துரோகத்தின் நிழல்!



மர்மங்களின் மறுபக்கம் 28

1953 ஆம் ஆண்டு மார்ச் 6, மாலை 4 மணியளவில் ஸ்டாலினின் உடல் தொழிற்சங்கத்தின் மெகா ஹாலில் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக  வைக்கப்பட்டது.  மாஸ்கோ நகரின் மக்களும், வெளியூரிலிருந்து தங்கள் தலைவனின் முகத்தை  ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்று பெரும் திரளாக கூடிவிட, மக்களை அடித்து விரட்ட காவலர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.  மார்ச் 9ஆம் தேதி தொழிற்சங்கங்களின் வேலைகளும், அரசு வேலைகளும் நிறுத்தப்பட்டன.

20ஆம் நூற்றாண்டின் மகத்தான தலைவரான  ஸ்டாலினின் உடல் நல்லடக்கம் செய்யப்பட விருந்தது அன்றுதான். பல நாட்டுத் தூதுவர்களும் அதிகாரிகளும் இதற்காக செஞ்சதுக்கத்தில்  வந்து  குழுமியிருந்தனர். ஸ்டாலினின் சவப்பெட்டியை  ராணுவ அதிகாரிகள் சுமந்து சென்றனர். ஸ்டாலின் உடல்,  ரஷ்யாவை உருவாக்கிய லெனினின் கல்லறை அருகிலேயே புதைக்கப்பட்டது. 

சர்ச்சைகள் பூதமாய் கிளம்பியது அதற்குப் பிறகுதான். தனது மாஸ்கோ மாளிகையில்தான் ஸ்டாலின் நோய்வாய்ப்பட்டு சிகிச்சையிலிருந்தார் என்று முதல் அறிக்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் அவர் எப்படி 70 கி.மீ கடந்து குஞ்சிவோ பகுதிக்கு வந்தார்? முதலில் வந்த அரசு செய்தி அவரது நோயின் பலமான தாக்குதல் திங்கட்கிழமை காலையில் ஏற்பட்டது என்று வெளியானது.

அதற்கு முன்பே குருஷேவ் உள்ளிட்ட இதர தோழர்களும், அவர் இறந்தது ஞாயிறு மாலை என்று அறிவித்து விட்டனர். ஸ்டாலினைப் பார்க்க அவரின் மாளிகைக்குச் சென்றபோது எவ்விதமான மருத்துவ உதவிக்கும்  ஏற்பாடு  செய்யாமல், தங்கள் இருப்பிடத்திற்குத்  திரும்பி விட்டார்கள் என்றும் குருஷேவ் கூறினார். பிறகு மலென்கோவை அழைத்து ஸ்டாலின் மிகவும் மோசமான நிலையில் உள்ளார் என்று சொன்னதாகவும் அதுவரை ஒரே இடத்தில் இருந்ததாகவும் குருஷேவ் கூறி சர்ச்சையின் திரி கிள்ளினார்.  

இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு  இந்திய  தூதர்  ஒருவரிடம் பேசிக்  கொண்டிருந்த  ஸ்டாலின், ‘விவசாயிகளுக்கு தங்கள் வயலுக்குள் நுழையும்  ஓநாய்களை எப்படி துரத்துவது என்று தெரியும்’ என்று ஜாடையாக ஏதோ சொல்லியிருக்கிறார். உளவுத்துறை தலைவர் பெரியா மீது தீவிர கோபத்தில் ஏதோ கூறினார் என்பதுதான் அதிகாரிகள் வட்டார  கிசுகிசு. அதிபர் ஸ்டாலினுக்குப் பிறகு ரஷ்யாவை  ஏகபோகமாக  ஆளவேண்டும் என்பது பெரியாவின் கனவு. ஆனால் அது நிறைவேறவில்லை.  

ஏனெனில் மலென்கோவ் பதவி ஏற்றவுடன் பெரியாவைக்  கைது  செய்து    துரோகி   என்று  கூறி தூக்கிலிட்டு  விட்டார்.  இளைஞர்களை  சித்திரவதை செய்தது, அழகிய இளம்பெண்களைக் கடத்திக் கற்பழித்தது, குடிபோதையில் மக்களைத்  துன்புறுத்தியது  போன்றவை பெரியாவின் மறுபக்கம். இதற்குப் பின் ரஷ்யாவில் பல மாறுதல்கள்  தொடர்ந்தன. செப்டம்பர் மாதம், கட்சித் தலைமையை குருஷேவ் ஏற்றார்.  

அடுத்து 1955ஆம்  ஆண்டு  ரஷ்யாவின் அரசியலில்  நீயா? நானா?  போட்டியில் வெற்றி பெற்ற  புல்கானின் பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றவுடன், ஸ்டாலினின் முதன்மை உதவியாளரை டுபாக்கூர் துறைக்கு தூக்கியடித்ததோடு, ஸ்டாலினின் அரசியலமைப்பு  ‘சோவியத் அரசியல் அமைப்பு’ என்று பெயர் மாற்றப்பட்டு,  ‘ஸ்டாலினிஸ்ட்’  என்ற பெயர்  ரஷ்யாவின் அரசியல்  வரலாற்றிலிருந்து க்ளீனாக  அகற்றப்பட்டது. 

‘பிராவ்டா’ என்பது ரஷ்ய அரசியலின் முக்கிய தினசரி. அது ஸ்டாலின்  மரணத்திற்கும், டாக்டரின்  திட்டமிட்ட  சிகிச்சைக்கும் துளிகூட தொடர்பில்லை என பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டது. முன்னாள் ரஷ்யா அதிபர் குருஷேவ் ஆம் ஆண்டு சோவியத்தின்  புதிய  அதிபரான குருஷேவ் கட்சி காங்கிரஸின் 20ஆவது கூட்டத்தில் பெரும் உரையாற்றினார்.

ஸ்டாலின் அரசியலில் செய்த தவறுகள் பற்றி, கொடுமைகள் பற்றி, அயல்நாடுகளுடன் கொண்டிருந்த விரோதங்கள் பற்றி சொல்லி, இனி ரஷ்ய மக்கள் நிம்மதியாக வாழ  தம் கட்சி அனைத்து  உதவிகளையும் செய்யும் என்று பேசி முடித்தார். உலகம்  முழுக்க   இத்தகைய செய்திகள் தீயாய் 
பரவின. அதிபர் குருஷேவ் ஸ்டாலினின் நிர்வாகத்தைப் பற்றி பேசிய தினத்திலேயே  நாடெங்கு மிருந்த ஸ்டாலினின்  சிலைகள் அடித்து நொறுக்கி வீழத்தப் பட்டன.  1964 ஆம் ஆண்டு அதிபர் குருஷேவும் தன் செல்வாக்கு  இழந்து பதவியைப் பறிகொடுத்தார்.

(வெளிச்சம் பாய்ச்சுவோம்)

ரா.வேங்கடசாமி