கெவின் ஸ்மித்



பசுமை பேச்சாளர்கள் 40

இங்கிலாந்தைச் சேர்ந்த கெவின் ஸ்மித், நாசா கோடார்ட் இன்ஸ்டிடியூட்டில்  கிளைமேட்  மாடலராக செயல்பட்டு வருகிறார். 2004 ஆம் ஆண்டு  கெவின் தன் நண்பர்களுடன்  இணைந்து  தொடங்கிய  ரியல்கிளைமேட்  இணையதளம், உலகெங்கும்  உடனே பரவலான வரவேற்பைப்  பெற்றது. இணையத்தில்  பருவச்சூழல் பற்றிய  பல்வேறு கற்பிதங்களை உடைத்து உண்மை  பேசிய  துணிச்சல்தான் வெற்றிக்கு முக்கிய காரணம்.

ஆக்ஸ்போர்டிலுள்ள ஜீசஸ் கல்லூரியில் கணக்கு பாடத்தில் இளங்கலையும் யுனிவர்சிட்டி காலேஜ்   லண்டனில்   முதுகலைப் பட்டமும்  வென்றவர், பல்வேறு கடல் சூழலியல் நிறுவனங்களில்  பணியாற்றினார். 2014 ஆம் ஆண்டு நாசாவின் GISS அமைப்பில் தலைவராக நியமிக்கப்பட்டவர், இயக்குநர் ஜேம்ஸ் இ ஹான்சன் பணி மூப்பு பெறும்வரையில் திறம்பட செயல்பட்டு சூழலியல் மாதிரிகளை அமைத்தார்.

இவரின் பேலியோ கிளைமேட் எனும் ஆராய்ச்சி புகழ்பெற்ற ஒன்று. ரியல்கிளைமேட் இணையதளத்தில் சூழலியலாளர்கள் எழுதும் கட்டுரைகளோடு, தனி பத்திரிகையாளர்களின் பங்கேற்பும் அதனை முக்கியமான  தளமாக மாற்றியது. “வெப்பநிலையை  கணிக்கும் விதம் என்பது முன்னர் கணித்த தரவுகளின் அடிப்படையில் நடக்கிறது.  எல்நினோ உள்ளிட்ட காரணங்களால் வெப்ப உயர்வு என்பது 1990களிலிருந்து சீராக  நடைபெற்று வருகிறது” என்கிறார் ஆராய்ச்சியாளர் கெவின்.

இவர் அமெரிக்காவின இயற்கை  வரலாற்று அருங்காட்சி யகம்,  நியூயார்க்கின் அறிவியல் அகாடமி, காலேஜ் டி பிரான்ஸ் ஆகியவற்றில் பணிபுரிந்து அமெரிக்க  புவிஇயற்பியல் சங்க விருது, 2007 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார்  “குறுகியகால மாற்றங்களை வைத்து நீண்டகால மாற்றங்களை யூகம் செய்வது  சரியானதல்ல.  நேற்றை விட  இன்று  வெயில் அதிகம் என்பது போன்ற கணிப்புகள் தவறு” என உறுதியான குரலில் பேசுகிறார்  கெவின்  ஸ்மித். 

உலகின் இயல்பான வெப்ப உயர்வை அதிகரிப்பது,  தொழிற்சாலை உள்ளிட்ட  செயற்கையான தொழிற்சாலை புகை, பொருட்கள்  தயாரிப்பு  உள்ளிட்ட செயல்பாடுகள்  என்பதால் அடுத்த இருபது ஆண்டுகளில் இன்னும் வெப்பம்  உயரும்  என்பது கெவினின் நம்பிக்கை. “ஊடகங்களில் எதிர்பார்ப்பது செய்திக்கான பரபரப்பு தீனியை மட்டுமே; உண்மையை அல்ல. அதற்காகவே  நாங்கள்  இணையதளத்தை உருவாக்கி அரசியலற்ற அறிவியல் பேசி வருகிறோம்”  என்கிறார் கெவின் ஸ்மித்.

ச.அன்பரசு