மரணவிளிம்பில் உளவாளி!



மர்மங்களின் தேசம் 57

பிரான்ஸ் நாட்டு வங்கியின் 5 ஆயிரம் பிராங்க் காசோலை  தகவலுடன் இணைக்கப்பட்டிருந்தது. தகவல் பிரான்ஸ் நாட்டு ரகசிய இலாகாவின் கையில் உடனே கிடைத்தாலும்  அவர்கள்  எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை.  1917ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி மாட்டா ஹாரி பாரிஸ் நகருக்கு வந்தாள். மான்டெய்ஜினி எனுமிடத்திலுள்ள ‘பிளாசா அத்தினி’  எனும் சொகுசு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினாள்.

மறுநாள் காலையிலேயே அவள் ஜெர் மனியின் ஏஜெண்ட் எனும் டவுட்டில் போலீசில் அரஸ்டானாள். காரணம்?  ஜெர்மனி கடிதமும் 5000 பிராங்குகளுக்கான காசோலையும்தான்.  ரூமில் செக் செய்தபோது, எழுதினால் மறையக்கூடிய இங்க் புட்டி ஒன்றையும் கைப்பற்றினார்கள்.

அது கர்ப்பத்தடை மருந்து என்பதே ஹாரியின் மாறாத பதில். ஜெர்மனி காசோலை,  அதிகாரிகளுடன் உடலுறவு கொண்டதற்கான சேவைத்தொகை என  சத்தியம்  செய்தாள் ஹாரி.  

தனது வெளிநாட்டுப் பயணங்கள்,  உலகப்போர் சமயங்களில் இரண்டரை வருடங்களில்  தான்  பயணித்த   இடங்கள்  மற்றும்  சந்தித்த  பிரபலங்கள் மற்றும் சில தகவல்ளைஅவள் சொல்லச் சொல்ல, அதிகாரிகள் அமைதியாக  அசைபோட்டுக் கொண்டிருந்தார்கள்.  பிரபல  நாட்டியக்காரி, பிரபலங்களின் அந்தப்புரக் காதலி, காற்று  நுழையாத  இடத்திற்கும்  துணிச்சலாகச்  சென்று வரும்  அழகி செயின்ட் லஜாரே சிறையில் 12ஆம்  நம்பர் அறையில் அடைக்கப்பட்டாள். 

அந்த அறையில் முன்பு பிரான்ஸின் முன்னாள் அதிபர் மற்றும் ஒரு பத்திரிகை  ஆசிரியர்  போன்றவர்களைத்   திட்டமிட்டுக் கொன்ற பெண்  கொலையாளிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.  கொலைகார அறை  என புகழ்பெற்ற செல்லில்தான் மாட்டா ஹாரியும் அடைக்கப்பட்டாள். உளவாளி என்றால் சும்மா  விடுவார்களா?  தினசரி  என்கொயரி. ஒரே கேள்வி. ஹாரி சொன்னதும் ஒரே பதில்தான். ஆனால் விசாரணை அதிகாரிகள் அதை நம்பவேண்டுமே? 

வழக்கு மன்றத்தின் தலைவரும் மற்ற இரு அங்கத்தினர்களும் 1917ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி அவளிடம் தங்கள் பங்குக்கு என்கொயரி நடத்தினார்கள்.  வெளியில்  கூடி இருந்த  மக்கள்  கூட்டம், அவள் நிரபராதி என்றும், அவள் விடுதலை செய்யப்படுவாள் என்றும் ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தது.

ஜெர்மன், இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாட்டு ராணுவ  அதிகாரிகளுடன் பழகியதாகவும் அந்தரங்க உறவுகள் வைத்துக் கொண்டு விஷயங்களை அறிந்து கொண்டு சூப்பரான  சம்பளத்தையும் பெற்ற சாகசப்  பெண் ஹாரி. ஜெர்மன் வெளிநாட்டு அமைச்சரிடம் 30 ஆயிரம் மார்க்கு களும்,  டஜன் காதலர்களிடமும் ஆஃபரில்  பணம்  பெற்றேன் என்பது அவளின் வாக்குமூலத் தகவல். 

பிரான்ஸ் நாட்டிலிருந்து 50 ஆயிரம் மக்கள் வெளியேறியபோது  பயணம் செய்த கப்பல்கள், அவை புறப்படும் நேரம் ஆகியவற்றை ஹாரி சொன்னதால் அக்கப்பல்கள் கடலில், ஜெர்மனின் டார்பிடோக்களால் மூழ்கடிக்கப்பட்டன என்று இன்னொரு குற்றச்சாட்டு. ஆனால் அக்கப்பல்கள் நீரில் மூழ்கியதற்கு  ஆதாரம் எங்கே? 

எவ்வளவோ முயற்சித்தும் அவள் மீதான குற்றங்களுக்கு மைக்ரோ ஆதாரம்  கூட  கண்டறிய முடியவில்லை. ஆனால் நேசநாடுகள், ஜெர்மனியுடனான பகையை முடிவுக்குக் கொண்டுவர  ஏதேனும் ஒரு பலிகடா தேவை  என்பதால், நிரூபணமாகாத பல குற்றங்களை அவள்  மீது  சுமத்தி, மரண தண்டனை பெற்றுக் கொடுத்தார்கள். ஆனால் தூக்கு உடனடியாக கிடைக்கவில்லை.  

‘‘நீ கர்ப்பிணி என்று  சொல்லி  தூக்கிலிடுவதையோ,  இல்லை குண்டுகளினால் துளைக்கப்படுவதையோ தள்ளிப் போட விருப்பமா?’’ என்று அவளது வக்கீல் அனுசரனையாகக் கேட்டார்.  பிரெஞ்சு ஜனாதிபதிக்குக் கொடுத்த கருணை மனு தனக்குச் சாதகமாக இருக்கும் என்று ஹாரி வெகுளியாக நம்பினாள்; அக்டோபர் 15ம் தேதிவரை.

அக்டோபர் 15ஆம் தேதி, அதிகாலையில் சிறை டாக்டர் ஹாரியை எழுப்பினார். எதற்கு? மரண தண்டனை நிறைவேற்றத்தான். ஜனாதி பதிக்கு அவள் கொடுத்த மனு நிராகரிக்கப்பட்டது என்ற தகவலை அறிந்தாலும், ஹாரி அழவில்லை. இனி அழ ஏதுமில்லை என தைரியமாக  மரணத்தை  எதிர்கொள்ள ரெடியானாள்.

(வெளிச்சம் பாய்ச்சுவோம்)

ரா.வேங்கடசாமி