நகருது 30 கிலோமீட்டர் தட்டு!



நேபாளத்திலும் இந்தியாவின் சில பகுதிகளிலும் தொடர்ந்து
நிலநடுக்கம்... என்ன காரணம்?
- ஆர்.ரமா, 9ம் வகுப்பு, நைட்டிங்கேல் பள்ளி,
சென்னை-33.

இப்போதைய நேபாள நிலநடுக்கம், அன்றைய குஜராத் நிலநடுக்கம், நாகப்பட்டினம் சுனாமி... இப்படி பல இயற்கைப் பேரிடர்களுக்குக் காரணம் பாறைத்தட்டுகளின் அடாவடிதான்.பாறைத்தட்டுகளின் வடிவம்தான் பல பிரச்னைகளுக்கும் காரணம். அவை கன்னாபின்னாவென ஒழுங்கற்று இருக்கின்றன.

பூமியின் பருமனோடு ஒப்பிடும்போது, பாறைத் தட்டுகள் முட்டை ஓடு போல மெல்லியவைதான். ஆனால், நிலப்பரப்பில் இதன் தடிமன் அதிகம். பூமியின் மேற்பரப்பிலிருந்து இந்த அடுக்கின் ஆழம் ஏறக்குறைய 30 கிலோமீட்டர். அவ்வளவு தடிமன் கொண்ட அடுக்கு நகரும்போது என்ன நடக்கும்? மனதைத் திடப்படுத்திக்கொண்டு யோசித்துப் பாருங்கள். பாறைத்தட்டுகளின் சைஸைப் பொறுத்து, ஒவ்வொன்றும் நகரும் வேகத்தில் வித்தியாசம் உண்டு.

பூகம்பத்தின் வீரியம் எதைப் பொறுத்தது? பாறைத்தட்டுகள் நகரும்போது 3 சம்பவங்கள் நடக்கின்றன. மிகப்பெரிய தட்டுகள் ஒன்றுடன் ஒன்று நேரடியாக மோதுவது முதல் சம்பவம். ஓவர் லோடு ஏற்றிக்கொண்டு விரையும் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதும்போது என்ன நடக்கும்? கண்ணாடிகள் நொறுங்கும்... லாரியின் முன்பகுதி நசுங்கி டப்பாவாகி விடும். மற்ற பாகங்களும் நசுக்கப்படும்.

இரண்டு தட்டுகள் மோதும்போதும், இதே போலத்தான் பூமிப்பரப்பில் சேதம் ஏற்படும்.அடுத்து... பெரிய தட்டும் சிறிய தட்டும் மோதும்போது ஒரு தட்டின் அடியில் இன்னொரு தட்டு சறுக்கி உள்ளே போய்விடும். காரும் லாரியும் மோதும்போது என்ன நடக்கும்? வேகத்துக்கு தகுந்தாற்போல கார் லாரிக்கு அடியிலோ, லாரியின் மேலோ கிடக்கும் இல்லையா? அதுமாதிரிதான்.

கடைசி கட்டம் உராய்தல். ஒரே திசையில் நகர்ந்து கொண்டிருக்கும் இரண்டு தட்டுகள் பக்கவாட்டில் உராயும். ஒரு லாரியை இன்னொரு லாரி ஓவர்டேக் செய்யும்போது எதிர்பாராவிதமாக உரச நேரிடும் அல்லவா? அப்போது எடை குறைந்த வாகனத்துக்குத்தான் பலத்த சேதம் ஏற்படும். பூமித்தட்டு விஷயத்திலும் அப்படித்தான். ரூபி எனும் சிவப்புக்கல் எங்கிருந்து கிடைக்கிறது?- க.நேத்ரா, 8ம் வகுப்பு, மில்லினியம் பள்ளி, சென்னை-122.

‘கரண்டம்’ எனும் தாதுவிலிருந்து பிறப்பதுதான் ரூபி. இதற்கு அட்டகாசமான சிவப்பு நிறத்தை அளிப்பது குரோமியம். அலுமினிய வளம் நிறைந்த இடங்களின் அடிப்பகுதியில் இது கிடைக்கிறது. பர்மா, கென்யா, ஜிம்பாப்வே, டான்சானியா நாடுகளில் சிவப்புக்கல் சுரங்கங்கள் உள்ளன.