மக்கள் நீதி மய்யம்



தமிழ் வலம்

கமல்ஹாசன் தனிக்கட்சியின் பெயர் ‘மக்கள் நீதி மய்யம்’. ‘மையம் என்பதுதானே சரி..
மய்யம் என்று எழுதலாமா?

தமிழில் எழுத்துப் போலி என்று ஓர் இலக்கணக் குறிப்பு உள்ளது. அதன்படி, ஒள என்ற உயிர்நெடிலை ‘அவ்’ என்று பிரிக்கலாம். அதுபோலத்தான் மை என்பதை ‘மய்’ என்று  எழுதியிருக்கிறார்கள்  இங்கே.‘மய்’ என்ற எழுத்துகளைத் தொடர்ந்து  ‘ய’  என்ற  யகர  உயிர்மெய் வருவதால் இப்படி எழுது வது சரியே. ஆனால், தனித்து இயங்கும் வல்லின உயிர்மெய் எழுத்துகளான தை என்பதை ‘தய்’ என்றோ, கை என்பதை ‘கய்’ என்றோ எழுதக் கூடாது.

கவிஞர்கள் எதுகை-மோனை, தளை ஆகிய இயல்புக்காக பயன் படுத்துவது  உரைநடைக்கும்  தாவியுள்ளது. ஒளவையார்- ‘அவ்வையார்’, ஐயா-அய்யா  என்றும்  பெரியாரியர்கள்  எழுதுவது நினைவுக்கு வருகிறதா? அது ஓர் அழகிய கிராமம்;  ராமன் என்றோர் மானுடன். இவ்விரண்டு வாக்கியங்களில் எது சரி, எது தவறு? அடுத்த இதழில் விடை.

-வலம் வருவோம்

இளங்கோ