மேட் இன் இந்தியா!



இன்று மேட் இன் சீனா பொருட்கள் மூலைமுடுக்கெங்கும் கோலோச்சினாலும்  மேட் இன் இந்தியா பொருட்களுக்கான மவுசு தனி. Pukka Indian என்ற நூலில் ஸ்பெஷலாக  இந்தியப் பொருட்களை அடையாளப் படுத்தியுள்ளார்  ஜான்வி லகோடா நந்தன்.

அம்பாசிடர் 1957 ஆம் ஆண்டு ரிலீசான  இந்துஸ்தான்  மோட்டார்சின் தயாரிப்பு. வெளிநாட்டுக் கார்களுக்கு தடை இருந்த 1983 ஆம் ஆண்டுவரை  இந்திய  சாலைகளை ஆண்ட ‘நம்ம ஊரு கார்’ அம்பாசிடர்தான். கொல்கத்தாவில்  இன்றும் 33 ஆயிரம் அம்பாசிடர்கள் உழைத்து  வருகின்றன.  தொண்ணூறுகளின் தாராள மயமாக்கத்திற்குப்  பிறகு  விற்பனை குறைந்த அம்பாசிடர், 2014 ஆம் ஆண்டு மே மாதம்  கார்  தயாரிப்பை நிறுத்திக்கொண்டது.
 
மைசூர் சாண்டல் சோப்பு

1916 ஆம் ஆண்டு உருவான கர்நாடகா சோப்ஸ் நிறுவனத்தின் பெருமைமிக்க  No.1 சோப்.
மன்னர் நால்வாடி கிருஷ்ணராஜா உடையாரின் ஐடியா . 1960 ஆம் ஆண்டு சூப்பர் பேக்கேஜில் ஷரபா லோகோவுடன் ரிலீசான டிசைன் இன்றும் மாறவில்லை. ஒரு ஆண்டுக்கு 450 டன்கள் தயாரிக்கப்படும் மைசூர் சாண்டல் சோப், இந்தியர்களின் வாழ்வில் மறுக்க முடியாத  அங்கம்.
 
ஜோலா பை

நமக்கு ஜோல்னா பை. இதன் அதிகாரபூர்வ விளம்பரத் தூதர், மோகன்தாஸ் காந்தி. உப்பு சத்தியாகிரகத்துக்காக அகமதாபாத் - தண்டி வரை 23 நாட்கள் 300 கி.மீ வரை நடைப்பயணமாகக் சென்ற  காந்தி   ஜோலாவை  இந்தியாவெங்கும்  பிரபலப்படுத்தினார். எளிய நூல்பையை பத்திரிகை யாளர்கள், இலக்கியவாதிகள், தீவிர சினிமா  இயக்குநர்கள் பின்னாளில் தம் ஆறாம் அறிவின் குறியீடாக மாற்றினர்.
 
சர்க்கா

கிபி 500-1000 காலகட்டத்தில் தோன்றிய நவீன இந்தியாவின் ஐகான். இதன் தூதரும் காந்திதான். மில்கள் தொழிலாளர்களை வஞ்சிக்க, தற்சார்பு பொருளாதாரத்தின் அடையாளமாக  மக்கள் நூற்கத்தொடங்கிய  ராட்டைக்கு 1931  ஆம் ஆண்டு தேசிய அங்கீகாரம்  கிடைத்தது. பின்னர் வெள்ளையர்களுக்கு  எதிரான போராட்டத்தில்  சுயாட்சி லோகோவாக மாறிய பெருமை ராட்டைக்கு உண்டு.