தெரிந்த இடங்கள்...தெரியாத தகவல்கள்!



பழைய டெல்லி நகரம்

புதிய பகுதி

சுமார் 400 வருடங்களுக்கு முன்பு மொகலாய மன்னர் ஷாஜகானால் உருவாக்கப்பட்டதுதான் பழைய டெல்லி நகரம்.இந்த நகரம் உருவான வரலாறே  விசித்திரமானது. மங்கோலிய பரம்பரையைச் சேர்ந்த பாபர், அப்போது டெல்லியை ஆண்ட மன்னனைத் தோற்கடித்த பின்னர்தான் டெல்லி மன்னர் என்னும் மகுடத்தைத் தரித்துக் கொண்டார். இதற்குப் பின்தான் இந்தியாவின் தலைநகரில் இருந்து மொகலாய மன்னர்களின் ஆட்சி ஆரம்பமாகியது.

ஷாஜகான் பின்னால் அரியணை ஏறியபோது 1638ம் ஆண்டு பழைய டெல்லி நகரம் உருவானது. இந்தக் காலத்தில் மொகலாய சாம்ராஜ்ஜியத்தில் தொழில் வளர்ச்சி, சீரான நிர்வாகத்தின் காரணமாக அரசாட்சி மிகவும் சிறப்பாக இருந்தது. வருவாயும் அதிகரித்தது. இதன் காரணமாகத்தான் இன்னொரு தலைநகரை ஏன் உருவாக்கக்கூடாது என்கிற எண்ணம் மன்னன் ஷாஜகான் மனதில் எழுந்தது.

யமுனை நதிக்கரையில், குளிர்ந்த மரங்கள் அடங்கிய பரந்த சோலைவனத்தில் மெதுவாக நகரம் ஒன்று கொஞ்சம் கொஞ்சமாக உருவானது. கால்வாய்கள், மசூதிகள், கடைவீதிகள், பெரிய பெரிய கட்டிடங்கள் உருவான பிறகுதான், அந்த இடத்தில் புகழ்பெற்ற ‘செங்கோட்டை’ பிரமாண்டமாக உருவானது. இவையெல்லாம் உருவாக பத்து வருடங்கள் ஆயின. முக்கியமான நாட்களில் மொகலாய மன்னர்களின் ஊர்வலம் இந்த நகரின் தெருக்களில்தான் மிகவும் பிரமாண்டமாக நடக்கும்.

முதலில் இந்த நகரத்திற்கு ‘ஷாஜகானாபாத்’ என்று பெயர் சூட்டப்பட்டாலும், 1920ம் ஆண்டு பிரிட்டிஷார் புதுடெல்லி நகரை உருவாக்கியபோது, இதற்குப் பழைய டெல்லி என்று பெயரைச் சூட்டிவிட்டனர்.

பழைய டெல்லியின் இதயம் என்று சொல்லக்கூடிய  ‘சாந்தினி சௌக்’, டெல்லியின் செங்கோட்டைக்கு பழைய டெல்லியில் இருந்து செல்லும் வழி. பழைய டெல்லி எப்போதுமே ஒரு சுறுசுறுப்பான வியாபாரத்தலமாகவே இருந்துவருகிறது.

இந்த நகரில் அபரிமிதமாக போக்குவரத்துக்கு உதவுவது சைக்கிள் ரிக்‌ஷாதான். டாக்ஸிகள், பஸ்கள், மற்றும் கார்கள் எப்போதுமே பழைய டெல்லி நகர பாதைகளில் ஓடிக்கொண்டே இருக்கும். பழைய டெல்லியின் கடைகளில் இதுதான் வியாபாரம் என்று குறிப்பிட்டுச்சொல்ல முடியாது.

துணிக்கடைகள் ஒருபுறம் வரிசையாக இருக்கும். தங்க நகைகள் விற்கும் நகைக்கடைகள், பழைய பொருட்களை விற்கும் கடைகள், புத்தகக் கடைகள், காலணிக் கடைகள், புதுமையான காஷ்மீர் போர்வைகள், அழகாக அடுக்கி வைக்கப்பட்ட கடைகள், ஆயுர்வேத மருந்துக் கடைகள், நவீன மருந்துக்கடைகள், வாசனைத் திரவியங்களை விற்கும் கடைகள் என்று விலாவாரியாகக் கடைகள் அங்கே உண்டு.

இதுதான் இல்லை என்று சொல்லவே இடமில்லை. நீங்கள் கேட்கும் பொருள் ஒரு கடையில் இல்லை என்றால், அந்தக் கடைக்காரரே அவை எங்கே விற்கும் என்று சரியான இடத்தைக் காண்பிக்கும் நல்ல பழக்கம் அங்குள்ள வியாபாரிகளுக்கு உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாவிதமான உணவுகளும் அங்கே கிடைக்கும். 

சில வீடுகளின் முன் அமைப்பு மிகவும் சாதாரணமாகத் தெரிந்தாலும், உள்ளே சென்றால் மிகப்பெரிய பங்களாவுக்கான சகல வசதிகளும் அங்கே உண்டு. இதை இந்தியில் ‘ஹவேலி’ என்பார்கள். உள்பக்கத்தைப் பார்த்தால் அங்கே சிறிய நீரூற்றுடன் கூடிய அழகான சிறிய குளம், அதிலே தாமரை மலர்கள் - நின்று பார்க்காமல் மேலே போக மனம் வராது.

எல்லா வீடுகளிலும் இதைப்போன்ற வசதிகள் இருக்கும் என்று சொல்ல முடியாது. வசதி படைத்தவர்கள் தங்கள் இருப்பிடத்தை அழகுபடுத்த விரும்புவது வாடிக்கைதானே? இதில் ஒரு காலத்தில் மிகவும் புகழோடு விளங்கிய ‘கலீப்.சி.ஹவேலி’ என்னும் மாளிகை. இதில்தான் 19ம் நூற்றாண்டு மொகலாய மன்னரின் கவிஞர் மீர்ஜா காலிப் வாழ்ந்தார். இன்னொரு ஹவேலி ‘சுன்னாமால்’ என்ற பெயர் கொண்டது.

இங்கே அப்போதைய ஜவுளி வியாபாரிகளின் பல குடும்பங்கள் வசித்துவந்தன. கஜான்சி ஹவேலி என்று ஒன்று. இந்த ஹவேலியில்தான் மொகலாய மன்னர் ஷாஜகானின் நிதி நிர்வாகப் பொறுப்பைக் கவனித்த கணக்காளர்கள் வசித்துவந்தனர்.இந்தப் பகுதிக்கும், செங்கோட்டைக்கும் நடுவே ஒரு சுரங்கப்பாதை உண்டு. அதன் மூலம்தான் பணம் இரண்டு பக்கமும் பரிமாற்றம் நடக்கும். வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்பது மட்டுமல்ல - திருட்டு போய்விடக் கூடாது அல்லவா?

புகழ்பெற்ற பகீரத் அரண்மனை 1800ம் ஆண்டு பேகம் சம்ரு என்னும் ஏழை நடனக்காரி கட்டியது. அவள் இவ்வளவு சௌகரியமாக இருந்ததற்கு முக்கியக் காரணம், அவள் மணந்து கொண்டது ஒரு பிரிட்டிஷ் படைத் தளபதியை.மன்னர் ஷா ஆலம் என்பவரைக் காப்பாற்ற தன் படைகளோடு வந்தவர்தான் இந்தத் தளபதி. இதன் காரணமாக மிகுந்த வசதியுடன் வாழ்ந்த அந்த நடனக்காரி 89 வயது வரை அங்கே இருந்தாள்.

அவள் இறந்தவுடன் அந்த பெரிய அரண்மனை முற்றிலுமாக இடிக்கப்பட்டு, வியாபார ஸ்தலமாக மாறிவிட்டது.  மன்னர் ஷாஜகானால் செங்கோட்டைக்குத் தென்மேற்குப் பகுதியில் ரூ.10 லட்சம் செலவில் பெரிய மசூதி கட்டப்பட்டது. தற்போது, அந்த ஜும்மா மசூதி முஸ்லிம் வம்சத்தினரின் பிரதான தொழுகை இடமாக இருக்கிறது. ஷாஜகான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் யானைமீது ஏறி, இந்த மசூதிக்குத் தொழுகைக்காகப் போவது வழக்கம்.

அரண்மனையில் இருந்து டெல்லி கேட் வழியாக மசூதியை அடைந்தாலும், திரும்பி வரும்போது வேறு வழியில் வந்து அரண்மனையை அடைவது வழக்கம். இந்த விதியை அவர் மிகவும் பவித்திரமாகக் கடைப்பிடித்தார் என்று கூறப்படுகிறது.ஜும்மா மசூதி தொழுகைக்கான இடம் மட்டுமல்ல - அதை முஸ்லிம்கள் அதற்கும் மேலாக பவித்திரமாகக் கருதி நேசித்தார்கள்.

உயரமான படிக்கட்டுகள் வழியாக மேலே மசூதிக்குப் போகும்போது, இரு பக்கமும் உள்ள பெரிய நீர்நிலைகளில் மசூதியின் பிரமாண்ட நிழல் பிரதிபலிக்கும். உள்ளே நுழையும்போது ஒரு புனிதத்தின் எல்லைக்குள் நுழைந்திருக்கிறீர்கள் என்பதை அங்கே நிலவும் அமைதியே உணர்த்தும். டெல்லியில் ஜும்மா மசூதி, வரலாற்றின் மிக அழகிய ஞாபகச் சின்னம்.

(பார்க்கலாம்...)

ரா.வேங்கடசாமி