கிவி நாட்டின் பிரதமர்!



கடந்த அக்.26 இல் நியூசிலாந்தைச் சேர்ந்த ஜெசிந்தா ஆர்டெர்ன், 150 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இளைய மூன்றாவது பெண் பிரதமர். வலுவான, குவிந்த கவனத்துடன் இயங்கும் அரசு என்பது இவரின் வாக்குறுதி. தன் மனநலப்பிரச்னை, பெண்ணுரிமை, தனிப்பட்ட போராட்டங்கள், சமபால் ஈர்ப்பாளர்கள் குறித்தும் மிக வெளிப்படையாகப் பேசும் முக்கிய தலைவர்களில் ஜெசிந்தாவும் ஒருவர். “ஒருவர் வாழ்க்கையில் நல்ல நாட்களும், கெட்ட நாட்களும்  உண்டு.

எனவே எதைப்பற்றியும் கவலைப் படாமல் நமது வேலையை சரியாகச் செய்வோம் தோழர்களே” எனும் ஜெசிந்தா, தேர்தலுக்கு சில வாரங்கள் இருக்கும்போதுதான் பிரதமர் பதவிக்கு தன் நியூசிலாந்து தொழிலாளர் கட்சியினரால் முன்மொழியப்பட்டிருக்கிறார். ஜெசிந்தா, இங்கிலாந்து முன்னாள் பிரதமரான டோனி பிளேரிடம் கொள்கை ஆலோசகராகப் பணிபுரிந்துள்ளார். பின் 2008 இல் எம்.பி ஆன ஜெசிந்தா, கடந்த ஆகஸ்டில் தொழிலாளர் கட்சிக்கு தலைவராகி மக்களின் மனங்களை வென்று நாட்டின் நாற்பதாவது  பிரதமராகியுள்ளார்.