டேவிட் ஹாஸ்சைல்ட்



தலைவன் ஒருவன் - 17

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த டேவிட் ஹாஸ்சைல்ட், மாநில சூழல் ஆற்றல் கமிஷனராகவும் (2013) வோட் சோலார் எனும் நிறுவனத்தின் துணை நிறுவனராகவும் செயல்பட்டு வருகிறார். க்ளீன் ஏர் ஹீரோ விருது வென்ற டேவிட், ஸ்வார்ட்த்மோர் கல்லூரியில் இளங்கலையும், பொதுமக்கள்  உறவில்  முதுகலையும் பெற்றவர். “பெரும்பாலான கொள்கைகள் மாநில அளவில் உருவானாலும் அவை நாடாளுமன்றத்தில் பல்வேறு மாற்றங்களை சந்தித்தால் உறுதியாக அது மோசமான பிளான்” என தீர்க்கமாக பேசுகிறார் டேவிட்.

இன்று கலிஃபோர்னியாவில் சோலார் தொடர்பாக ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி சாதித்திருக்கிறார் இவர். அமெரிக்காவின் 25 மாநிலங்களில் 60 ஆயிரம் உறுப்பினர்களை வோட் சோலார் பெற்றிருக்கிறது. கலிஃபோர்னியாவில் தயாரிக்கும் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மூலம் 60 ஆயிரம் வீடுகளுக்கு ஒளியேற்றுகிறார் டேவிட். 2001 ஆம் ஆண்டு சான்ஃபிரான்சிஸ்கோ மேயரான வில்லி ப்ரௌன், அரசு நிறுவன கட்டிடங்களில் சோலார் பேனல்களை அமைக்க நூறு மில்லியன் டாலர்களை ஒதுக்கி திட்டத்தில் டேவிட் பணியாற்றியுள்ளார்.

மேலும் கலிஃபோர்னியாவில் கட்டப்படும் வீடு களில் சோலார் பேனல்களை வைத்து கட்டினால் அரசின் சலுகைகள் உண்டு என்ற டேவிட்டின் அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு. கரிம எரிபொருட்களைப் புறக்கணித்து தூய ஆற்றலை அதிகரிக்க 2020 ஆம் ஆண்டுவரை இலக்கு நிர்ணயித்திருக்கிறார் டேவிட். “நான் இத்திட்டத்தை நம்பிக்கையுடன் ஆதரிக்கிறேன். பருவச்சூழல் மாறுபாட்டை காக்க எவ்வளவு வேகமாகச் செயல்பட முடிந்தாலும் நல்லதுதான்” என புன்னகைக்கிறார் டேவிட். சாண்டியாகோ (2035), ஹவாய் (2045) உள்ளிட்ட மாநிலங்கள் 100%  தூய ஆற்றலுக்கு மாற செயல்பட்டு வருகின்றன. “சோலார் குறித்த ஆய்வுக்காக என் லைஃபின் பெரும்பகுதியை செலவு செய்துள்ளேன்.

இதைவிட சிறந்த ஐடியாக்கள் பலரிடம் இருந்தாலும் அவை மார்க்கெட்டில் செல்லுபடியாகவில்லை” என்கிறார் டேவிட். முதலில் 5% மாக இருந்த சோலார்பேனல் விற்பனையின் அளவு இன்று 20%. இது  ஓராண்டில்  நிகழவில்லை. மாற்று ஆற்றலின் மீது மக்களின் நம்பிக்கை பெருக, ஒவ்வொரு ஆண்டும் 2% என அதிகரித்து வந்ததன் விளைவு இது. “நம் திறனைத்  தெரிந்துகொண்டு முயன்றால் புதுப்பிக்கும் ஆற்றல் ஆதாரங்களை விரைவில் அடையாளம் காண முடியும்” என உற்சாகமாகப் பேசுகிறார் டேவிட் ஹாஸ்சைல்ட்.

- பகதூர் ராம்ஸி