைகளை அகற்றிய பின், அவ்விடத்தை சால்ட் வாட்டர் அல்லது சோப்பினால் நன்றாகக் கழுவிவிட்டு இறுக்கமான பிரஷர் பேண்டேஜ் போட வேண்டும். ரத்தப் போக்கைக் குறைப்பதற்கு இது ஒன்றுதான் சிறந்த வழி. எனினும் ஒவ்வாமை, அரிப்பு, வீக்கம் மற்றும் வலி போன்றவற்றைத் தவிர்க்க முடியாது. அட்டைக் கடியிலிருந்து மீண்டவனுக்கு இதெல்லாம் வெறும் நெருஞ்சிமுள் குத்தல்!

சாராயப் பேராசை போல் ரத்தத்தின் மீது அலாதிப் பிரியம் கொண்ட இந்த அட்டைகள், பல்வேறு நீர் நிலைகளை ஒட்டிய ஈரப்பதமான பகுதிகளில்தான் அதிகம் விரும்பி வாழ்கின்றன. சில பெரிய ஜெயன்ட் இனங்கள் கடலிலும் நிலத்திலுமாக ஆம்பிபியன் வாழ்க்கை வாழ்கின்றன. எல்லாமே ஒட்டுண்ணிகள் என்றாலும், லோகத்தில் வாழும் பிற ஒட்டுண்ணிகளைப் போல் தம் வாழ்க்கையின் பருவங்களை ரத்த தானம் செய்யும் டோனார்களிடம் ஒரு போதும் ஒப்படைப்பதில்லை. ஆக, எல்லாமே நீரில்தான். செமி பேரசைட்!

அட்டைகளின் அந்தரங்க லூட்டிகளில் நிறைய அதிசயங்கள் இருக்கின்றன. இவை ஓர் இருபால் உயிரி என்பதே ஒரு ஆச்சரியம். அதாவது ஓவரி மற்றும் டெஸ்டிஸ் ஆகிய ரெண்டு சங்கதிகளும் இவற்றிற்கு உண்டு. உடலின் அடிப்பாகத்தில் பத்தாவது செக்மென்டில் ஆண் உறுப்பையும் பக்கத்துப் பதினோராவது செக்மென்டில் பெண் உறுப்பையும் பெற்றுள்ளன. இருந்தும், சேர்க்கைக்கு இன்னொரு அட்டை தேவை!

இவற்றிற்கு ஒரு சௌகரியம் என்னவெனில், வாளிப்பான பெண் பாலைத் தேடிக் கண்டுபிடித்து நூல் விட்டெல்லாம் பிரமாதப்படுத்த வேண்டிய சிரமம் இருப்பதில்லை. ஆண் பெண் பேதம் இல்லாததால் கண்ணில் படுகிற சகாவை எல்லாம் லவ் பண்ணலாம். எங்கேனும் ஒரு ஈர நிலத்தில் வாக்கிங் போய்க் கொண்டிருக்கையில், எதிரில் இணையொன்று தென்பட்டு விட்டால் அம்புட்டுதான்.

இருபால் உணர்வுகளும் கொப்பளித்து விடும். சரி, ஜமாய்ப்போமென்று இரண்டும் சட்டென முடிவுக்கு வந்துவிடும். முதலில் உடலின் முன்பகுதியில் பல்வேறு கண்டங்களில் இருக்கும் பத்துக் கண்களால் ஒன்றையொன்று சர்வே பண்ணும். பிரீடு கன்ஃபர்மேஷன். இப்படி சொற்ப நேரம் மினுமினுப்பான மேனி எழிலை ரசித்து விட்டு இரண்டும் நெருங்கி வரும். கந்தர்வ நெருக்கம்!

இவற்றின் புறத் தோலில் சுரந்து படர்ந்திருக்கும் வழவழ மியூக்கஸ் சுரப்பை தம் சக்கர் வாயினால் தொட்டுத் தொட்டு சொற்ப நேரத்திற்கு ஸ்பரிச சுகம் காணும். இத்தகைய ஆலிங்கனம் இரு அட்டைகளையும் ஏராளமாய் உசுப்பேற்றி விடும். அடுத்த சிருங்காரக் கட்டத்தில் இரண்டும் எதிர் எதிர்த் திசையில் திரும்பிக் கொண்டு தம் உடலின் அடிப் பகுதியை, ஒன்றின் பத்து மற்றும் பதினோராவது கண்டங்கள் மற்றதின் பதினொன்று மற்றும் பத்தாவது கண்டங்களுக்கு சரியாக மாற்றிப் பொருந்துமாறு ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளும், அட்டைபோல் (!)

இப்படி ஒட்டிக் கொண்ட பிறகு, இரண்டு அட்டைகளுமே இல்லாத மீசையை முறுக்கிக் கொண்டு, தங்களை ஒரு ஆணாகவே பாவித்துக் கொண்டு மூர்க்கமாய் புணர்ச்சியில் ஈடுபடும். முடிவில் உயிரணுக்கள் அடங்கிய ஸ்பெர்மட்டோஃபோர் என்னும் பொட்டலங்களை மாறி மாறி பரிவர்த்தனை செய்து கொள்கின்றன. கிவ் அண்ட் டேக் பாலிசி!

அட்டைகளின் உடலில் உள்ள கண்டங்களில், சிலதுகள் ஒருங்கிணைந்து கிளைட்டெல்லம் என்னும் ஒரு தொகுப்பாக மாறியிருக்கும். இதற்கு அருகில் செலுத்தப்படும் உயிரணுப் பொட்டலங்கள் குழப்பம் இல்லாமல் ஓவரிக்கு வந்து விடுகின்றன.

 தாம்பத்தியம் சுகித்த அட்டைகள் இரண்டும் தம் ஓவரியில் உருவான கருக்களை, கிளைட்டெல்லத்தின் உதவியால் உருவாகும் ஒரு ஆல்புமின் கவசத்தில் இணைத்து ஒரு ஓரமாய்க் கழற்றி வைத்து விடுகின்றன. இந்திர விளையாட்டின் இறுதிப் பணி!இதன்பிறகு சில நாட்களில் இந்தக் கவசத்துக் கருக்கள், சுமார் இருபது பேபி அட்டைகளாகப் பிறந்து, அவை தம் முன்னோர் வழியில் ரத்தத்திற்கு ஆளாய்த் திரிவது நமக்கு வேண்டாத சங்கதி!

(தொடரும்)

டாக்டர் ஆர்.கோவிந்தராஜ்