உலகத்தை சுற்றிவளைக்கும் சூயிங்கம்



மெக்சிகோவில் ஒவ்வொரு இரவும் டஜன்  கணக்கிலான லாரிகளில், லாரிக்கு தலா 15 நபர்கள் தொற்றிக்கொள்ள பிரான்சிஸ்கோ மடேரோ அவென்யூக்கு செல்கின்றனர். 9 ஆயிரம் ச.அடியில் உள்ள வீதியில் 8 மணி நேரம்  மூன்று நாட்களாக வேலை  செய்து 11 ஆயிரம் சூயிங்கங்களை நீக்கியிருக்கின்றனர் என்பது  அதிர வைக்கும்  செய்தி.

நகரமெங்கும் தின்று  துப்பப்படும் சூயிங்கம்மால் ஈகோலி, சால்மோனெல்லா உள்ளிட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிருமிகள் பரவும் வாய்ப்பு அதிகரிப்பதால், இதை தடுப் பதற்கான விழிப்புணர்வுத் திட்டம் பல்வேறு நாடுகளில் உருவாகி வருகிறது. மெக்சிகோவுக்கு தினசரி வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1 மில்லியன்.

இது அமெரிக்காவின் டைம் சதுக்கத்தில் கூடும் மக்களின் எண்ணிக்கைக்கு சமம். மெக்சிகோவில் சூயிங்கம் விற்கும்  ஆல்பெர்ட்டோவின் ஒரு கடையில் மட்டும் சூயிங்கம் ஒருநாளுக்கு 60 பாக்கெட்டுகள் விற்கின்றன. 2002 ஆம் ஆண்டு டோனி பிளேர், ஜார்ஜ் புஷ், ஜெஃப்ரி ஆர்ச்சர் ஆகியோர் இது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தும், 2014 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் சூயிங்கம் துப்பியவர்களுக்கு ஃபைன் விதித்தும் நிலைமை சீராகவில்லை.

2015  ஆம் ஆண்டு சியாட்டிலின் 20 வயதாகும் சூயிங்கம் சுவரில் 130 மணிநேரம் போராடிய துப்புரவுப் பணியாளர்கள் 1,066 கிலோ சூயிங்கம்களை அகற்றினர். ஆனால் இரண்டே நாட்களில் சுவர், மூல பவுத்திர நோட்டீஸ் போல சூயிங்கம்களால் நீக்கமற நிறைந்துவிட்டது. சிங்கப்பூரில் 1992 ஆம் ஆண்டிலிருந்தே சூயிங்கம் மீதான தடை உண்டு. அதையும் மீறினால் ஃபைன் 500 டாலர்கள்.2004 இல் மருத்துவ சிகிச்சைக்கான சூயிங்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சூயிங்கம் வரலாறு  ஃபின்லாந்தில் உலகின் மிகத்தொன்மையான சூயிங்கம் என 6 ஆயிரம் ஆண்டு பழமையான பிர்ச் பட்டையை கண்டு
பிடித்திருக்கிறார்கள். இதில் மனிதர்களின் பற்கள் தடம் பதிந்துள்ளது. கிரீஸில் மஸ்டிக் மரத்திலிருந்து எடுக்கப்பட்ட ரெசினை சூயிங்கம்மாக மெல்வது அன்று தாடைகளுக்கான பயிற்சி.

இவர்களை வழிமொழிந்த மயன், அஸ்டெக் இனக்குழுவினர், சபோடில்லா மரத்திலிருந்து எடுத்த பசையை மென்று வந்தனர். Tzicli எனப்படும் பசையை திருமணமான பெண் அல்லது விதவை  ஒருவர் பொது இடத்தில் மென்றால் அவர் விபச்சாரி என்றும், ஆணாக இருந்தால் ஓரினச்சேர்க்கையாளர் எனவும்  முடிவு கட்டுவது  அன்றைய  வழக்கம் என்கிறார் Unwrapping the History of Chewing Gum என்ற நூலின் எழுத்தாளரான லூயிஸ் வெர்னர். 

மெக்சிகோவில் சிக்கில்  என்னும் பசையை வேகவைத்து பக்குவப்படுத்தி மென்று வந்தனர். பின்னாளில்  இதனை 19 ஆம் நூற்றாண்டில்  அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தியவர்  மெக்சிகன் ஜெனரலான சான்டா அன்னா. டயர்களுக்கு பயன்படும் ரப்பரும் சூயிங்கம்மில் முதலில் சேர்க்கப்பட்டு, பின் அதற்கு பதிலாக அதில் வெந்நீர் சேர்க்கப்பட்டு உருண்டை வடிவில் விற்பனை செய்யப்பட்டது.

சூயிங்கத்தை அக்காலத்தில் பெண்கள் மெல்லுவது புரட்சி செயல். 1936 இல் ஒரு கடைக்காரர் அவரிருந்த 25  குடியிருப்புகளைக் கொண்ட தெருவில் மட்டும் தினசரி 84 ஆயிரம் சூயிங்கம் துண்டுகளை கணக்கிட்டிருக் கிறார். இரண்டாம் உலகப்போரில் ஆர்மியிடமிருந்து சூயிங்கம் உலகம்  முழுக்க  பரவத்தொடங்கியது. பாலிவினைல் அசிட்டேட், பிளாஸ்டிக் ஆகியவை சூயிங்கம்மில் சேர்க்கப்பட்டதால், உலர்ந்தபின் அதனை ஓரிடத்திலிருந்து அகற்றுவது கடினமானதும், சூழலுக்கு எதிரானதாகவும் மாறியது.

டாப் 5 சூயிங்கம்கள்

1.Trident,
2.Orbit,
3.Stride,
4.Extra,
5.Juicy Fruit

சந்தை மதிப்பு - 25.1 பில்லியன்
வளர்ச்சி கணிப்பு  -34.50 பில்லியன்
(2022) முன்னணி நிறுவனங்கள் Wrigley’s, Mondelez, Perfetti, Lotte, Cloetta
(www.mordorintelligence.com தகவல்படி)