யார்மன் நூனெஸ்



தலைவன் இவன் ஒருவன் 31

அமெரிக்காவைச் சேர்ந்த யார்மன் நூனெஸ் பதிமூன்று வயதிலிருந்தே  இனக்குழுக்களைத்  திரட்டி கல்வி  சீர்திருத்த முயற்சிகளை மேற்கொண்டு வருபவர். மக்கள் பொருளாதார பலம் பெற பிராங்க்ஸ் மேம்பாட்டுத்  திட்டத்தை வடிவமைத்து  உழைத்து வருகிறார்.

பல்வேறு பயிற்சி முகாம்களின் மூலம் இதனை மக்கள் பரப்புக்கு பிரசாரம் செய்து வருகிறார் யார்மன். “உலகின் மிகப்பெரிய உணவு வழங்கும் மையத்தையும் வணிக வளாகத்தையும் கொண்டிருக்கும் நகர் எங்களுடையது. ஊக்கமும் உற்சாகமுமாக எங்கள் செயல்பாட்டின் வழியே முன்னேறுகிறோம்” என்கிறார் யார்மன்.

தாயின் ஆதரவில்  தன்  பொதுவாழ்வு  செயல்பாட்டைத்  தொடங்கிய  யார்மனுக்கு, மக்களை இணைத்து கல்வி, வீடு ஆகிய உரிமைகளைப் பெறுவதற்கான தீர்வு களைக் காண்பது தொடக்கத்தில் அவ்வளவு  எளிதாக  இல்லை. தன் வீட்டையே இதற்கான ஆபீசாக மாற்றி வேலை செய்து வந்தார் யார்மன். Bronx Cooperative Development Initiative நிகழ்வுகளுக்கான ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் யார்மன், எம்ஐடி இனக்குழு கண்டுபிடிப்பாளர்கள் குழுவில் பணியாற்றி வருகிறார்.

Urban Youth Collaborative  என்ற இயக்கத்தின் இணைநிறுவனராக கல்வி சீர்திருத்தத்தை முன்வைத்து  செயல்பட்டார். பின்னர் நார்த்வெஸ்ட் பிராங்க்ஸ் இனக்குழு(NWBCC) நிகழ்வுகளை ஒருங்கிணைத்து பல்வேறு செயல்பாடுகளை ஊக்கமுடன் செய்த யார்மன், அரசியல் அதிகாரத்தின் மூலம் மக்களை விழிப்புணர்வு கொள்ளச்செய்ய பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.

பிராங்க்ஸ் பகுதியில் வசித்துவருபவர், மக்களின் வறுமையைத் தீர்ப்பதற்கான திட்டங்களை உருவாக்கி வருகிறார். பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளில் மக்களிடையே நிதி திரட்டி அதனை ஆக்கபூர்வ செயல்பாடுகளுக்கு செலவு செய்வது யார்மனின் ஐடியா.

உடல்பருமன், ஆஸ்துமா,  பள்ளி இடைநிற்றல் ஆகிய பிரச்னைகளைக் கொண்ட  நியூயார்க்கிலுள்ள  சிறு  நகரமே பிராங்க்ஸ். வர்த்தக நிறுவனங்கள் அதிகம் கொண்டிருக்கும் ஃபார்தாம் சாலை பிராங்க்ஸ் நகரின் பெருமை சொல்லும். கல்விக்கான மருத்துவமனைகளும், மற்ற பொதுவான கலாசாலைகளும் இருந்தாலும் பிரச்னைகளில் தவிக்கும் மக்களுக்கு யார்மன் சார்ந்த BCDI உள்ளிட்ட இனக்குழு அமைப்புகள் பெற்றுத்தரும்  உதவிகள்  இன்றியமையாதவையாக மாறியுள்ளன.

பகதூர் ராம்ஸி